உழவன் செயலியில் வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டம்
தற்போது வேளாண் தொழிலாளர்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவி வருவதால், வேளாண் பெருமக்கள் தங்கள் சாகுபடிப் பணிகளை காலத்தே மேற்கொள்ள இயலாமல் சிரமப்படுகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, வேளாண்மையில் நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பிரபலப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ், டிராக்டர், பவர் டில்லர், ரோட்டோவேட்டர், களையெடுக்கும் கருவி, நெல் நடவு இயந்திரம் போன்ற பல்வேறு வகையான இயந்திரங்கள் மானியத்தில் வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு நடப்பாண்டில் ரூ249 கோடியே 46 இலட்சம் நிதியினை ஒதுக்கி உள்ளது. தனிப்பட்ட விவசாயிகளுக்கு இவ்வகையான 8,150 இயந்திரங்களை வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஆதி திராவிடர், பழங்குடியினர், சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளாக இருந்தால், 50 சதவிகித மானியமும், இதர விவசாயிகளுக்கு 40 சதவிகித மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பல்வேறு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கு அரசால் வழங்கப்படும் அதிகபட்ச மானிய விவரங்கள் உழவன் செயலியில் உள்ள மானிய விவரங்கள் சேவையை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்களைஅமைப்பதற்கு மானிய உதவி
வட்டார அளவில் ரூ.25 இலட்சம் மதிப்பில் வேளாண் இயந்திரங்கள் / கருவிகளைக் கொண்ட வாடகை மையங்கள் அமைத்திட தொழில் முனைவோர், விவசாயிகள், மற்றும் விவசாயக் குழுக்களுக்கு 40 விழுக்காடு (அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரை) மானியம் வழங்கப்படுகிறது.
பண்ணை சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களில் கிராம அளவிலான பண்ணை இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் மையங்களை அமைப்பதற்கு மானிய உதவி
விவசாய குழுக்கள் / உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் /கிராம அடிப்படையில் உள்ள இது போன்ற அமைப்புகள் மூலம் ஒவ்வொன்றும் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் பண்ணை இயந்திர மையங்களை கிராம அளவில் நிறுவிட 80 விழுக்காடு அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.8 இலட்சம் அளவிற்கு மானியம் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 8 உறுப்பினர்களைக் கொண்ட
விவசாய குழுக்களுக்கு பண்ணை இயந்திர மையங்களின் திட்ட மதிப்பீட்டில் 80 விழுக்காடு மானியம் வழங்கப்படும். நீடித்த நிலையான மானாவாரி இயக்கத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கரும்பு சாகுபடிக்கேற்ற வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் நிறுவுதல்.
கரும்பு சாகுபடியின் போது, மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளுக்கான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் தொழில் முனைவோர் மூலம் அமைப்பதற்கு மானியம் வழங்கப்படுகிறது. ரூ.150 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் ஒவ்வொரு மையத்திற்கும் 40 விழுக்காடு மானியம் அதிக பட்சமாக ரூ.60 இலட்சம் வரை மானிய உதவி வழங்கப்படுகிறது.
எனவே, மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பெற விரும்பும் விவசாயிகள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் அமைக்க விரும்புவோர் உழவன் செயலியில் பதிவு செய்து, பயன் பெற்றுக்கொள்ளலாம்.
வேளாண்மை துறை