பயிர் விளைச்சலை அதிகப்படுத்தும் திரவ உயிரி உரங்கள்!: வேளாண் துறையே தயாரித்து விநியோகம்
வேளாண்மைத் துறை மூலம் தயாரிக்கப்படும் திரவ உயிரி உரங்களை விவசாயிகள் பயன்படுத்தி, பயிர் விளைச்சலை அதிகப்படுத்தி லாபமடையலாம்.
விழுப்புரம் மாவட்டம், முகையூர் வட்டாரம், மணம்பூண்டியில், வேளாண்மைத் துறை சார்பில், திரவ உயிரி உர உற்பத்தி மையம் இயங்கி வருகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கி, இயங்கி வரும் இந்த மையத்தில், ஐந்து விதமான திரவ உயிரி உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அவை அசோஸ்பைரில்லம் (நெல்), அசோஸ்பைரில்லம் (இதர பயிர்கள்), ரைசோபியம் (பயறு வகைகள்), ரைசோபியம் (வேர்க்கடலை) மற்றும் பாஸ்போபேக்டீரியா ஆகியவை ஆகும். இந்த திரவ உயிரி உரங்கள், அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படும் வகையிலும் தயார் செய்யப்பட்டு வருகிறது.
விவசாய நிலங்களில், மண்ணின் வளத்தை மேம்படுத்தும், நன்மை தரும் நுண்ணுயிரிகளே இந்த உயிரி உரங்கள் ஆகும். இந்த மையத்தில், ஆண்டுக்கு 50 ஆயிரம் லிட்டர் வரை சராசரியாக உற்பத்தி செய்யப்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக, விவசாயிகளுக்கு திரவ உயிரி உரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
ஊட்டச்சத்தை புதுப்பிக்கும் உரம்: விவசாயிகளுக்கு, ரசாயன உரங்களுக்கு மாற்றாக பயன்படுத்தவும், விலை குறைவாகவும், ஊட்டச்சத்துகளைப் புதுப்பித்தலுக்கான ஆதாரமாகவும் இந்த உயிரி உரங்கள் இருக்கின்றன. திரவ உயிரி உரங்களான ரைசோபியம், அசோஸ்பைரில்லம் தழைச்சத்து பயிர்களுக்கு கிடைக்க உதவுகின்றன. பாஸ்போபேக்டீரியா மணிச்சத்து பயிர்களுக்கு கிடைக்க துணை புரிகிறது.
இந்த உயிரி உரங்களை நெல், பயறு வகைப் பயிர்கள், சிறுதானிய பயிர்கள், எண்ணெய்வித்து பயிர்கள், பருத்தி, கரும்பு மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு பயன்படுத்தலாம். உயிரி உரங்கள் பயிர் வளர்ச்சியையும், விளைச்சலையும் அதிகப்படுத்துவது மட்டுமல்லாமல் மண்ணின் வளத்தையும் காக்கிறது.
திரவ உயிரி உரங்களில், ஒரு மில்லிக்கு 108 என்ற எண்ணிக்கையில் பாக்டீரியாக்கள் கூட்டமைப்பு உருவாக்கும் அலகுகளை கொண்டிருக்கும். பாக்டீரியாவை பிரித்தெடுக்கும் இணை ஒட்ட திரவ வடிப்பான் என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தி, உயிரி உரங்கள் தயாரிக்கப்படுகிறது. திரவ உயிர் உரங்களை 10 மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
திரவ உயிரி உரங்களால் ஏற்படும் நன்மைகள்: 1. திட உயிரி உரங்களை விட, திரவ உயிரி உரங்களில் நுண்ணுயிர்கள் அதிகமாக உள்ளன. 2.அசோஸ்பைரில்லம் காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து, பயிரின் வேர்கள் மூலம் பயிர்களுக்கு சத்தை கிடைக்கச் செய்கிறது. 3. ரைசோபியம் காற்றில் உள்ள தழைச்சத்தை வேர்முடிச்சுகள் மூலம் பயிர்களுக்கு கிடைக்கச் செய்கின்றன.
குறைந்த விலையில்…:
திரவ உயிரி உரங்கள் 250 மில்லி அளவுடையது ரூ.85-க்கும், 500 மில்லி அளவுடையது ரூ.150-க்கும், வேளாண்மை விரிவாக்க மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. அண்டை மாவட்ட விவசாயிகளும் இதை வாங்கி பயன்பெறுகின்றனர். இதனால், விழுப்புரம் மாவட்ட விவசாயிகள், ரசாயன உரங்களை குறைத்து, இயற்கை வழியான உயிரி உரங்கள், அங்கக உரங்களை பயன்படுத்தியும், நுண்ணீர் பாசனத் திட்டம் மூலம் அதிக மகசூல் பெற்று அதிக லாபத்தை பெற வேண்டும் என்று, வேளாண்மை இணை இயக்குநர் எம்.ராமசாமி தெரிவித்தார்.
நன்றிதினமணி
I belong to Kalpakam where I can get these
அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்புகொள்ளவும்