ஜீரோ பட்ஜெட் விவசாயத்தின் சாதக பாதகங்கள் – ஆராய களமிறங்கும் ICAR!
நந்தினி பா
ஜீரோ பட்ஜெட் விவசாயத்தைப் பற்றி முறைப்படி ஆராய்ச்சி செய்து, அறிக்கை சமர்ப்பிக்கவிருக்கிறது இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம்.
விவசாயம்
ஜூலை 5-ம் தேதி, 2019-20 நிதிஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். தேர்தலில் வென்ற பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட் இது. அதில் விவசாயம் குறித்து குறிப்பிடும்போது “ஜீரோ பட்ஜெட் விவசாய முறையைப் பின்பற்ற ஊக்குவிக்க இருக்கிறோம்” எனக் கூறினார்.
”இனி ஜீரோ பட்ஜெட் விவசாயம்தான்!” – அரசு இன்று சொல்வதை அன்றே சொன்னது பசுமை விகடன்
பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர் அவர்களின் வாழ்நாள் முயற்சியால் கர்நாடகா மற்றும் பல மாநிலங்களில் விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு விவசாய முறை இந்த ஜீரோ பட்ஜெட் விவசாயம்.
ஜீரோ பட்ஜெட் என்பது எந்தவித வேதி இடுபொருள்களுக்கும் செலவு செய்யாமல், இயற்கையிலிருந்தே அவற்றை எடுத்து பயன்படுத்தும் விவசாய முறை. பாலேக்கர்க்கு எந்தப் பராமரிப்பும் இல்லாமல் வளரும் காடுகளின் மேல் வந்த ஈர்ப்புதான் ஜீரோ பட்ஜெட் விவசாயத்துக்கு அடித்தளமாக அமைந்தது. இதற்கு மத்திய அரசு தற்போது ஊக்கம் கொடுக்கவிருக்கும் இந்த நிலையில், இதுகுறித்து அறிவியல்பூர்வமாக முழுமையாக ஆய்வு செய்யவிருக்கிறது இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம்.
கால்நடை
நிதி ஆயோக் உறுப்பினர் மற்றும் வேளாண் பொருளாதார வல்லுநருமான ரமேஷ் சந்த் “இன்னும் 2 – 3 மாதங்களில் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தின் மகசூல் விவரம், லாபம் போன்ற முழுமையான விவரங்கள் ஆய்வுசெய்து வெளியிடப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
அரசின் முயற்சிகளுக்கு முன்பாகவே நாடு முழுவதும் பல்வேறு விவசாயிகள் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை முழுவீச்சில் செயல்படுத்தி லாபம் பார்த்துவருகின்றனர். இருந்தாலும், அரசு இதுகுறித்து இதுவரை முழுமையான எந்த ஆய்வும் செய்ததில்லை என்பதால் தெளிவான ஆய்வுமுடிவுகள் எதுவும் அரசிடம் இல்லை. எதிர்காலத்தில் இதைப் பெருமளவில் ஊக்கப்படுத்த திட்டமிட்டிருக்கும் அரசுக்கு இதுபோன்ற அறிவியல் பூர்வமான ஆய்வுமுடிவுகள் மிக அவசியம். அப்போதுதான் இதன் சாதக பாதகங்களை உணர்ந்து திட்டங்களைத் தீட்டமுடியும்.
தமிழ்நாட்டில் பல பயிர்கள் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் வெற்றிகரமாகப் பயிரிடப்பட்டுள்ளன. பெரும்பாலான விவசாயிகள் இதில் நல்ல லாபமும் பார்த்துவருகின்றனர். “இயற்கையாகக் கிடைக்கும் உரங்களை மீண்டும் மண்ணிலேயே செலவிடுவதால் மண்வளம் பெருகும்; தேவையற்ற வேதி உரங்களின் பயன்பாடும் குறையும். முழு இயற்கைவழி விவசாயம் என்பதால் நல்ல லாபமும் பெறலாம்” என்கின்றனர் ஜீரோ பட்ஜெட் விவசாயிகள்.
நன்றிவிகடன்