காரீப் பருவ பயிர்களுக்கு காப்பீடு: வேளாண்துறை அறிவிப்பு
உடுமலை, குடிமங்கலம் வட்டார விவசாயிகள், பயிர்களுக்கு உரிய காலத்தில் காப்பீடு செய்து கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான, காப்பீட்டு திட்டத்தில், பயிர்களுக்கான காப்பீடு தொகை செலுத்தலாம்.
காரீப் பருவத்தில் மக்காச்சோளம், உளுந்து, பச்சைப்பயறு, பருத்தி, நிலக்கடலை, சோளம், எள்ளு, ஆகிய வேளாண் பயிர்களுக்கு, வரும் செப்.,15 வரையிலும், வாழை , மா, வெங்காயம், மரவள்ளி, தக்காளி, மஞ்சள் ஆகிய தோட்டக்கலை பயிர்களுக்கு, செப்.,30 வரையிலும் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய இறுதி நாளாகும்.தோட்டகலைப் பயிர்கள் மற்றும் பருத்திக்கு பயிர் காப்பீட்டுத் தொகையில், 5 சதவீதம் பிரீமியம் தொகையும், இதர வேளாண்மை பயிர்களுக்கு 2 சதவீதம் பிரீமியம் தொகையும் செலுத்த வேண்டும்.ஒரு எக்டர் மக்காச்சோளம் பயிருக்கு, ஆயிரத்து 319 ரூபாயும், பயறு வகைப்பயிர்களுக்கு, 778 ரூபாயும், நிலக்கடலைக்கு, ஆயிரத்து 359 ரூபாயும், சோளம் பயிருக்கு, எக்டேருக்கு, 511 ரூபாயும், பருத்திக்கு, 3 ஆயிரத்து 186 ரூபாயும், எள்ளுக்கு, 615 ரூபாயும், தக்காளிக்கு, 3 ஆயிரத்து 335 ரூபாயும், வெங்காயத்திற்கு, 4 ஆயிரத்து 742 ரூபாயும், மஞ்சளுக்கு, 9 ஆயிரத்து 102 ரூபாயும், வாழைக்கு, 10 ஆயிரத்து 53 ரூபாயும், மரவள்ளி கிழக்குக்கு, 3 ஆயிரத்து 730 ரூபாயும், மா சாகுபடிக்கு, 2 ஆயிரத்து 532 ரூபாயும் பிரீமியமாக செலுத்த வேண்டும்.
பயிர்களுக்கு காப்பீடு செய்ய, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, நடப்பில் உள்ள சேமிப்பு வங்கி கணக்கு புத்தக நகல் , ஆதார் அட்டை நகல், பட்டா, அடங்கல், விதைப்புச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக, பயிர்களுக்கு உரிய பிரீமியம் தொகை செலுத்தி பயிர் காப்பீடு ரசீது பெற்றுக்கொள்ளலாம்.
இடர்பாடு ஏற்படும் காலங்களில், உரிய காப்பீட்டு தொகை பெற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண்மை துறை அலுவலர்கள், தோட்டக்கலைத்துறை அலுவலர்களை கொள்ளலாம்.மேலும், பயிர் காப்பீட்டு விவரங்களை, மொபைல் போனில், உழவன் செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம், என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நன்றி தினமலர்