உப்புசம்… கவனம்
கால்நடைகளின் வயிறு உப்புசமானது, அவற்றின் வயிற்றில் ஏற்படும் அதிக அழுத்தமுள்ள வாயு தேங்குவதாகும். இதனை உடனடியாக கவனிக்காமல் விட்டால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கால்நடைகள் இறக்கவும் வாய்ப்புள்ளது.
வயிறு உப்புசம் ஏற்பட காரணங்கள்: சில வகை இலை தழைகளை உண்பதால் அவை வாயுவை அதிகளவில் உண்டாக்குகின்றன. வெங்காயம், கேரட், முட்டைக்கோஸ், டர்னிப் போன்ற தாவரங்கள் உப்புசம் ஏற்பட காரணமாகின்றன.
அளவுக்கதிகமாக நன்றாக பொடி செய்யப்பட்ட அடர் தீவனங்களையும், குறைந்த அளவு பசுந் தீவனங்களை உட்கொள்ளுதல். அதிகளவு தழைச்சத்து உரமிடப்பட்ட பசுந்தழையை சாப்பிடுதல். வாயில் உமிழ் நீர் குறைவாக சுரக்காத காரணத்தால், மியூசின் எனப்படும் சுரப்பு நீர் கிடைக்காது.
இதனால் கால்நடைகள் உட்கொள்ளும் தீவனத்தில் வாயுவுடன் கூடிய நுரை பெருமளவில் உண்டாகிறது. இந்த நுரை உப்புசத்தை உண்டு பண்ணுகிறது. வயிற்று அறையை சுற்றியுள்ள வேகஸ் நரம்புகளின் வேலைத்திறன் குறைவதால் வாயு வெளியேற்றும் தன்மை குறைந்து வயிறு உப்புசம் ஏற்படுகிறது.
ஒவ்வாமை எனும் அலர்ஜியாலும் உப்புசம் ஏற்படும். இதனால் வாய்வு அதிகம் ஏற்பட்டு வயிற்று வலியால் கால்நடைகள் பின்னங்கால்களை உதைத்து கொள்ளும். முடிவில் அழுத்தம் அதிமாகும் போது நுரையீரல் செயல்பட முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கால்நடைகள் இறக்கும்.
முதலுதவி என்ன
20 மி.லி., கற்பூரத் தைலத்துடன் 400 மி.லி., கடலை எண்ணெய் கலந்து கொடுக்கலாம். அல்லது 15 கிராம் பெருங்காயத்தை அரை லிட்டர் வெதுவெதுப்பான தண்ணீரில் கரைத்து தர வேண்டும். அல்லது 200 கிராம் சோடியம் பைக்கார்பனேட்டை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து கொடுக்கலாம் அல்லது 500 மி.லி., கடலை எண்ணெய் மட்டும் புகட்டினால் போதும். மேலும் நுண்ணுயிர்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த ஆரியோமைசின், டெராமைசின் மருந்துகளை கொடுக்க வேண்டும். முடிவாக கால்நடைகளின் நிலைமை மோசமாகும் வரை காத்திருக்காமல் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். தொடர்புக்கு 94864 69044.
– டாக்டர். வி.ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்புத்துறை..
நன்றிதினமலர்