அசோலா கால்நடை தீவனம்: உற்பத்தியும், பயன்களும்
பால் உற்பத்தியில் நமது நாடு உலகளவில் முதலிடம் வகித்தாலும், கறவை மாடுகளின் உற்பத்தித்திறன் குறைவாகவே உள்ளது. உதாரணமாக, மேலை நாட்டுக் கறவை மாடு ஒன்றிலிருந்து பெறப்படும் பாலின் அளவு நம் நாட்டு மூன்று கறவை மாடுகள் கறக்கும் பால் அளவுக்கு ஈடாகிறது.
நமது மாடுகளின் பால் உற்பத்தித் திறன் குறைவாக உள்ளதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், தீவனப் பற்றாக்குறை மற்றும் சமச்சீர் தீவனம் அளிக்காததே முக்கியக் காரணமாகும்.
பால் உற்பத்தியில் 70 சதவீதம் தீவனத்திற்கே செலவாகிறது. குறைந்த செலவில் சமச்சீர் தீவனம் அளிக்க வேண்டிய வழிமுறைகளை ஆராயும் நிலையில் விவசாயிகள் உள்ளனர். அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அசோலா கால்நடை தீவனம் உள்ளது.
அசோலா என்பது பாசி வகையைச் சார்ந்த உயிரினமாகும். அசோலாவை கறவை மாடுகளுக்கு மட்டுமின்றி மற்ற கால்நடைகளுக்கும், கோழிகளுக்கும் அளிக்கலாம். இதற்கான உற்பத்திச் செலவு குறைவு தான்.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள வேளாண் அறிவியல் மைய உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் மு. புனிதவதி கூறியது:
அசோலாவை கால்நடைதீவனமாக பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்:
25 முதல் 30 விழுக்காடு வரை புரதச்சத்தும், கால்நடைகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் மற்றும் பீட்டாக்கரோட்டின் ஆகிய சத்துகள் உள்ளன. வைட்டமின் ஏ சத்து உள்ளதால் அசோலா சாப்பிட்ட கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. அசோலாவை கால்நடைகளுக்குத் தீவனமாக அளிப்பதால் 5 லிட்டர் பால் கறக்கும் மாடு 6 லிட்டர் வரை உற்பத்தியை அதிகரிக்கிறது.
பாலின் கொழுப்புச்சத்து 10 சதவீதம் வரையும், கொழுப்பு அல்லாத திடப்பொருள்கள் 3 சதவீதமும் உயருகிறது. பாலின் தரம் பராமரிக்கப்படுகிறது. ஒரு கிலோ அசோலாவை தீவனமாக கறவை மாடுகளுக்கு கொடுத்தால், ஒரு கிலோ பிண்ணாக்கு கொடுப்பதற்குச் சமம். ஒரு கிலோ பிண்ணாக்கு ரூ. 40 முதல் ரூ. 45 வரை விற்பனையாகிறது. ஆனால் ஒரு கிலோ அசோலா உற்பத்தி செய்ய ரூ. 1 மட்டும் செலவாகிறது.
அசோலா கால்நடை தீவன உற்பத்தி:
அசோலாவை வளர்க்க நிழல்பாங்கான இடத்தைத் தேர்வு செய்து, அதில் 10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழம் கொண்ட குழி அமைக்க வேண்டும். இப்பாத்தியினுள் களைச்செடிகள் வளர்வதைத் தடுக்க யூரியா சாக்கைப் பரப்பி, அதன் மேல் சில்பாலின் ஷீட்டை ஒரே சீராக மேடு பள்ளம் இல்லாமல் விரிக்க வேண்டும். பின்னர், குழியைச் சுற்றி செங்கற்களை வரிசையாக நீளவாக்கில் அடுக்கி வைக்க வேண்டும்.
சில்பாலின் ஷீட்டின் மேல் 2 செ.மீ. அளவுக்கு மண்ணிட்டு சமன் செய்து, அதன் மேல் 2 செ.மீ. அளவுக்கு தண்ணீர் ஊற்றவும்.
பின்னர் பாத்தி ஒன்றுக்கு 100 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 5 கிலோ பசுஞ்சாணம் கரைத்து விட வேண்டும். இப்பாத்தியில் 5 கிலோ அசோலா தாய்வித்து தூவ வேண்டும். பாத்தியிலுள்ள மண்ணை தினமும் காலை, மாலை கலக்குவதால், மண்ணிலுள்ள சத்துகள் தண்ணீரில் கரைந்து அசோலா வளர்ச்சிக்குப் பயன்படுகிறது. ஒரு பாத்தியில் 15 நாள்களில் 30 முதல் 40 கிலோ அசோலா உற்பத்தியாகிவிடும்.
அசோலாவை அறுவடை செய்யும்போது மூன்றில் இரண்டு பங்கை அறுவடை செய்துவிட்டு, ஒரு பங்கை பாத்தியிலேயே விட்டுவிட வேண்டும். பாத்தி ஒன்றுக்கு 10 நாள்களுக்கு ஒரு முறை 5 கிலோ பசுஞ்சாணம் கரைத்து விடுவது நல்லது. அசோலா உற்பத்தி கோடைக் காலங்களில் குறைந்தும், குளிர்காலத்தில் அதிகரித்தும் காணப்படும். அதாவது, அசோலா 25 முதல் 30 சென்டிகிரேட் வெப்பநிலை உள்ள இடத்தில் நன்றாக செழித்து வளரும். சூரிய ஒளி நேரடியாக அசோகா பாத்திகளில் விழாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகளவு சூரிய ஒளி படும்போது, அசோலா பழுப்பு நிறமாக மாறிவிடும். அசோலா தாய்வித்தைத் தவிர அனைத்து இடுபொருள்களையும் 6 மாதத்துக்கு ஒரு முறை சரியானஅளவுகளில் இட வேண்டும்.
பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு:
அசோலாவை கால்நடைகளுக்கு தீவனமாக வழங்க உற்பத்தி செய்யும்போது எந்தவிதமான பூச்சி, பூஞ்சாணக் கொல்லியை உபயோகப்படுத்தக் கூடாது. பாத்திகளில் அசோலாவின் அடர்த்தி அதிகமானால் பூச்சி மற்றும் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதைத் தடுக்க அசோலாப் பாத்தியின் இருபுறமும் காற்று அதிகமா புகாதவாறு தடுப்புகள் அமைக்க வேண்டும். பொதுவாக பூச்சித் தொல்லை வந்தால் 5 மி.லி. வேப்பெண்ணையை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து அசோலா பாத்தியில் தெளிக்க வேண்டும்.
அசோலா கால்நடைத் தீவனமாக மட்டுமல்லாமல், நெல் வயலில் ஊடுபயிராகவும் பயிரிடுவதால் உயிர் உரமாகவும் பயன்படுத்தலாம்.
நன்றி தினமணி