பழைய மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்காதது ஏன்?
இருப்பு வைக்கப்பட்டுள்ள மஞ்சளைப் பாதுகாக்க வைக்கப்பட்ட மருந்து காரணமாக மஞ்சளில் ரசாயனத் தன்மை அதிகரித்து வருவதால், பழைய மஞ்சளுக்கு நிகழாண்டில் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். அதேநேரத்தில், கர்நாடகத்தில் இருந்து மஞ்சள் வரத்து அதிகரிப்பின் காரணமாகவே பழைய மஞ்சளுக்கு சரியான விலை கிடைக்கவில்லை என மஞ்சள் வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் முதல் 2.50 லட்சம் ஏக்கர் அளவுக்கு மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் சுமார் 75,000 ஏக்கர் ஈரோடு மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. பவானிசாகர் அணையின் மூலம் பாசனம் பெறும் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, கீழ்பவானி, காலிங்கராயன் ஆகிய நான்கு பாசன வாய்க்கால்கள் உள்ளன. இதில் காலிங்கராயன் வாய்க்காலில்தான் மஞ்சள் சாகுபடி பரப்பு அதிகம்.
கடந்த சில ஆண்டுகளாக மஞ்சள் சாகுபடி குறைந்திருந்த நிலையில் 2018ஆம் ஆண்டில் பவானிசாகர் அணை நிரம்பியதால், 3 ஆண்டுகளுக்கு பிறகு வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் மாவட்டத்தில் சுமார் 50,000 ஏக்கர் அளவுக்கு மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளாகத் தொடரும் மஞ்சள் இருப்பு வைப்பு
2009, 2010 ஆண்டுகளில் மஞ்சள் விலை குவிண்டால் ரூ.18,000 வரை விற்கப்பட்டதால் கடந்த 8 ஆண்டுகளாக மஞ்சள் இருப்பு வைப்பது மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு வரை தமிழகம் முழுவதும் 20 லட்சம் மஞ்சள் மூட்டைகள் வரை இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மஞ்சள் விவசாயிகள் கூறுகின்றனர்.
வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் மஞ்சள் அறுவடை துவங்கி, புதிய மஞ்சள் விற்பனைக்கு வரும். அதே சமயத்தில் பழைய மஞ்சளும் விற்பனைக்கு வரும். நிகழாண்டில் புதிய மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.6,000 முதல் ரூ.7,500 வரை விற்பனையாகும் நிலையில், பழைய மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.4,500 முதல் ரூ.6,000 வரை மட்டுமே விற்பனையாகிறது.
2011ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை இருப்பு வைக்கப்பட்ட 20 லட்சம் மூட்டைகளில் இன்னும் 10 லட்சம் மூட்டைகள் விற்கப்படாமல் உள்ளன. இதில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 5 லட்சம் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
விலை குறைய ரசாயனப் பயன்பாடு காரணமா?
நிகழாண்டில் பழைய மஞ்சளுக்கு விலை கிடைக்காமல் போனதற்கு காரணம் இருப்பு வைக்கப்படும் மஞ்சளில் வண்டு தாக்குதலைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் என்செல்பாஸ் என்ற வேதிப்பொருளே காரணம் என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலர் செ.நல்லசாமி.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
மஞ்சள் விலை குறையும்போது அதனை இருப்பு வைத்து விற்பனை செய்வது வழக்கமானது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலத்தில் பள்ளம் தோண்டி மஞ்சளை அதனுள் கொட்டி பாதுகாத்துவைக்கப்பட்டது. ஆனால் இப்போது மஞ்சள் மூட்டைகளை கிடங்குகளில் அடுக்கிவைத்து, வண்டு தாக்குதலில் இருந்து பாதுகாக்க மூட்டைகளில் செல்பாஸ் என்ற மருந்து வைக்கப்படுகிறது. இதனால் மஞ்சள் ரசாயனத்தன்மை அடைந்து விடுகிறது. இதனால்தான் பழைய மஞ்சள் விலை குறைந்து விடுகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக வறட்சி காரணமாக மஞ்சள் சாகுபடி 10 சதவீதம் அளவுக்கு குறைந்துபோனதால் புதிய மஞ்சள் வரத்து இல்லை. இதனால் பழைய மஞ்சளுக்கு விலை கிடைத்தது. ஆனால் நிகழாண்டில் புதிய மஞ்சள் வரத்து உள்ளதால், பழைய மஞ்சள் விலை குறைந்துவிட்டது. இதற்கு காரணம் சுத்தமான மஞ்சள் வேண்டும் என கருதுபவர்கள் புதிய மஞ்சளை விரும்புவதுதான். அதே சமயத்தில் புதிய மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.10,000 வரை விலை கிடைத்தால்தான் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாது. மகசூல் அதிகரிக்கவில்லையெனில் இப்போது விற்கும் விலை என்பது விவசாயிகளுக்கு நஷ்டத்தைதான் ஏற்படுத்தும். ஏக்கருக்கு 22 குவிண்டால் வரை மகசூல் கிடைக்க வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என்பதால் மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஆனால் ஈரோடு தவிர பிற மாவட்டங்களில் தண்ணீர்த் தட்டுப்பாட்டல் மஞ்சள் அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். 50 சதவீதம் மஞ்சள் பயிர் வறட்சியால் காய்ந்துவிட்டது என்றார்.
ரசாயனக் கலப்பு இல்லை
மஞ்சள் வணிகர் சங்க செயலர் எம்.சத்தியமூர்த்தி தெரிவித்ததாவது: தமிழகத்தின் மஞ்சள் சந்தையாக ஈரோடு மஞ்சள் சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து மஞ்சள் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கர்நாடக விவசாயிகள், ஈரோட்டுக்கு மஞ்சள் கொண்டு வராமல் அங்கேயே விற்பனை செய்தனர். அங்கு விற்பனை செய்த மஞ்சளுக்கு சரியாகப் பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக நடப்பு ஆண்டில் கர்நாடகத்தில் இருந்து மஞ்சள் வரத்து அதிகரித்து விட்டது.
அதேபோல், மஞ்சள் வரத்து அதிகரித்த நிலையில், விற்பனை குறைவாக உள்ளது. இதன் காரணமாக பழைய மஞ்சளுக்கு சரியான விலை கிடைக்கவில்லை. ஆனால், புதிய மஞ்சளுக்கு குவிண்டாலுக்கு ரூ.6,000 முதல் ரூ.7,500 வரை விலை கிடைக்கிறது.
தமிழக அளவில் 10 லட்சம் மூட்டை பழைய மஞ்சள் கிடங்குகளில் இருப்பு உள்ளன. இதில் ஈரோட்டில் மட்டும் ரூ.50 கோடி மதிப்பிலான ரூ.5 லட்சம் மூட்டைகள் இருப்பு உள்ளன.
ஈரோடு உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மஞ்சள் வரத்து தொடங்கியுள்ளது. புதிய மஞ்சள் வரத்து மே மாதம் வரை இருக்கும். அதுவரை பழைய மஞ்சளுக்கு எதிர்பார்க்கும் அளவுக்கு விலை இருக்காது. கிடங்குகளில் மஞ்சளைப் பாதுகாக்க மத்திய அரசால் பரிந்துரைத்துள்ள அலுமினியம் பாஸ்பேட் என்ற வேதிப்பொருள்தான் பயன்படுத்தப்படுகிறது. இதனால் மஞ்சளில் ரசாயனக் கலப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றார்.
நன்றி தினமணி