இயற்கை பயிர் ஊக்கிகள்
தமிழக விவசாயிகள் பலர் இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். செயற்கை உர பயன்பாட்டினை குறைத்து வருகின்றனர். பல வகை திட, திரவ பயிர் ஊக்கிகளை தயாரித்து பயன்படுத்துகின்றனர். பயிர் ஊக்கிகளை வளர்ச்சி ஊக்கி என்று கூட சொல்லலாம். பயிர் ஊக்கிகளை பயிர் மேல் தெளிக்கும் போது, அது பயிரின் வளர்ச்சியை துாண்டிப் பயிரை நன்கு வளரச் செய்கிறது. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் வளர்ச்சி ஊக்கியை பயன்படுத்தி அமோக விளைச்சல் பெற்றுள்ளனர். இதன் பயன்பாட்டை அறிந்ததால் வளர்ச்சி ஊக்கியை அதிகம் பயன்படுத்தி பன் மடங்கு விளைச்சலை அதிகரித்துள்ளனர். நம் நாட்டிலும் முன்னோடி விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இளநீர்: இளநீர் ஒரு நல்ல பயிர் ஊக்கி. ஒரு லிட்டர் நீருக்கு 20 மில்லி என்ற அளவில் இளநீரை கலந்து பயிரின் மீது தெளித்தால் நெற் பயிர் நன்றாக துார் கட்டும். நெல் படையாய் இருக்கும் போதும், கதிர் வெளிவந்த பிறகும், இதே அளவு தெளித்தால் நெல் மணிகள் நெருக்கமாகவும், திரட்சியாகவும் இருக்கும். இளநீரில் தாது உப்புக்கள் உள்ளன. சைட்டோகைனின் என்னும் வளர்ச்சி ஊக்கியும் உள்ளது. இது அருமையான வளர்ச்சி ஊக்கி ஆகும்.
தேங்காய் மோர் கரைசல்: தேங்காய் மோர் கலந்த கரைசலை ‘தேமோர் கரைசல்’ என்பர். இதை தயார் செய்ய நன்கு புளித்த மோர் 5 லிட்டரும், தேங்காய் 10 தேவை. தேங்காய்களை உடைத்து துருவி கொள்ள வேண்டும். துருவலுடன் நீர் சேர்த்து நன்கு ஆட்ட வேண்டும். நீருடன் உடைத்த தேங்காய் நீரையும் சேர்த்து கொள்ளலாம். துருவல் ஆட்டி எடுக்கும் போது 5 லிட்டர் வரை வர வேண்டும். அந்த அளவுக்கு நீர் சேர்க்கலாம்.
மோரையும், இதனையும் நன்கு கலக்க வேண்டும். 7 நாட்களில் இது நன்கு நொதித்து விடும். பின்பு இதனை வைத்து ஒரு லிட்டர் கலவைக்கு பத்து லிடடர் நீர் கலந்து தெளிக்கலாம். இலைகள் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். எல்லாப் பயிர்களுக்கும் தெளிக்கலாம். இதனால் பயிர் நன்கு வளருவதுடன், பூச்சிகளையும் விரட்டுகிறது. பூசண நோய்க்கு எதிர்ப்பு சக்தியாகவும் விளங்குகிறது. காய்கறி, எள், பயறு வகை ஆகியவற்றுக்கும் தெளித்தால் அதிக பூக்கள் தோன்றி மகசூ்ல் அதிகரிக்கும்.
அரப்பு மோர்க்கரைசல்: இதுவும் நல்ல வளர்ச்சி ஊக்கி. இரண்டு கிலோ அரப்பு இலை எடுத்து தேவையான நீர் சேர்த்து ஆட்டுக்கல்லில் இட்டு நன்கு ஆட்ட வேண்டும். இப்படி ஆட்டி ஐந்து லிட்டர் கரைசல் எடுக்க வேண்டும். இந்த கரைசலுடன் 5 லிட்டர் நன்கு புளித்த மோரை சேர்த்து கொள்ள வேண்டும். 7 நாட்களில் இந்தக்கலவை நன்கு புளித்து விடும். பின் இக்கரைசலை ஒரு லிட்டர் எடுத்து 10 லிட்டர் நீருடன் சேர்த்து இலைமேல் தெளிக்கலாம். இது நல்ல விளைச்சலை தரும். இது அருமையான வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி விரட்டியாகவும் செயல்பட்டு வருகிறது.
மின் அமினோ அமிலம்: ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் இதனை பயன்படுத்தி விவசாயிகள் நல்ல மகசூல் பெறுகின்றனர். 1 கிலோ நாட்டு வெல்லம், 1 கிலோ மீன் கழிவுகள் கொண்டு இந்த கரைசலை தயாரிக்கலாம். பிளாஸ்டிக் புட்டி அல்லது கண்ணாடி குவளையில் இவற்றை போட்டு மூடி விட வேண்டும். மூடுவதற்கு முன் நல்ல குச்சியால் இரண்டையும் நன்கு கலக்க செய்ய வேண்டும். நீர் சேர்க்கத்தேவை இல்லை. பின் காற்று புகாதபடி நன்றாக மூட வேண்டும். 22 நாட்களில் நன்கு நொதித்து தேன் பாகு போல் காணப்படும். இதனை வடிகட்டி சாற்றை எடுக்க வேண்டும். இந்த கலவையை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். இதன் மூலம் நல்ல தழைச்சத்து கிடைக்கிறது. பயிரும் செழித்து வளரும். இதை தயாரிக்க செலவு குறைவு.
கடல் பாசி திரவம்: கட்டக்கோரை எனப்படும் கடற்பாசியில் உரம் தயாரிக்கலாம். இதில் நுண்ணுாட்டச் சத்துக்கள் அதிகம். கடலில் கரைக்கு அருகில் உள்ள பாறைகளிலிருந்து இதை சேகரிக்க முடியும். இதை சேகரித்து விற்பவர்களும் உள்ளனர். இந்த திரவ உரம் தயாரிக்க 10 கிலோ கடற்பாசியை எடுத்து கொண்டு அத்துடன் 10 லிட்டர் நீரை சேர்த்து பிரசர் குக்கரில் இரண்டு மணி நேரம் காய்ச்ச வேண்டும்.
பின் வடிகட்டி கடற்பாசி திரவத்தை சேகரிக்க வேண்டும். 10 லிட்டர் கடற்பாசி திரவத்தை 100 லிட்டர் தணணீரில் கலக்கி இலைகளின் மேல் தெளிக்க வேண்டும். எல்லா பயிர்களுக்கும் தெளிக்கலாம்.
பயிரின் வளர்ச்சியை பொறுத்து தேவைக்கு ஏற்ப இரண்டு மூன்று முறை தெளிக்க வேண்டும்.
தொடர்புக்கு www.tnau.ac.in
நன்றி தினமலர்