மண்ணுக்கு உயிர் இருக்கிறது. இதைப் பற்றி நாம் என்றைக்காவது சிந்தித்து இருக்கிறோமா? தன்னுள் வந்து விழும் அனைத்தையும் மக்க வைக்கும் மண், விதையை மட்டும் எப்படி முளைக்க வைக்கிறது? ஊசி முனையளவு உள்ள விதையிலிருந்து மாபெரும் ஆலமரத்தை உருவாக்கும் வித்தையை மண்ணைத் தவிர யாராலும் செய்ய முடியாது. ஆனால், மனிதர்கள் மண்ணை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. அந்த மண்ணுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்தாலே இதை உணர்ந்துகொள்ள முடியும்.
இவன் என்னடா மண்ணு மாதிரி இருக்கான்’, உன் மண்டையில களிமண்தான் இருக்கு’ என சக மனிதர்களை ஏசுவதற்கு மண்ணை வம்புக்கு இழுக்கிறோம். ஆனால், மண்ணுக்குள் எத்தனை அறிவியல் புதைந்து கிடக்கிறது தெரியுமா? ஒரு கைப்பிடி மண்ணுக்குள் கோடிக்கணக்கான உயிர் பொருள்கள் இயங்கி வருகின்றன. ஒரு ஹெக்டேர் நிலத்திலுள்ள மேல் மண்ணில், 17 வகையான பூச்சிகள், 600 வகையான புழுக்கள், 1,500 வகையான பாக்டீரியாக்கள், 3,500 வகையான பூஞ்சைகள் இருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது அறிவியல்.
மண்,உலகுக்கு இயற்கை கொடுத்த அருட்கொடை. இப்பூவுலகில் நடக்கும் பெரும்பாலான மாற்றங்களுக்கு அடிப்படையாக இருப்பது மண்தான். மண் என்றால் காலுக்குக் கீழே கிடக்கும் தூசு என்பதுதான் பொதுப்புத்தி. ஆனால், அந்த மண்ணில் சின்ன மாற்றம் நடந்தாலும் உலகம் பெரும் துயரத்தைச் சந்திக்கும் என்பதை அவ்வப்போது மறந்து போகிறோம். விவசாயிகளைப் பொறுத்தவரை, மண் பயிர் வளர்வதற்கான ஓர் ஊடகம், அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, மண் பணத்தைக் கொட்டும் அமுதசுரபி. விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, மண் ஓர் ஆய்வுக்கூடம். இப்படி மண்ணை அவரவர்கள் வசதிக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்கிறோம். ஆனால், உயிருள்ள மண், கடந்த சில ஆண்டுகளாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் கிடப்பதைப் பற்றி யாருக்கும் அக்கறையில்லை.
பயிர் வளர வேண்டும். அதிக மகசூல் வேண்டும் என்ற உழவனின் எண்ணம் சரிதான். ஆனால், அதற்காகப் பொன் முட்டையிடும் வாத்தை அறுக்கலாமா? கடந்த 50 ஆண்டுகளாக நம் மண்ணின் மீது அதிக யுத்தம் நடத்தி வருபவர்கள் விவசாயிகள்தாம். ரசாயனம் என்ற பெயரில் மண்ணின் உயிர் தன்மையைச் சிதைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கு அவர்கள் மட்டுமே காரணமல்ல; அவர்களை அப்படிச் செய்யத்தூண்டிய பொய்யான பரப்புரைகள்தாம் காரணம். நாம் உண்ணும் உணவில் உப்பின் அளவு கூடினால் என்னவாகும்? அந்த உணவை வாயில் வைக்க முடியாதல்லவா? மண்ணும் அப்படித்தானே? அதன் மீது மூட்டை மூட்டையாக உப்பைக் (யூரியா) கொட்டும் போது மண்ணும் கரிக்கத்தானே செய்யும். மண்ணில் உள்ள உப்பு, மின்னாற்றலைக் கடத்தும் திறனை வைத்துத்தான் மண்ணின் வளத்தைத் தீர்மானிக்கிறார்கள். ஒரு டெசிசைமன் / மீட்டருக்குக் குறைவாக மின் ஆற்றலைக் கடத்தினால் அது வளமான மண். ஒன்று முதல் மூன்று டெசிசைமன் / மீட்டர் கடத்தினால் அது பரவாயில்லை ரகம். மூன்று டெசிசைமன் / மீட்டருக்கு அதிகமாகக் கடத்தினால் அது வளமில்லாத மண். அதில் சரியான மகசூல் கிடைக்காது. இந்த அறிவியலை விவசாயிகளுக்குத் தெளிவாகப் புரியவைக்கத் தவறிவிட்டார்கள் நம் வேளாண் விஞ்ஞானிகள். விளைவு, பொன் விளைந்த பூமியெல்லாம் புண்ணாகிக் கிடக்கிறது.
நிலத்தில் அதிகப்படியாகச் சேர்ந்து விட்ட உப்பைச் சமன்செய்ய அங்கக உரங்களால் மட்டுமே முடியும் என்பதை உலகமே ஒப்புக்கொண்டுள்ளது. அதனால்தான் பெரும்பாலான நாடுகள் இயற்கை விவசாயத்தைக் கைக்கொண்டுள்ளன. மண் வளத்தை விட, நோயுற்றுக் கிடக்கும் மண்ணின் நலனே முக்கியம் என்ற எண்ணம் சர்வதேச சமூகத்துக்கு வந்திருக்கிறது. அதனால்தான் தற்போது அங்கக இடுபொருள்கள், நுண்ணூட்டச் சத்துகள் என விவசாயிகளுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மண் நலத்தைக் காக்க வேண்டும் என்ற நோக்கில், ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 5-ம் தேதியைத் தேசிய மண் வள நாளாக அறிவித்துள்ளது மத்திய அரசு. 2015-ம் ஆண்டு முதல், டிசம்பர் 5 மண்வள தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மண் நலனைப் பற்றிச் சிந்திக்கும், இந்நாளில் இருந்தாவது மண்ணின் வளத்தை, நலத்தைக் காப்போம் என்ற உறுதியை ஏற்போம். அதன் முதல்படியாக ரசாயனங்களை மண்மீது கொட்டுவதை தவிர்ப்போம்.
ஆர்.குமரேசன் நன்றிவிகடன்