புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிரைப் பாதுகாக்கும் வழிமுறைகள்: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்
நீடாமங்கலம்:புயலினால் பாதிக்கப்பட்ட நெற்பயிரைப் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் முனைவர் ராஜா.ரமேஷ், முனைவர் ஆ.பாஸ்கரன் ஆகியோர் விளக்கமளித்துள்ளனர்.
இதுதொடர்பாக, அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காவிரி பாசனப் பகுதியில் வீசிய கஜா புயலின் போது பெய்த மழையின் காரணமாக பள்ளக்கால் பகுதிகளில் நீர் தேங்கி சம்பா, தாளடி பருவங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பல்வேறு நிலையில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி ஊட்டச்சத்து, பூச்சி மற்றும் நோய்களால் பாதிப்பு ஏற்படவாய்ப்புள்ளது. அவ்வாறு பாதிக்கப்படும் நெற்பயிர்களைக் காக்க கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
நெற்பயிர் தண்ணீரில் மூழ்குவதால் உண்டாகும் பாதிப்புகள்
தண்ணீர் தேங்கிய நிலையில் பிராணவாயு கிடைக்காமல் வேர்களின் சுவாச இயக்கம் பாதிக்கப்படும்.
பயிருக்கு சரிவர பிராணவாயு கிடைக்காமல் போவதால் அதனைச் சார்ந்த நுண்ணுயிர்களின் செயல் குறைந்துவிடும் அல்லது நின்றுவிடும்.
மண் அதிகம் குளிர்ந்து விடுவதால் இயற்கையாக மண்ணில் காணப்படும் வெப்பம் குறைந்து மண் மீண்டும் வெப்பமடைய அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்ளும். இந்த குளிர்ந்த நிலையில் மணிச்சத்து, சாம்பல்சத்து, துத்தநாக மற்றும் தாமிரச்சத்துகளை பயிர் எடுத்துக்கொள்ளும் அளவு குறைவதனால் அவைகளின் பற்றாக்குறை உண்டாகும். இதனால் பயிரின் வளர்ச்சி தடைபடுகிறது.
மழைநீர் வடியும் போது நீருடன் மண்ணிலுள்ள தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து, போரான், சுண்ணாம்பு மற்றும் மாங்கனீசு சத்துகளின் கரைதிறன் அதிகமாகி தண்ணீரோடு கரைந்து வெளியேறிவிடும்.
குளிர்ச்சியான வெப்பநிலையில் அங்ககப் பொருட்கள் சத்துகளாக உருமாற்றமாவது பாதிக்கப்படுவதால் பயிருக்கு கந்தகச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு பயிரின் தோகைகள் மஞ்சள் நிறமாக மாறும்.
மண்ணில் இருப்புச்சத்து அதிகமாகி மாங்கனீசு சத்துக் குறைந்து இலைகளின் விகிதாச்சாரம் பாதிக்கப்பட்டு இரும்பின் அளவு அதிகமாவதால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். மாங்கனீசு சத்தின் பற்றாக்குறையினால் இலைப்புள்ளி நோய்கள் உண்டாகும்.
நிவர்த்தி முறைகள்
தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் வடிகால் வசதியை அதிகப்படுத்தி பயிர் மூழ்காத அளவு நீரை வெளியேற்ற வேண்டும். அதனால் வேர்ப்பகுதிகளில் காற்றோட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
வெள்ளநீர் வடிந்தவுடன் தழைச்சத்து உரத்தை அம்மோனியா வடிவில் இடவேண்டும். அதற்கு யூரியாவை நேரடியாகப் பயிருக்கு அளிக்க வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன் 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து 1 நாள் இரவு வைத்திருந்து மறுநாள் இத்துடன் 17 கிலோ மூரியேட் ஆப்பொட்டாஷ் கலந்து வயலில் சீராக இட வேண்டும். மணிச்சத்தை டிஏபி உரத்தின் மூலமாக 2 சத அளவில் தெளிக்கவேண்டும்.
நுண்ணூட்ட உரக்கலவையினையும் மேலுரமாகத் தெளிக்கவேண்டும்.
இலை வழி உரமாக அளிக்க வேண்டுமெனில் 2 கிலோ யூரியாவுடன் 1 கிலோ துத்தநாக சல்பேட்டை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும் அல்லது 4 கிலோ டி.ஏ.பி.யினை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து ஓர் இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலை வடித்து தெளிந்த நீருடன் 2 கிலோ பொட்டாஷ் உரத்தினையும் சேர்த்து 190 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளிக்கவேண்டும்.
பூச்சி மேலாண்மை
விட்டுவிட்டு பெய்யும் மழைத்தூறல், குறைந்த வெப்பநிலை, அதிகமான காற்றின் ஈரப்பதம் போன்றவை குருத்துப்பூச்சி, இலை சுருட்டுப்புழு, குருத்து ஈ, புகையான் மற்றும் ஆனைக்கொம்பன் ஈ போன்ற பூச்சிகளின் தாக்குதலுக்கு காரணமாகும். மேலும் பயிர் அடர்ந்து வளர்ந்திருக்கின்ற பகுதிகளில் எலிகளினால் பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றைக் கண்காணித்து பூச்சி மற்றும் எலி கட்டுப்பாட்டிற்கான தக்க மேலாண்மை முறைகளைக் கையாள வேண்டும்.
குருத்துப்பூச்சி; இலை சுருட்டுப்புழு
குருத்துப்பூச்சியானது இளம் பயிர்களின் தூர்கட்டும் பருவம் வரை தண்டுகளில் நுளைந்து வளரும் தண்டுப் பகுதிகளை உண்பதால் நடுக்குருத்து காய்ந்து விடும் அல்லது இறந்த குருத்துகள் உண்டாகும். இலைச்சுருட்டுப்புழு தாக்கப்பட்ட வயல்களில் இலைகள் நீளவாக்கில் சுருட்டப்பட்டு பட்டுப் போன்ற மெல்லிய இழைகளால் இணைத்து புழுக்கள் உள்ளிருந்து கொண்டு இலைகளை சுரண்டி உண்பதால் இலைகளில் பச்சையம் சுரண்டப்பட்ட இடங்களில் நீளவாக்கில் வெள்ளை நிற பட்டையாக காணப்படும்.
இனக் கவர்ச்சிப் பொறிகளை ஏக்கருக்கு 5 என்ற அளவில் பயன்படுத்தி குருத்துப்பூச்சியின் ஆண் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
ஏக்கருக்கு 25 என்ற அளவில் பறவைகள் அமர்வதற்கு மூங்கில் குச்சிகளைப் பயன்படுத்தி அல்லது தென்னை மட்டைகளைப் பயன்படுத்தி வயலில் ஆங்காங்கே இருக்கைகள் அமைத்து புழு மற்றும் பூச்சிகளை அழிக்கலாம்.
டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் என்ற முட்டை ஒட்டுண்ணியை ஒரு ஏக்கருக்கு 2 சிசி (40000 முட்டைகள்) என்ற அளவில் இரு முறை அதாவது நடவு நட்ட 30 மற்றும் 37-ஆ வது நாள்களில் வயலில் வெளியிட்டு குருத்துப்பூச்சியின் முட்டைக் குவியல்களை அழிக்கலாம்.
டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணியை ஒரு ஏக்கருக்கு 2 சிசி (40000 முட்டைகள்) என்ற அளவில் மூன்று முறை அதாவது நடவு நட்ட 37, 44 மற்றும் 51-ஆவது நாள்களில் வயலில் வெளியிட்டு இலைமடக்குப்புழுவின் முட்டைகளை அழிக்கலாம்.
இவற்றின் தாக்குதல் தென்படும் இடங்களில் ஒரு ஏக்கருக்கு வேப்பெண்ணெய் 3 சதம் (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மிலி என்ற அளவில் ஒட்டும் திரவத்துடன் கலந்து) அல்லது வேப்பங்கொட்டைக் கரைசல் 5 சதம் தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.
தாக்குதல் பொருளாதார சேதநிலையைத் தாண்டும் போது புரபினோபாஸ் 50 ஈ.சி. – 400 மிலி, ப்ளுபென்டியாமைட் 39.35 எஸ்.சி – 20 மிலி, குளோரன்ட்ரான்லிபுரோல் 18.5எஸ்.சி – 60 மிலி, கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 50 எஸ்.பி. – 400 கிராம் ஆகிய ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதாவது ஒரு மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
மேலாண்மை
இவற்றைக் கட்டுப்படுத்திட ஒரு ஏக்கருக்கு அசடிராக்டின் 500 மிலி, தயாமீத்தாக்சாம் 25 டபிள்யூ. ஜல்.- 40 கிராம், குளோரிபைரிபாஸ் 20 ஈ.சி. – 500 மிலி, கார்போசல்பான் 25 ஈசி – 400 மிலி, பிப்ரோனில் 5 எஸ்.சி – 400 கிராம் இவற்றில் ஏதாவது ஒரு மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
எலிக் கட்டுப்பாடு
எலியின் தாக்குதல் தென்படும் இடங்களில் ஒரு ஏக்கருக்கு 25 முதல் 30 தஞ்சாவூர் எலி கிட்டிகளை வைத்து பிடித்து அழிக்க வேண்டும்.
ஓர் ஏக்கருக்கு 25 பறவைக் குடில்களை அமைத்து எலியைப்பிடிக்கும் ஆந்தைகளுக்கு ஏதுவாக செய்ய வேண்டும்.
மேலும் புரோமோடையலோன் கட்டிகளை வரப்பில் மூன்று மீட்டருக்கு ஒன்று என்ற அளவில் வைத்தும் எலிகளைக் கட்டுப்படுத்தலாம்.
நோய் மேலாண்மை
மழையோடு கூடிய மப்பும் மந்தாரமுமான கால சூழ்நிலையில் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி பயிரில் குலை நோய், பாக்டீரியா இலைக் கருகல் மற்றும் பாக்டீரியா இலைக் கீறல் நோய்களின் தாக்குதல் தென்பட வாய்ப்புள்ளது.
குலைநோய்
இலையில் நீல நிற புள்ளிகள் உருவாகி இரண்டு பக்க நுனிகளும் விரிவடைந்து நடுப் பகுதியில் அகலமாகவும், முனைகள் கூராகவும் உடைய நீண்ட கண் வடிவத்துடன் காணப்படும். இந்த கண் வடிவ புள்ளிகளின் ஓரங்கள் கரும்பழுப்பும் உட்பகுதியில் இளம் பச்சை அல்லது சாம்பல் நிறமும் கொண்டு இருக்கும்.
நோயைக் கட்டுப்படுத்தும் முறை
குலைநோயின் தாக்குதலைக் கட்டுப்படுத்த முன்னெச்செரிக்கையாக நடவு வயலில் ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் புளோரசன்ஸ் பாக்டீரியாவை 25 கிலோ தொழுஉரத்துடன் கலந்து இட வேண்டும் அல்லது சூடோமோனாஸ் பாக்டீரியாவை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் ஒரு லிட்டர் புளித்த தயிருடன் கலந்து தெளிக்கவும்.
நோய் அறிகுறிகள் அதிகமாகத் தென்படும் இடங்களில் ஏக்கருக்கு கார்பன்டசிம் 50 டபிள்யூ.பி. – 200 கிராம் அல்லது டிரைசைக்ளோசோல் 75 டபிள்யூ.பி. – 200 கிராம் அல்லது அசாக்சிஸ்டோர்பின் 25 எஸ்.சி. – 200 மி.லி. மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
பாக்டீரியா இலைக்கருகல்; இலைக் கீறல் நோய்கள்
பாக்டீரியா இலைக் கருகல் நோயினால் தாக்கப்பட்ட இலைகள் நுனியிலிருந்து கீழ்நோக்கி பக்கவாட்டில் மஞ்சள் நிறமடைந்து பின்னர் கருகியும் காணப்படும்.
வைக்கோல் நிறமுடைய காய்ந்த பகுதியானது நுனியிலிருந்து கீழ்நோக்கியும் ஓரங்களிலிருந்து நடு நரம்பை நோக்கியும் நெளிந்து அலைப்போன்று நீண்ட கோடுகளுடன் தனித்தன்மையுடன் காணப்படும்.
மேலாண்மை
இவற்றின் அறிகுறிகள் தென்பட்டவுடன் 20 சத பசுஞ்சாணக் கரைசல் அதாவது 40 கிலோ புதிய பசுஞ்சாணத்தை 100 லிட்டர் நீரில் கரைத்து 12 மணி நேரம் ஊற வைத்து பிறகு கரைத்து தெளிந்த நீரை வடித்து மேலும் 100 லிட்டர் நீரைக் கலந்து 200 லிட்டராக்கி கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கவும் அல்லது அதிகமாக தாக்குதல் காணப்படும்போது ஒரு ஏக்கருக்கு ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட்டுடன் டெட்ராசைக்கிளின் கலந்த மருந்துக் கலவை 120 கிராமுடன் காப்பர் ஆக்ஸி குளோரைடு 500 கிராம் அல்லது காப்பர் ஹைட்ராக்ஸைடு 500 கிராம் என்ற அளவில் 200 லிட்டர் நீருடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.
குறிப்பாக மருந்து தெளித்து குறைந்தபட்சம் 3 முதல் 4 மணி நேரத்திற்கு மழை இருக்கக் கூடாது.
நன்றி தினமணி