எள் சாகுபடி முறை மற்றும் பயன்கள்மற்றும் பயன்கள்
இதன் தாயகம் இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவாகும். எள்ளில், கருப்பு எள் மற்றும் வெள்ளை எள் என இரு வகைகள் உள்ளன.
எள்ளானது 5000 ஆண்டுகளுக்கு முன்பே வளர்க்கப்பட்ட செடியாகும்.
பின்னர் சீனா, தென்கிழக்கு ஆசியா, அமெரிக்கா, கனடா, நெதர்லேண்டு, துரிக்கி, பர்மா, சூடான், மெக்சிகோ, நைஜீரியா, வெனிஸ்சுலா, உகந்தா, எத்தோப்பியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் எள் பயிரிட ஆரம்பித்தன.
எப்படி பயிரிடுவது…?
இரகங்கள் :
கோ 1, டி.எம்.வி 3, டி.எம்.வி 4, டி.எம்.வி 5, டி.எம்.வி 6, எஸ்.வி.பி.ஆர் 1, வி.ஆர்.ஐ (எஸ்.வி)1, டி.எம்.வி 7 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
பருவம்
மானாவாரியாக பயிரிட ஆடி, கார்த்திகை மாதங்கள் சிறந்தவை. இறவைப் பயிராக பயிரிட மாசி மாதங்கள் ஏற்றவை.
மண்
மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் களிமண் போன்ற மண் வகைகள் ஏற்றவை. மண்ணின் சராசரி கார அமிலத்தன்மை 6 – 8.0க்குள் இருக்க வேண்டும்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்ய வேண்டும். சிறு விதைகளும் முளைக்குமாறு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து நுண்மைப்படுத்த வேண்டும். மண்ணில் உள்ள கடினமான கட்டிகளை உடைக்க உளிக் கலப்பையைக் கொண்டு 0.5 மீட்டர் ஆழத்தில் இருந்து, செங்குத்தான திசைகளில் உழவேண்டும். பிறகு 12.5 டன் தொழு உரம் (அ) மக்கிய தென்னை நார்க்கழிவு போடவேண்டும். இறவை எள் சாகுபடிக்கு, கிடைக்கும் நீர் மற்றும் நிலத்தின் சரிவைப் பொறுத்து 10 சதுர மீட்டர் அல்லது 20 சதுர மீட்டர் அளவிற்கு படுக்கை தயாரிக்கவேண்டும். நீர் தேங்குவதைத் தடுக்க சமன்படுத்த வேண்டும்.
விதையளவு
மானாவாரி பயிருக்கு ஏக்கருக்கு இரண்டு கிலோ விதை தேவைப்படும். இறவை என்றால் ஒரு ஏக்கருக்கு மூன்று கிலோ விதை தேவைப்படும்.
விதைநேர்த்தி
அசோஸ்பைரில்லம் 100 கிராம், சூடோமோனஸ் 100 கிராம் ஆகியவற்றுடன் விதைகளை சேர்க்க வேண்டும். வடித்த கஞ்சியை ஆற வைத்து, அதில் விதைக்கலவையைச் சேர்க்க வேண்டும். ஒரு மணி நேரம் நிழலில் உலர்த்தி எடுத்து விதைத்தால் வேரழுகல் மாதிரியான நோய்கள் தாக்காது. நன்றாக முளைக்கவும் செய்யும்.
விதைத்தல்
20 கிலோ மணல் அல்லது 20 கிலோ எருவுடன் எள் விதையைக் கலந்து விதைப்பது நல்லது. அப்போதுதான் சரியான இடைவெளியில் விதைகள் விழுந்து முளைக்கும். வரிசைக்கு வரிசை 30 செ.மீ இடைவெளியும், செடிக்கு செடி 30 செ.மீ இடைவெளியும் கொடுக்க வேண்டும்.
நீர் நிர்வாகம்
எள்ளைப் பொறுத்தவரை தண்ணீர் அதிகமாகத் தேவைப்படாது. செடியை வாடவிட்டு தண்ணீர் கட்டினால், இலை குறைந்து காய் அதிகமாகக் காய்க்கும். ஒவ்வொரு முறை தண்ணீர் பாய்ச்சும்போதும் 100 லிட்டர் ஜீவாமிர்தத்தை தண்ணீரில் கலந்து விடவேண்டும். எள்ளை விதைநேர்த்தி செய்து, ஜீவாமிர்தக் கரைசலையும் கொடுப்பதால், எள்ளில் அதிகமாக தாக்குதல் நடத்தும் மாவுப் பூச்சிகளின் தாக்குதல் குறைந்துவிடும். 45 முதல் 55 நாட்களில் பூ எடுக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் டேங்குக்கு (13 லிட்டர்) 300 மில்லி பஞ்சகாவ்யாவைக் கலந்து தெளித்தால், பூ உதிர்வது குறையும்.
உரங்கள்
இறவை மற்றும் மானாவாரி பயிருக்கு முழு அளவு தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை அடி உரமாக இட வேண்டும். ஒரு ஏக்கருக்கு தழைச்சத்து (யூரியா 30 கிலோ), மணிச்சத்து (சூப்பர் பாஸ்பேட் 60 கிலோ) மற்றும் சாம்பல் சத்து ( பொட்டாசியம் 8 கிலோ) என்ற அளவில் உரமிட வேண்டும். ஏக்கருக்கு 4 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் 4 கிலோ பாஸ்போபேக்டீரியா உயிர் உரங்களை 20 கிலோ மணலுடன் கலந்து அடியுரமாக இடலாம். இவ்வாறு இடும்போது தழைச்சத்து கால்பங்கினை குறைத்துக் கொள்ள வேண்டும்.
ஏக்கருக்கு 2 கிலோ மாங்கனீசு சல்பேட்டை 20 கிலோ மணலுடன் கலந்து நிலத்தில் தூவுவதன் மூலம் மாங்கனீசு பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய முடியும்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
விதைத்த 15 நாட்கள் முதல் 20 நாட்களுக்குள் முதல் களை எடுக்க வேண்டும். கூடவே, அதிகப்படியாக உள்ள செடிகளை அகற்றவேண்டும். முதல் களை எடுத்ததிலிருந்து 15 நாட்கள் விட்டு அடுத்த களை எடுக்கவேண்டும். 40 நாட்களானதும் செடி வளர்ந்து நிழல் அடைத்துக் கொள்ளும். எனவே, மேற்கொண்டு களைகள் அவ்வளவாக வளராது.
பயிர் பாதுகாப்பு
புழுக்கள் மற்றும் ஈக்கள்
தளிர் பிணைக்கும் புழுக்கள் மற்றும் எள் ஈயினைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 400 மி.லி குயினால்பாஸ் 25 இ.சி மருந்தினை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும் அல்லது 2 சதம் வேப்ப எண்ணெய் கரைசல் அல்லது 0.03 சதம் வேம்பு சார்ந்த மருந்துகளை இருமுறை பூக்கும் தருணத்திற்கு முன்பு தெளிக்க வேண்டும்.
காய் துளைப்பான்
காய்த் துளைப்பானைக் கட்டுப்படுத்த பாசலோன் 4 சதம் (அ) குயினால்பாஸ் 1 சதம் (அ) மாலத்தியான் 5 சதம் தூள்களை ஒரு ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவில் விதைத்த 25, 35 மற்றும் 60 நாட்களில் தூவ வேண்டும்.
வேரழுகல் நோய்
வேரழுகல் நோயினைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 1 கிலோ சூடோமோனாஸ் (அ) டிரைக்கோடெர்மா விரிடி உயிரி பூஞ்சாணக்கொல்லி மருந்தை 20 கிலோ மணலுடன் கலந்து விதைத்த 30ம் நாள் மண்ணில் இடலாம் அல்லது கார்பன்டாசிம் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் என்ற அளவில் கரைத்து செடிக்கு அருகில் ஊற்ற வேண்டும்.
இலைக்கருகல் மற்றும் இலைப்புள்ளி
இலைக்கருகல் மற்றும் இலைப்புள்ளி நோய்களை, ஏக்கருக்கு 400 கிராம் என்ற அளவில் மேங்கோசெப் மருந்தினை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
இயற்கை முறை கட்டுப்பாடு
70-ம் நாள் முதல் செடிகளில் காய்கள் குலுங்கத் தொடங்கும். இந்த சமயத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் காய்ப்புழுக்களின் பாதிப்பு அதிகம் இருக்கும். இரண்டு முறை அக்னி அஸ்திரம் தெளித்தால், இவற்றைக் கட்டுப்படுத்தலாம். சில நேரங்களில், சாம்பல் நோயும் தாக்கலாம். இந்நோய் தாக்கிய செடிகளின் தண்டுகள் பழுத்து, பாதியாக ஒடிந்து விழும். 100 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் பிரம்மாஸ்திரம், 2 லிட்டர் கோமியம் ஆகியவற்றைக் கலந்து தெளித்தால், சாம்பல் நோய் கட்டுப்படும்.
அறுவடை
85 நாட்களுக்கு மேல் செடியில் இலைகள் உதிர்ந்துடும். இந்த நிலையில், செடியின் நுனிப்பகுதியில் இருக்கும் காய்களை உடைத்துப் பார்க்கவேண்டும். விதை பழுப்பு நிறத்தில் இருந்தால், செடியை அறுவடை செய்யலாம். ஐஸ் கோன் போல அறுவடை செய்த செடிகளை அடுக்கி வைக்கவேண்டும். காய்ப் பகுதி மேல்புறமும், அடிப்பகுதி தரையிலும் இருப்பது போல் ஏழு நாட்களுக்கு நிறுத்தி வைக்கவேண்டும். இந்த சமயத்தில் பூச்சித்தாக்குதல் ஏற்படாமல் இருக்க, காய்களுக்கு மத்தியில் வேப்பிலையை வைக்க வேண்டும். பிறகு, செடிகளைப் பிரித்து, காய வைத்து, அவற்றை கையில் எடுத்து ஆட்டினாலே காய்கள் கொட்டிவிடும். அவற்றை வெயிலில் காய வைத்தால், காய்கள் வெடித்து, அதிலிருந்து எள் கிடைக்கும்.
மகசூல்
ஒரு எக்டருக்கு 300 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
ஊடுபயிர்
ஊடுபயிராக துவரை பயிர் செய்யலாம்.
பயன்கள்
- உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவிற்கு 3 மணி நேரத்திற்கு முன் 20 கிராம் கறுப்பு எள்ளை மென்று தின்று தண்ணீர் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- சருமத்தில் சொறி, சிறங்கு உள்ளவர்கள் எள்ளு விதையை அரைத்து மேல் பூச்சாக பூசினால் சரும நோய்கள் அகலும்.
- கருப்பு எள்ளில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்தச் சோகையை குணப்படுத்தும்.
- வயிற்றுப் போக்கு உள்ளவர்கள் எள்ளை வறுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு எடுத்து நெய் கலந்து தினமும் மூன்று வேளை என ஆறு நாட்கள் சாப்பிட்டு வந்தால் காலரா மற்றும் தொற்றுநோயால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நீங்கும்.
- எள்ளின் இலையையும் வேரையும் அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து தலை குளித்து வந்தால் முடி உதிர்தல் குணமாகும்.
- எள் எண்ணெயை ( நல்லெண்ணெய்) 7 நாட்களுக்கு ஒரு முறை தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறிய பிறகு வெந்நீரில் குளித்து வர கண் சிவப்பு, கண் வலி குறையும்.
நன்றி:AGRICULTURETRIP