வேளாண் பண்பு: நீரின் மாண்பு
மழை நீர் ஆதாரங்களின் மூலம், நிலப்பரப்பிற்கு வந்தடைந்து சேமிக்கப்பட்ட நீரில், 69 சதவீதம் வேளாண்மை, 21 சதவீதம் தொழிற்சாலைகள், 10 சதவீதம் இதர பயன்பாட்டிற்கும் செலவாகிறது. மழை நீர் 69 சதவீதம் விவசாயத்திற்கு பயன்பட்டாலும், வேளாண் வளர்ச்சியானது தொழிற்துறை வளர்ச்சியை விட பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. இதற்கு காரணம், இருக்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்தி பயிர் செய்யும் பரப்புகளையும், மகசூலையும் அதன் மூலம் வருவாயையும் அதிகரிக்க வழிமுறைகள் காணப்பட்டாலும் பயன்பாடு என்பது பெயரளவிலேயே உள்ளது. இந்தியாவின் முதுகெலும்பான வேளாண்மையை, தலைநிமிரச் செய்யும் வகையில் சிக்கன நீர்ப்பாசன முறைக்கு விவசாயிகள் கவனம் கொள்ள வேண்டும்.
தமிழகத்தின் எதிர்கால நீராதாரம்ந
தமிழ்நாட்டை பொறுத்தவரை 2025 ம் ஆண்டில் கிடைக்கும் நீர் சுமார் 4.74 மில்லியன் எக்ேடர் மீட்டர். ஆனால் 2025ம் ஆண்டின் நீர்த்தேவை 6.20 மில்லியன் எக்டேர் மீட்டர் (31 சதவீதம்). கிடைக்கும் குறைந்த நீரைக் கொண்டு அதிக பயிர் உற்பத்தி செய்ய வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். 20௨5ம் ஆண்டில் தற்போது தேவைப்படும் நீரை விட இரண்டு மடங்கு வேளாண்மைக்கும், ஏழு மடங்கு தொழிற்சாலைகள் மற்றும் வீட்டு உபயோகத்திற்கும் தேவைப்படும் என வேளாண்துறை புள்ளி விவரம் தெரிவிக்கிறது. எனவே நீர் சிக்கன உத்திகளை கையாள வேண்டியது மிகவும் அவசியம். தற்போதைய நீர்ப்பாசனத்திற்கு கிடைக்கக்கூடிய நீரில் சுமார் 80 சதவீதம் நெற்பயிர் சாகுபடிக்கு மட்டுமே பயன்படுகிறது. நெற்பயிரின் நீர் பயன்படும் திறன் சுமார் 25 முதல் 35 சதவீதமாகும். தோட்டக்கலைப் பயிர்களின் நீர் பயன்படும் திறன் சுமார் 50 சதவீதம். எனவே எங்கெங்கு சாத்தியமோ அங்கு நெற்பயிர் சாகுபடியில் நீர் நிறுத்தாமல் சிக்கன நீர்ப்பாசன முறையான திருந்திய நெல் சாகுபடி மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் நுண்ணீர் பாசன முறைகளை கையாள்வது சிறந்தது.
பாசன நீரில் தரம்,
மேலாண்மைசாகுபடி செய்யும் பயிர் நன்றாக வளர்ந்து அதிக விளைச்சல் கொடுக்க வளமான நிலமும், நீர்ப்பாசனத்திற்கு ஏற்ற தண்ணீரும் தேவை. எனவே பாசன நீரின் குணம் மற்றும் தரத்தை அறிந்து கொள்ளுதல் மிக முக்கியம். பாசன நீரினை பரிசோதனை செய்து அதற்கேற்ப பயிர் சாகுபடி செய்வது விவசாயிகளுக்கு லாபம் தரும். பாசனத்திற்கு உபயோகப்படும் நீர் நல்ல நீராக இருக்க வேண்டும். பொதுவாக நீரின் குணம் என்பது அதில் கரைந்துள்ள உப்புச்சத்துக்களின் அளவு, அவைகளின் தன்மைகள் ஆகியவற்றைப் பொறுத்தது. நீரில் கலந்துள்ள உப்புகளின் மொத்த அளவு 150 மி.கி./லிட்டர் – நல்ல மகசூல் பெறலாம். 150 – 500 மி.கி../லிட்டர் – திருப்திகரமான மகசூல் கிடைக்கும். 500 – 1500 மி.கி../குறைந்த மகசூல் மட்டுமே. 1500 மி.கி../லிட்டர் – உப்பு எதிர்ப்பு சக்தியுள்ள பயிர்கள் மட்டும் சாகுபடி செய்ய இயலும்.
குழாய்களில் உப்பு அகற்றுதல்
ஆழ்துளை குழாய் கிணறுகளில் நீரின் தரம் குறையும்போது நீர் ஏற்றும் குழாய்களில் (பி.வி.சி./எச்.டி.பி.இ.எஸ்., பைப்) உப்பு படிந்து, காற்றழுத்த பம்புகள் வெளிக்கொண்டு வரும் நீரின் அளவு மிகவும் குறைந்து விடுகின்றது. இதனால் விவசாயிகள் அடிக்கடி நீர் ஏற்றும் குழாய்களை மாற்ற வேண்டியுள்ளது. தண்ணீரின் உவர்த்தன்மையே இதற்கு முக்கிய காரணம். நீரின் கார அமிலத்தன்மை மற்றும் கார்பனேட், இரும்பு மற்றும் மாங்கனீசு சத்துக்களின் அளவு அதிகமாக இருந்தால் குழாய்களில் உப்பு படியும். உப்புகளால் அடைக்கப்பட்ட குழாய்களை ‘தெர்மோடெக்’ உபகரணத்தில் இட்டு நீர் ஊற்றி அதனை சுமார் 70 டிகிரி சென்டிகிரேட் அளவில் சூடுபடுத்த வேண்டும். இவ்வாறு செய்யும்போது பி.வி.சி., குழாய்கள் சற்று விரிவடைந்து படிந்துள்ள உப்புப் படிவங்கள் விடுபட்டுவிடும். பின் பி.வி.சி., குழாய்களை மீண்டும் எவ்வித சேதமுமின்றி நீர் இறைக்கப் பயன்படுத்தலாம்.
நீர் பரிசோதனை அவசியம்
பாசன நீர் மோட்டாரை இயக்கிய பின் 30 நிமிடங்கள் கழித்து நீர் மாதிரி சேகரிக்கலாம். துாய்மையான பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டிலில் அரை லிட்டர் அளவுக்கு சேகரிக்கலாம். திறந்தவெளி கிணறாக இருந்தால் ஒரு வாளியை கட்டி கிணற்றில் விட்டு நன்கு மூழ்கி, மேலே இழுத்து 2 அல்லது 3 முறை மூழ்கடித்த பின் வாளியினை வெளியே இழுத்து பாட்டிலில் சேகரிக்கலாம். நீர் மாதிரியை சேகரித்த அன்றே விபரங்கள் அடங்கிய அட்டையுடன் பரிசோதனை நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். பாசன நீர் மாதிரிகளை அந்தந்த மாவட்ட வேளாண் மண் பரிசோதனை நிலையங்கள் அல்லது தமிழ்நாடு வேளாண் பல்கலை மண் ஆய்வு மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை மையங்களில் கொடுத்து ஆய்வு முடிவுகளை பெறலாம்.
– டி.யுவராஜ்
வேளாண் பொறியாளர்
உடுமலை. 94865 85997
நன்றி தினமலர்