இலவசமாக விவசாயம் சொல்லித்தரும் இன்ஸ்பெக்டர்
ஜல்லிக்கட்டு விவகாரம்,ஹைட்ரோ கார்பன்,இப்போது கதிராமங்கலத்தில் நடக்கும் போராட்டத்திற்கு பிறகு இளைஞர்களிடம் விவசாயத்தின் மீதும்,கால்நடை வளர்ப்பின் மீதும் அதீத ஈடுபாடு ஏற்பட்டிருக்கிறது. பலரும் விவசாயத்தில், அதுவும் இயற்கை விவசாயத்தில் குதிக்க நாள் நட்சத்திரம் பார்க்கும் நல்ல விசயமும் நடக்கத் தொடங்கி இருக்கிறது. ஆனால்,அவர்களுக்கு எப்படி விவசாயம் செய்வது, அந்த முறைகள் என்ன என்பது தெரியவில்லை. இந்தச் சூழலில்,’இயற்கை விவசாயம் செய்ய ஆசையா?. கவலை வேண்டாம். என் இயற்கைப் பண்ணைக்கு வாருங்கள். இலவசமாக இயற்கை விவசாயம் செய்வது எப்படி என்று கற்று தருகிறேன்’ என்று சமூக வலைத்தளங்கள் மூலம் அறிவிப்பு செய்திருக்கிறார் கரூர் மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்து வரும் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டரான மனோகரன். இவரது அழைப்பை ஏற்று பல கல்லூரி மாணவ,மாணவிகளும்,தமிழ்நாடு முழுக்க உள்ள வேளாண்மை விரும்பிகளும்,உழவர் மன்றத்தை சார்ந்தவர்களும் சாரை சாரையாக வந்து இயற்கை வழி விவசாயம் செய்யும் முறைகளை கற்று செல்கிறார்கள். ஒருநாள் முழுக்க தனது தோட்டத்தில் வைத்து அவர்களுக்கு இயற்கை விவசாயம் பற்றி கற்பிக்கும் அவர்,அதற்காக அவர் கட்டணம் எதுவும் வாங்குவதில்லை.
அதோடு,வருபவர்களை விருந்தாளியாக பாவித்து இயற்கை உணவு பொருட்களை கொண்டு சமைத்த சாப்பாடு,மற்றும் மூலிகை டீயும் கொடுத்து வயிறார சாப்பிட வைத்து அனுப்பி அசத்துகிறார்.
கரூர் மாவட்டம்,க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள வேட்டையார்பாளையத்தில் இருக்கும் அவரது ஜெயகவின் இயற்கை விவசாயத் தோட்டத்திற்கு சென்றோம். அன்று கரூர் குமாரசாமி கல்வியியல் கல்லூரி பயிற்சி ஆசிரியைகள் 75 பேர்களுக்கு இயற்கை வழி வேளாண்மை செய்வது பற்றி பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார் மனோகரன். இயற்கை முறையில் அவர் பயிர் செய்திருக்கும் சம்மங்கி,நாட்டு கொய்யா,முருங்கை,நாட்டு நெல்லி மரங்கள், கத்தரி, கீரைகள்,மாமரங்கள் உள்ளிட்ட வெள்ளாமைகளை காண்பித்து,எப்படி பயிர் செய்வது,எப்படி ஜீவாமிர்தம், பஞ்சகாவ்யா,மூலிகை பூச்சிவிரட்டிகள்,மூடாக்கு,மாடித்தோட்டம் அமைப்பது உள்ளிட்ட விசயங்கள் எப்படி செய்வது என்று விளக்கினார்.
அதன்பிறகு,மாமர நிழலில் வைத்து,மாணவிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். மதியம் இரண்டு மணிக்கு அவர் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள்,பூங்கார் அரிசியில் சமைத்த சாதம் என்று மதிய விருந்து படைத்தார். அதன்பிறகு,தோட்டத்தில் நடந்த சிறுசிறு வேலைகளை மாணவிகளும் செய்து பார்த்து,பாடம் கற்றனர். மாலை நாலரை மணிபோல்,அனைவருக்கும் மூலிகை டீ வழங்கப்பட்டது. அதோடு,இயற்கை வேளாண்மை பயிற்சி முடிவுக்கு வந்தது.
நாம் மனோகரனிடமே பேசினோம்
“எனக்கு முப்பது ஏக்கர் நிலமிருக்கு. அதுல்,ஆறு ஏக்கர் நிலத்துலதான் இயற்கை விவசாயம் பார்க்கிறேன். மீதமுள்ள 24 ஏக்கர் நிலமும் மேய்ச்சல் நிலம். நான் வளர்க்கும் நூறு ஆடுகளும்,பத்து மாடுகளும் அதில்தான் மேயும். எங்கத் தோட்டத்துல எங்கப்பா காலத்துலயும் சரி, என் காலத்துலயும் சரி துளி அளவுகூட செயற்கை உரங்கள் போட்டதில்லை. நான் காவல்துறையில் பணியில் இருந்தபோதே, 2005ம் ஆண்டு எங்கப்பா மறைந்தது முதல் நான் விவசாயத்தில் ஈடுப்பட்டு வர்றேன். எனக்கு நம்மாழ்வாரும்,பசுமை விகடனும் இரண்டு கண் மாதிரி. எங்க தோட்டத்துல உள்ள வேப்ப மரத்தில் நம்மாழ்வார் போட்டோவை மாட்டி வச்சுருக்கேன். தினமும் காலையிலும், மாலையிலும் அவரை வணங்கியபிறகுதான் விவசாய வேலையை ஆரம்பிப்பேன்.
“பொதுவா விவசாயத்தின் மீது எல்லோருக்கும் ஆர்வம் குறைஞ்சுகிட்டு வந்துச்சு. அதுக்கு காரணம்,காவிரி பிரச்னை,வறட்சி உள்ளிட்ட விசயங்கள்தான். குறிப்பா இப்ப உள்ள தலைமுறைக்கு சுத்தமா விவசாயத்தின் மீது ஆர்வம் இல்லைன்னு சொல்லப்பட்டுச்சு. ஆனால், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக அவர்கள் தன்னெழுச்சியாக போராடிய பிறகு,அவர்களுக்குள் விவசாயத்தின் மீது ஈர்ப்பு அதிகமாகி இருக்கு. ஐ.டி பீல்டுல இருக்கிற பலரும்கூட விவசாயம் பண்ணனும்ன்னு முடிவு பண்ணி இருக்காங்க. நான் போராட்டத்தில் கலந்துக்கலை. அதனால்தான்,ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இயற்கை விவசாயத்தை சொல்லிக் கொடுக்கனும்ன்னு நினைச்சு,சமூக வலைத்தளங்களில் அறிவிப்பு வெளியிட்டேன். அதை பார்த்துட்டு,தமிழ்நாடு முழுக்க இருந்து பல்வேறு குழுக்கள், தனிநபர்கள், உழவர் மன்றத்தை சார்ந்தவர்கள்,கல்லூரி மாணவர்கள்ன்னு இரண்டு மாதங்கள்ல ஐநூறுக்கும் மேற்பட்டோர் என் தோட்டத்திற்கு வந்து விவசாய முறைகளை கத்துக்கிட்டு போயிருக்காங்க. அதில் பலரும்,இதுவரை விவசாயம்ன்னா என்னன்னே தெரியாமல் இருந்தவர்கள் என்பதுதான் ஆச்சர்யம். அவங்ககிட்ட,’மத்த தொழிலெல்லாம் பணம் மட்டுமே தரும். விவசாயம் மட்டுமே சோறு தரும்’ன்னு முதல் ஸ்லோகமாக சொல்ல வைத்து பயிற்சியை ஆரம்பிப்பேன். என் தோட்டத்தில் ஆப்பிள் செடி, திராட்சை செடின்னு இந்த மண்ணுக்கு சரிப்படாத செடிகளையும் வளர்த்து வருகிறேன். அதைப் பார்த்து ஆச்சர்யத்தோட தகவல் கேட்டுக்குறாங்க. இங்க இயற்கை விவசாயம் செய்வது எப்படிங்கிற விசயத்தை கத்துக்கிட்டதோட,’என்னமாதிரி மண்தன்மை உள்ள நிலத்தை வாங்கனும்?. எந்த கால்நடை வளர்ப்பது லாபம் தரும்?’ன்னு பல விசயங்களையும் கேட்டுக்கிட்டு போறாங்க.
நம்மாழ்வார் விதைச்ச இயற்கை விவசாய விதை இப்போ இளைஞர்களிடம் வேகமா வளர ஆரம்பித்திருக்கிறது. அதுல,என்னோட சிறு பங்களிப்பு இந்த இலவச பயிற்சி” என்றார் முத்தாய்ப்பாக
நன்றி விகடன்