வெறும் புல்லென்று அழிக்கப்பட்ட பொக்கிஷம்…: இது… ஆயிரங்காலத்து பயிர்!
வெறும் புல்லென்று அழிக்கப்பட்ட பொக்கிஷம்…: இது… ஆயிரங்காலத்து பயிர்! மீட்டெடுப்பதில் வெற்றி கண்ட ஊட்டி இளைஞர்!
விடாமல் அடித்துத் துவைத்த மழையில், வீடுகளும், வீதிகளும் மூழ்கிப் போக, எத்தனை உயிர்கள் பறிபோனது என்று இன்று வரைக்கும் தெளிவான தகவல் இல்லை; இரு ஆண்டுகளுக்கு முன்பு, வெள்ளத்தில் மிதந்த தலைநகரம், இன்றைக்கு தவித்த வாய்க்கு தண்ணீரின்றி தவிக்கிறது. அத்தனை மழை நீரும் எங்கே போயிருக்கும் என்று கேட்டால், கடலை நோக்கி மட்டுமே கைகள் நீளும்.
அணையில் இருக்கும் தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க ‘தெர்மாகோல்’ போட்ட பேரறிவாளர்களை அமைச்சர்களாகக் கொண்டுள்ள மாநிலம், இது. குளத்துத் தண்ணீரை, நாட்டுக்கருவேலம் குடித்து விட்டதாய் சொல்கிறார்கள், நவீன சூழல்வாதிகள்; ஏரிகளில் சாக்கடையைக் கலந்து விட, ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துக் கொள்கிறது; கண்மாய்த் தண்ணீரையெல்லாம் கரிசல் மண்ணும், காற்றும் உறிஞ்சிக்கொண்டது போலிருக்கிறது.
கொட்டித் தீர்த்த வானத்தை, இப்போது நாம் திட்டித் தீர்த்துக்கொண்டிருக்கிறோம்; தண்ணீரைத் தேக்கி வைப்பது குறித்து, எதையுமே யோசிக்காமல். இயற்கை தந்ததை எல்லாம் இயன்ற மட்டும் சிதைத்து விட்டு, பருவமழைக்காக, உருவங்களை நோக்கி உருக உருக வேண்டிக்கொண்டிருக்கிறோம். இயற்கையோ, இறைவனோ இனி தரப்போகும் மழை நீரைத்
தேக்கி வைக்க நம்மிடம் இருக்கும் அட்சய பாத்திரமென்ன…
அணைகளை, குளங்களைத் துார் வாரலாம்; ஆழப்படுத்தலாம். எல்லாம் எத்தனை நாளைக்குத் தாங்கும்?இதே மண்ணில், ஆண்டுக்கணக்கில், மழைநீரைத் தேக்கி வைக்கிற, சில அரிய பொக்கிஷங்கள் இருக்கின்றன; அவற்றை, நாம் அழித்திருக்கிறோம்; அழித்துக் கொண்டிருக்கிறோம். அவை வேறொன்றுமில்லை; இயற்கை உருவாக்கிய புல்வெளிகளும், சோலைக்காடுகளும், சதுப்பு நிலங்களும் தான்.
நதிகளின் தாய் மடி என்பது, இவற்றை உள்ளடக்கிய காடுகளே. புற்களும், சோலை மரங்களும் வேர்களில் தேக்கி வைத்து, ஆண்டு முழுவதும் சொட்டுச் சொட்டாய் வெளிவிடும் தண்ணீர் தான், ஓடைகளாய், அருவிகளாய்த் தோன்றி, சமவெளியில் நதிகளாய்ப் பாய்கின்றன. மலைக்காடுகள் அழிக்கப்பட்டால், எந்த நதியிலும் தண்ணீர் வராது; துார் வாரினாலும், அணைகளும், குளங்களும் நீர் பார்க்காது.
மலைப்பகுதிகளில் புல்வெளிகளை அழிக்கும் வேலை, இப்போதல்ல; ஆங்கிலேயர் காலத்திலேயே துவங்கி விட்டது; எரிபொருள், கற்பூரத்தைலம் உற்பத்தி, அழகுக்கு என பல காரணங்களைக் கூறி, சீகை, கற்பூரம், சவுக்கு என பல விதமான இறக்குமதி மரங்களை, இந்த புல்வெளிகளின் மீது வளர்த்தெடுத்த பெருமை, ஆங்கிலேயர்களையே சேரும்; காமராசர், கருணாநிதி காலம் வரை, இந்த ‘மேதமைத்தனம்’ தொடர்ந்தது.
விளைவு, புல்வெளிகள் தேக்கும் தண்ணீரை, இந்த மரங்களெல்லாம் உறிஞ்சிக் கொள்ள, ஓடைகள் மடிந்தன; நதிகள் காய்ந்தன; ஆண்டாண்டுகாலமாக ஈரம் காணாது, அணைகள், குளங்கள், நீர் நிலைகள், உருமாறின. இப்போது, நீர் நிலைகளை மீட்பதற்கு, பல்வேறு முயற்சிகள் எடுக்கும் அதேநேரத்தில், இந்த நீர் நிலைகளுக்குத் தண்ணீர் தரக்கூடிய புல்வெளிகளை மீட்பது அதையும் விட அதிமுக்கியம்.
இதெல்லாம் இந்த அரசுக்கு இப்போது தான், லேசாக புரியத் துவங்கி, மண்ணுக்கு ஆகாத இறக்குமதி மரங்களை வெட்டி அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறது; ஆனால், அழிபட்ட புல்வெளிகளை மீண்டும் உருவாக்குவது, சாதாரண விஷயமில்லை; அதை, விஞ்ஞானப்பூர்வமாக ஆய்வு செய்து, வெற்றியும் பெற்றிருக்கிறது, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் ஊட்டி லாரன்ஸ் பள்ளி.
மேற்கு தொடர்ச்சி மலையின் ‘இதயம்’ என்றழைக்கப்படும், நீலகிரி மாவட்டத்தில், 150 ஆண்டுகளுக்கு முன்பு, 900 சதுர கி.மீ., பரப்பில் இருந்த வனப்பகுதியில், 70 சதவீதம் புல்வெளிகளும், 30 சதவீத காடுகளும் இருந்தன. அதில், ஈரப்பதம் நிறைந்த பசுமை மாறா காடுகள், சோலை புல்வெளி, இலையுதிர் மற்றும் முட்புதர் காடுகள், ‘சவானா’ புல்வெளி காடுகள் இருந்துள்ளன.
அதில், ‘தண்ணீர் வங்கி’ எனப்படும், 96 சதவீத ‘டசக்’ ரக புல்வெளிகள், அரை நுாற்றாண்டு காலத்தில் அழிக்கப்பட்டுள்ளன; அவற்றை மீண்டும் அங்கே உருவாக்கும்பொருட்டு, ‘டசக்’ வகை புற்களின் நாற்றுகளை, விதைகள் மூலம் உற்பத்தி செய்து, அதனை வளர்க்கும் முயற்சியிலும் ஜெயித்துள்ளது, ஊட்டி லாரன்ஸ் பள்ளி.
இதற்கு வித்திட்டு வெற்றியும் கண்டவர், ஊட்டியைச் சேர்ந்த வசந்த் பாஸ்கே சாப்ரா, 29.
பின்லாந்தில், சுற்றுச்சூழல் மேலாண்மை பட்டபடிப்பை படித்த இவர், தற்போது, லாரன்ஸ் பள்ளி மாணவர்களைக் கொண்டு, இந்த பள்ளி வளாகத்தில், டசக்’ ரக புற்களை, ஐந்து ஏக்கர் பரப்பில் வளர்த்து எடுத்துள்ளார். இந்த புல், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து நின்று, நீரைத் தேக்கி வைத்து, ‘ஸ்பான்ச்’ போல, காலமெல்லாம் கசிந்து, நீரோடைகளை பிரசவிக்கும் இயற்கை பொக்கிஷம்.
கற்பூர மரம், சவுக்கு மரங்களை அகற்றும் இடங்களில், இந்த புற்களை நடவு செய்தால், இரண்டே ஆண்டுகளில் புதிய புல்வெளி தோன்றும்; ஓடைகள் உயிர் பெறும். நினைத்தபடி இது நிகழ்ந்து விட்டால், இயற்கை பாதுகாப்பில், இது மிக முக்கியமான திருப்பு முனையாக இருப்பது நிச்சயம்.
-நா.பிரதீபன்-
நன்றி தினமலர்