வெளிநாட்டிற்கு காளைகளை அனுப்பிவிட்டு நமது பாரம்பர்ய காளைகளை இழந்து நிற்கிறோம்..!
ஒற்றை ஏர் கூட இல்லாதவன் வாழ வக்கற்றவன்’ என்பது பழமொழி. இதற்கு ஏற்றார் போல விவசாயிகள் வீடு பசுக்களையும், பாரம்பர்ய காளைகளையும் வளர்த்து வந்தனர். பால் மோகம் அதிகமான காலகட்டத்துக்குப் பிறகு நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை குறைத்து வெளிநாட்டு கலப்பின மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தின் போது, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட இறைச்சித் தட்டுப்பாட்டை போக்கிக்கொள்ள தமிழகம், ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட இடங்களில் இருந்து நான்கு வகையான நாட்டுக்காளைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதில் ஓங்கோல், கிர் போன்ற நாட்டுகாளைகளும் அடக்கம். அர்ஜெண்டினா, பிரேசில், பராகுவே, அமெரிக்கா, கொலம்பியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் முதன்முதலாய் இறக்குமதி செய்யப்பட்ட காளைகள் நமது காளைகள்தான். 1854 முதல் 1926 வரை அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 266 காளைகள் மற்றும் 22 பசுக்களை கொண்டு கரு உருவாக்கப்பட்டது. இப்படி இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டு பிறந்த காளைகளை பிரம்மன் அல்லது பிரம்மா மாடு என்றழைக்கப்படுகிறது. இந்த வகை மாடுகள் அளவில் சற்று பெரியதாகக் காணப்படும். அதிக வெப்பத்தை தாங்கும் வல்லமை கொண்டது, இதுமட்டுமல்ல பிற மாடுகளைவிட நீண்ட ஆயுட்காலத்தைக் கொண்டது. இப்படிப்பட்ட பிரம்மன் மாடுகள் உருவாவதற்கு காரணமாக இருந்த ஆந்திரா, குஜராத்தின் ஓங்கோல் காளைகள் வரலாற்று ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
தமிழ்நாட்டின் பொங்கல் திருநாள் இந்தியாவின் மற்ற பகுதிகளில் மகர சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக ஆந்திராவில் மகர சங்கராந்தி மட்டுமல்லாது, மஹா சிவராத்திரி, யுகாதி போன்ற பல பண்டிகைகளிலும் ஓங்கோல் காளைகள் மிகமுக்கிய இடம் பிடித்திருக்கிறது. பொங்கள் திருநாள் போலவே ஆந்திராவில் கொண்டாடப்படும் சங்கராந்தி, ஓங்கோல் காளை இன்றி எந்த பாரம்பரிய விழாக்களும் நிறைவடைவதில்லை. இன்று 10 லட்சம் கொடுத்தாலும் ஓங்கோல் காளைகளை விற்க ஆந்திர விவசாயிகள் தயாராக இல்லை. இன்றைய சூழலில் காளைகள் குறித்து குறிப்பாக நாட்டு மாடுகள் குறித்த புரிதல் நம் அனைவருக்கும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.
ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கவும், மரபுகளை காப்பாற்றவும், வணிக நோக்கில் அழிக்கப்படும் நம் பாரம்பரியங்களையும் மீண்டும் உயிர்பிக்கச் செய்வது நம் கடமை. அன்று இறைச்சிக்காக ஐக்கிய அமெரிக்க நாட்டுகளுக்கு நம் நாட்டுக்காளைகள் கொண்டு செல்லப்பட்டன. ஆனால் இன்று நாட்டுமாடுகள் எது? என்று கேட்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டோம். ஜல்லிக்கட்டிற்கு தமிழகம் கண்ட வரலாற்று போராட்டம்தான் வளரும் தலைமுறையின் ஆயுதம். காளை மாடுகளின் எண்ணிக்கை குறைவது என்பது ஒரு கலாச்சாரத்தினுடைய அழிவின் ஆரம்பம்தான். மாடு சுமந்த ஏர்க்கலப்பைகள் இன்று காட்சிப்பொருட்களாக மறிவிட்டன. நம்முடைய பாரம்பர்யத்தை முழுமையாக அறிந்த நம் முன்னோர்களின் அறிவை உதாசீனப்படுத்திவிட்டோம். இனிமேலாவது நமது மண்ணிற்கு ஏற்ற மரபுவழிக்காளைகளை வளர்க்க முன்வர வேண்டும். 1972-1982 ஆகிய பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட வெண்மைப்புரட்சியின் விளைவால் 1.25 லட்சம் மாடுகள் அழிந்துள்ளன. 1976-1982 ஆகிய ஆறு ஆண்டுகளில் 49% பர்கூர் இன காளைகளும், 18% காங்கேயம் இன காளைகளும் அழிந்துள்ளதாக மத்திய அரசின் கால்நடை கணக்கெடுப்பு விபரங்கள் தெரிவிக்கிறது.
நன்றி