பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம்
இயற்கை இடர்பாடுகள்,வறட்சி,மழையின்மை நீர்த் தேக்கங்களில் நீர் இன்மை போன்ற காரணங்களால் அடிக்கடி விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்படுகிறது.இவ்விழப்பினை ஈடு செய்யும் விதமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய பயிர் காப்பீட்டுத் திட்டமேபிரதமரின் ஃபசல் பீமா யோஜனா (pradhan mantri fasal bima yojana -PMFBY)ஆகும் தற்போது நடைமுறையிலுள்ள தேசிய வேளாண் காப்பீடுத் திட்டம் மற்றும் திருத்தியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் ஆகிய இரு திட்டங்களும் சில குறைபாடுகளை தன்னகத்தே கொண்டிருந்தன.அவற்றிற்கு மாற்றாக பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா- PMFBY அமையும்.அந்தந்த மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் இப்புதிய பயிர் காப்பீடுத் திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.இத்திட்டம் மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகளின் நலனுக்கான அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும்
இதுவரை நடைமுறையிலிருந்த பயிர் காப்பீட்டுத் திட்டங்கள்
*1985-முழுமையான பயிர் காப்பீட்டுத்திட்டம்
*1999-தேசிய வேளாண் காப்பீட்டுத்திட்டம்
*2007-பருவ நிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம்
*2010- திருத்தியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம்
பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா தொடங்க காரணம்
இந்திய வேளாண்மை, எல்-நினோவைத் தொடர்ந்து வரும் வறட்சி மற்றும் ராபிப் பருவத்தில் பருவம் தவறிப் பொழியும் புயல் மழை ஆகிய இரு பிரச்சினைகளுக்கு மத்தியில் உழன்று வருகிறது. இதுபோன்ற பருவநிலை ஏற்றத்தாழ்வுகளின் காரணமாக விவசாயிகளுக்கு ஏற்பாடும் பாதிப்புகளிலிருந்து அவர்களைக் காக்க ஒரு பயிர் காப்பீட்டுத்திட்டம் அவசியமாகிறது.மேலும் தற்சமயம் இந்தியாவின் மொத்த பயிர் சாகுபடிப் பரப்பான 194.4மில்லியன் எக்டேரில் சுமார் 25%மட்டுமே பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ளது.இதை 50%பயிர் சாகுபடிப் பரப்பிற்கு அதிகப்படுத்தும் நோக்கத்திலேயே இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது இத்திட்டத்திற்காக எதிர்பார்க்கப்படும் செலவு சுமார் ரூபாய் 9500 கோடிகள் ஆகும்
பிரதமரின் ஃபசல் பீமாயோஜனா -நோக்கங்கள்
*இயற்கைப் பேரழிவுகள்,பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களால் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களில் சேதம் ஏற்படும் போது விவசாயிகளுக்கு காப்பீடு வழங்குவது மற்றும் நிதியுதவி செய்வது.
*விவசாயிகள் தங்கள் தொழிலைத் தொடரும் பொருட்டு அவர்களின் வருமானத்தை நிலைப்படுத்துவது.
*மேம்படுத்தப்பட்ட நவீன வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகள் கடைபிடிப்பதை ஊக்குவிப்பது.
*வேளாண் தொழிலுக்கு கடன் வசதி கிடைப்பதை உறுதி செய்வது.
பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா -சிறப்பம்சங்கள்
தற்போது நடைமுறையிலுள்ள காப்பீட்டுத் திட்டங்ககளைக் காட்டிலும் குறைவான பிரிமியம் விவசாயிகளின் வருமானத்தின் மீதான காப்பீடு புவிசார் குறியீடுகள் தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் போன்ற நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி பயிர் சேதங்களை கணக்கிடுவதன் மூலம் காப்பீடு கேட்புகள் விரைவாகவும் எளிதாகவும் நேர் செய்யப்படுதல் போன்ற பல சிறப்பியல்புகளை கொண்ட பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா -பயிர்க் காப்பீட்டுஇத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு.
*ஒரு மாநிலத்தில் ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்படும் ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டம் இந்திய வேளாண்மை காப்பீட்டுக் கழகம் (Agricultural insurance company of India Ltd.)என்ற நிறுவனத்தால் செயல்படுத்தப் படவுள்ளது
*தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் குறுவட்டம் அல்லது வட்டமாக இருந்த காப்பீட்டு வரையறை (Unit of insurance) இத்திட்டத்தில் முக்கிய பயிர்களுக்கு வருவாய் கிராமமாக மாற்றப்பட்டுள்ளது.இதரப் பயிர்களான கம்பு,சோளம், ராகி உள்ளிட்ட பயிர்களுக்கு குறுவட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
*ரபி பருவத்திற்கு அறிவிக்கப்படும் கிராமங்களில் நெல்,மக்காச்சோளம்,துவரை,உளூந்து,பாசிப்பயறு,நிலக்கடலை,வாழை,மரவள்ளி,மற்றும் வெங்காயம் போன்ற பயிர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.அறிவிக்கப்படும் குறுவட்டங்களில் சோளம்,கம்பு,ராகி,தட்டை,எள் மற்றும் சூரியகாந்தி பயிர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
*இத்திட்டத்தில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட காப்பீட்டு பருவ வரையறைக் காலம் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே வகையான காலக்கெடு
* பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்கலாம் கடன் பெறும் விவசாயிகள் கட்டாயத்தின் அடிப்படையிலும்,கடன் பெறா விவசாயிகள் விருப்பத்தின் பேரிலும் பங்கேற்கலாம்.
*தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் அறுவடையின் போது கணக்கிடப்படும் பயிர் இழப்பிற்கு மட்டும் இழப்பீடுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இப்புதிய காப்பீட்டுத் திட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு,
*விதைப்பு பொய்த்தல்/நடவு செய்ய இயலாத சூழல்.
*பயிர் காலத்தில் ஏற்படும் இடர்பாடுகள்,வெள்ளம்,வறட்சி,வறண்ட வானிலை வெள்ள நீர் தேக்கமடைதல் மற்றும் பூச்சி நோய் தாக்குதல்.
*பயிர் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்புகள்,சிறு பகுதிகளில் மட்டும் ஏற்படும் இடர்பாடுகள் புயல்காற்று,நிலச்சரிவு,வெள்ள நீர் தேக்கம் போன்ற இழப்புகள் என பயிர் சாகுபடி செய்யத் துவங்கும் காலத்தில் இருந்தே இழப்பீடுகள் பெறலாம்.
*காப்பீடு துவக்க காலம்,நிர்ணயிக்கப்பட்ட குறைந்த காலக்கெடு வரை மட்டும் (பருவம் துவங்கும் முன் அல்லது நடவு முடிந்தவுடன் பதிவு செய்ய வேண்டும்)
*முன்று இழப்புறுதி நிலைகள் (Indemnity level)-70%,80%,90% முறையே அதிக சராசரி மற்றும் குறைந்த இடர்பாட்டு நிலை என மூன்று வகைகளாக கடந்த காலங்களில் ஏற்பட்ட நிகழ்வினைப் பொறுத்து பிரிக்கப்படுகிறது.
*ஈரோடு மாவட்டம் மிதமான பாதிப்புக்குள்ளாகும் மாவட்டமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் இழப்புறுதி நிலை 90%நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
*உத்திரவாத மகசூல் என்பது சராசரி மகசூலினை இழப்புறுதி நிலையால் பெருக்கி கணக்கிடப்படுகிறது.சராசரி மகசூலானது கடந்த 7ஆண்டுகளில் இயற்கை இடர்பாடுகளினால் பாதிக்கப்பட்டு குறைவான மகசூல் பெறப்பட்ட இரண்டாண்டுகள் நீங்கலாக ஏனைய 5ஆண்டுகளில் பெறப்பட்ட மகசூல் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
*வருவாய் கிராமத்திற்கு பயிர் ஒன்றுக்கு நான்கு பயிர் அறுவடைப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் பயிர் இழப்பு கணக்கிடப்படுகிறது.
*காப்பீட்டுக் கட்டணம் (premium)வணிக முறையில் கணக்கிடப்படுகிறது எனினும் விவசாயிகள் செலுத்த வேண்டிய காப்பீட்டுக் கட்டணம் காரிப் பருவத்தில் காப்பீட்டுத் தொகையில் 2% ஆகவும், ராபி பருவத்தில் காப்பீட்டுத் தொகையில் 1.5% ஆகவும் வர்த்தக மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகையில் 5%ஆகவும் நிலைப்படுத்தப்பட்டுள்ளது.
*கணக்கிடப்படும் காப்பீட்டுக் கட்டணத்தில் விவசாயிகள் செலுத்த வேண்டிய கட்டணம் போக மீதித் தொகை மத்திய மற்றும் மாநில அரசுகளால் சரிசமமாக ஏற்கப்பட வேண்டும்.
*காப்பீட்டுக் கட்டண மானியம் (Premium subsidy)-வணிக ரீதியாக கணக்கிடப்படும் காப்பீட்டுக் கட்டண விகிதம் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடும்.பேரிடர் நிகழ்வுகளுக்கு தொடர்ந்து உள்ளாகும் மாவட்டங்களில் அதிக மானியமும் மற்ற மாவட்டங்களில் குறைந்த மானியமும் அனுமதிக்கப்படுகிறது.
*காப்பீட்டுத் தொகை (Sum insured)-உண்மையான பயிர்க் கடன் தொகை அல்லது குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட உத்திரவாத மகசூலின் மதிப்பு வரை.
*பருவம் துவங்கும் முன்,காப்பீட்டு நிறுவனத்தால் கோரப்படும் உத்தேச மானியக் கோரிக்கைப் பட்டியலின் அடிப்படையில் 50%காப்பீட்டு கட்டண மானியத்தை மாநில அரசு காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும்.மீதத்தை அந்தந்த பருவத்திலேயே அளித்திட வேண்டும்.
*வருவாய் கிராம அளவில் நடத்தப்படும் பயிர் அறுவடைப் பரிசோதனை முடிவுகள் கடந்த ஏழு ஆண்டுகளில் குறைந்த மகசூல் பெற்ற இரு ஆண்டு களைத் தவிர்த்து கணக்கிடப்பட்ட சராசரி முடிவுகளுடன் ஒப்பிட்டு இழப்பீட்டுத் தொகை கணக்கிடப்படுகிறது.
*பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை முழுவதும் காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படும்.இழப்பீட்டுத் தொகையில் மத்திய,மாநில அரசுகளின் பங்கு இல்லை.தேசிய அளவில் கணக்கிடப்படும் இழப்பீட்டுத் தொகையில் 350%வரை காப்பீட்டு நிறுவனமே ஏற்கும்.
*இழப்பீடு வழங்கும் முறை மற்றும் காலம்
*பருவம் துவங்கும் முன் மழை பொய்த்தாலும்,விதைப்பிற்குப் பின் மழை பொய்த்தாலும் ஏற்படும் இழப்புகளுக்கு காப்பீட்டு தொகையில் 25%வரை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
*அறுவடைக்குப் பின் வயலில் தானியங்களை காயவைக்க வேண்டியுள்ள பயிர்களுக்கு,அறுவடைக்குப் பின் ஏற்படும் வெள்ளம்,பருவம் தவறிய மழை,புயல் போன்ற இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பு களுக்கு இழப்பீடு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
*புள்ளியியல் துறையிலிருந்து அறுவடை முடிவுகள் பெற்ற 60நாட்களுக்குள் இழப்பீடு வழங்க கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து பயன்பெற வேளாண் துறை சார்ந்த பயிர்களான நெல்,பயறுவகை,எண்ணெய்வித்துக்கள்,சிறுதானியங்கள்,பருத்தி போன்ற பயிர்களுக்கு வேளாண்மைத் துறை அலுவலர் களையும்,தோட்டக்கலைத் துறைப் பயிர்களான வாழை,மிளகாய்,வெங்காயம்,மரவள்ளி,உருளைக்கிழங்கு போன்ற பயிர்களுக்கு தோட்டக்கலைத் துறை அலுவலர்களையும் அணுகி விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.மேலும் விண்ணப்பப் படிவம் மற்றும் வங்கி சலான்களை சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளிலும்/தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் பெற்றுக்கொள்ளலாம்
நன்றி உழவர் முரசு