பாக்டீரியல் வாடல் நோயால் பாதிக்கப்பட்ட செடிகள், கழிவுகளை எரித்து அழிக்க வேண்டும்
பாக்டீரியல் வாடல் நோயால் பாதிக்கப்பட்ட செடிகள், செடிக் கழிவுகளை எரித்து அழிக்க வேண்டும் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, திருவரங்குளம் மற்றும் புதுக்கோட்டை வட்டாரங்களில் கத்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது பாக்டீரியல் வாடல் நோய் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.
இந்நிலையில், தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிலைய தலைவர் ஞானமலரின் அறிவுரைப்படி வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை, பயிர் நோயியல் விஞ்ஞானி மதியழகன் ஆகியோர் நோய்த் தாக்குதல் குறித்த கள ஆய்வை மேற்கொண்ட பின்னர் கூறியதாவது:
நோயால் பாதிக்கப்பட்ட கத்திரி செடியில் நுனி இலைகளும், நுனித்தண்டு பகுதியும் முதலில் வாடி வதங்கி காணப்படும். இந்நோய் செடியின் அனைத்து வளர்ச்சி பருவத்திலும் ஏற்படலாம். இந்நோய் பாதிக்கப்பட்ட செடிகள் வயல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாட தொடங்கும். பாதிக்கப்பட்ட செடி தளர்ந்து வாடி சரியாக நீர் பாய்ச்சாதது போன்று தோற்றமளிக்கும். நோயின் அறிகுறி தென்பட்டவுடன் 3 முதல் 5 நாட்களுக்குள் செடி பட்டுப் போய்விடும். நோயுற்ற செடிகளின் தண்டுப் பகுதியை நீளவாட்டில் வெட்டினால் உள்ளே உள்ள திசுக்கள் பழுப்பு நிறமாக மாறியிருப்பதை காணலாம். பாதிக்கப்பட்ட செடியின் தண்டு மற்றும் வேர் பகுதியில் இறுதியில் வெள்ளை நிற பாக்டீரியா கசிவைக் காணலாம்.
நோய் காரணிகளான பாக்டீரியா பாதிக்கப்பட்ட செடிகளின் கழிவுகளில் 10 மாதங்கள் வரை உயிர் வாழும். இந்நோய் மிளகாய், இஞ்சி, உருளை, முள்ளங்கி, வாழை பயிர்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
பயிர் சாகுபடி செய்யாத காலங்களில் பாக்டீரியா நோய்க் காரணி களைச் செடியின் வேர்களில் தங்கியிருந்து பயிர் சாகுபடி செய்யப்படுகிறபோது தாக்கி பயிர் இழப்பை ஏற்படுகிறது. கத்திரி தோட்டத்தில் வேர் முடிச்சு நுற்புழுவின் தாக்குதல் இருந்தால் இந்நோயின் தீவிரம் அதிகரித்து பயிர் இழப்பு ஏற்படும். இந்த நோய் பாதிக்கப்பட்ட செடிகள் செடிக் கழிவுகளை எரித்து அழிக்க வேண்டும்.
வயலில் நல்ல வடிகால் வசதி செய்து நீர் தேங்காதவகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். வயலில் களை செடிகள் இல்லாதவாறு சுத்தமாக பராமரிக்க வேண்டும். கத்திரி நாற்றுகளை தேர்வு செய்யும் பொழுது பாக்டீரியா வாடல் நோய் பாதிக்கப்படாத நாற்றங்காலில் இருந்து தேர்வு செய்ய வேண்டும். கத்திரி நடவு வயலில் மக்கிய தொழுஉரம் 100 கிலோ ஒரு ஏக்கருக்கு இடுவதன் மூலம் மண்வளம் பெருகி நோய் காரணிகளின் எண்ணிக்கை குறையும்.
நோய் பாதிக்கப்பட்ட வயல்களில் கத்திரியை மீண்டும் பயிரிடுவதை தவிர்க்க வேண்டும். நோய் பாதிக்கப்பட்ட வயலில் தக்காளி, உருளை, வாழை, மிளகாய், அவரை, முள்ளங்கி போன்ற பயிர்களை பயிரிடுவதை தவிர்க்க வேண்டும் என்றனர்.நன்றி:தினமணி