தீவனப் பற்றாக்குறை: கால்நடைகளுக்கு உணவாகும் கழிவுப் பஞ்சு
வெள்ளக்கோவில் பகுதியில் தீவனப் பற்றாக்குறையால் கால்நடைகளுக்கு உணவாகக் கழிவுப் பஞ்சு கொடுக்கப்படுகிறது.
இப்பகுதியில் கறவை மாடு, எருமை, செம்மறி ஆடுகள் வளர்ப்பு முக்கியத் தொழிலாக உள்ளது. மழை இல்லாததால், இப்பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. இதனால், கால்நடைகளுக்கான பசுந்தீவன உற்பத்தி குறைவிட்டது. மேலும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டுசெல்லும் காடுகளில் தீவனம் இல்லாததால், கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வெளியூர்களில் கிடைத்து வந்த சோளத்தட்டு, நிலக்கடலைக் கொடி, வைக்கோல், மக்காச்சோளத் தட்டு ஆகியவற்றின் விலை அபரிதமாக உயர்ந்து விட்டது. போதுமான அளவுக்கு கிடைப்பதும் இல்லை. இந்நிலையில், கால்நடைகளுக்கு உணவாக கழிவுப் பஞ்சு கொடுக்கப்படுகிறது. கோவை, திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களில் நூற்பாலைகள், பஞ்சு அரவை மில்கள் அதிக அளவில் உள்ளன.
இந்த நூற்பாலைகளின் முதல்தர கழிவுப் பஞ்சு ஓபன் எண்ட் (ஓ.இ) நூற்பாலைகளுக்குப் பயன்படுகிறது. ஃபிளை காட்டன் எனப்படும் இரண்டாம் தரக் கழிவுப் பஞ்சு கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. கழிவுப் பஞ்சு குடோன்களில் டன் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் விலை வரையில் இரண்டாம் தரக் கழிவுப் பஞ்சு கிடைக்கிறது.
இது குறித்து கால்நடை மருத்துவர் பழனிசாமியிடம் கேட்ட போது, முழு உணவாகக் கழிவுப் பஞ்சு மட்டுமே தரக்கூடாது. தண்ணீரில் ஊற வைத்து, நச்சுப் பொருள்கள், சிறிய ஆணிகள் போன்றவை நீக்கிய பின்னர் கொடுக்கலாம். கால்நடைகளுக்கு இதைக் கொடுப்பதால், வயிற்றுப் போக்கு, பால் உற்பத்திக் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
சிறு உலோகப் பொருள்கள் வயிற்றுக்குள் சென்றால் உயிரிழப்பும் ஏற்படலாம். எனவே, கழிவுப் பஞ்சை தினமும் குறிப்பிட்ட அளவு மட்டுமே தர வேண்டும் என்றார்
நன்றி: தினமணி
Good initiative …….