பட்டுப் புழு, மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம்
காஞ்சிபுரம்: பட்டுப் புழு மூலம் பட்டுக் கூடு தயாரிப்பதாலும், அதற்குத் தேவையான மல்பெரி செடிகளை உற்பத்தி செய்வதன் மூலமும், ஏக்கர் ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்துக்கும் குறையாத லாபம் பெற முடியும் என்று பட்டுப் பண்ணை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் அருகே விச்சந்தாங்கல் பகுதியில் அரசின் பட்டுப் பண்ணை இயங்கி வருகிறது. இந்தப் பண்ணையில் 1,30,000 மல்பெரி செடிகள் உள்ளன. இந்தப் பண்ணை மூலம் பட்டுப் புழு உற்பத்தி செய்வது தொடர்பாக 24 நாள் பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது. பயிற்சி பெறும் விவசாயிகளுக்கும், பட்டுப் புழு வளர்க்க விரும்பும் விவசாயிகளுக்கும் பட்டுப் புழு, மல்பெரி செடி நாற்றுகள் விற்கப்படுகின்றன.
பட்டுப் புழு உற்பத்தியில் ஈடுபட விரும்புபவர்களுக்கு அரசின் மூலம் பல்வேறு மானிய உதவிகளும் பெற்றுத் தரப்படுகின்றன. இவற்றை முறையாகப் பயன்படுத்தி விவசாயிகள் பட்டுப் புழுக்களையும், அதற்குத் தேவையான மல்பெரி செடிகளையும் வளர்த்து அதிக லாபம் ஈட்டலாம் என்று பட்டுப் பண்ணை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முதலில் பட்டுப் புழுக்களை வளர்க்க வேண்டுமானால் மல்பெரி செடிகளை வளர்க்க வேண்டும். மல்பெரி நாற்றுகள் காஞ்சிபுரம் விச்சந்தாங்கல் பகுதியில் உள்ள அரசுப் பட்டுப் பண்ணைகளில் கிடைக்கிறது. இதுபோல் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பட்டுப் பண்ணைகளிலும் கிடைக்கின்றன. ஒரு செடி ரூ. 1.50 என்ற விலையில் கிடைக்கிறது. ஒரு ஏக்கருக்கு 5,240 செடிகள் தேவைப்படும். இந்தச் செடிகளை வாங்கி வந்து நட்டு, மூன்று மாதங்கள் வளர்க்க வேண்டும். முதல் மூன்று மாதங்கள் வளர்த்தால், அவை பட்டுப் புழுவுக்கான உணவாக தயாராகிவிடும். இவை 30 ஆண்டுகளுக்கு தொடர்ந்து வளர்ந்து பயன் கொடுக்கக்கூடியவை ஆகும்.
இந்த மெல்பெரி செடி வளர்ப்பதற்கு 60 நாள்கள் ஆகும்போதே பட்டுப்புழு வளர்ப்பதற்கான ஒரு கூரைக் கொட்டகையையும், அலமாரிகள் போன்று சட்டங்களை போட்டு படுக்கைகளையும் (ரேக்) அமைக்க வேண்டும். 8 முதல் 10 நாள்கள் வளர்ந்த பட்டுப் புழுக்கள் அந்தந்த அரசு பட்டுப் பண்ணைகளிலேயே கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டு வந்து, அந்த ரேக்குகளில் விட்டு வளர்ந்துள்ள மல்பெரி செடிகளை அதன் மேல் போட வேண்டும். அதனை பட்டுப் புழுக்கள் உண்ண ஆரம்பிக்கும். முதலில் குறைவாக உண்ணும் புழுக்கள் 20 நாள்களை நெருங்கும்போது அதிக அளவில் உண்ணுவதுடன் 24 நாள்கள் கடந்த பின் கூடு கட்டும். அந்த கூடுகள்தான் பட்டு நூலுக்குத் தேவையான மூலப்பொருளாகும். ஒரு ஏக்கர் மல்பெரி செடிக்கு தேவையான புழுக்களை வளர்ப்பதன் மூலம், மாதம்தோறும் 100 கிலோ கூடுகளை எடுக்க முடியும்.
ஒரு கிலோ பட்டுக் கூடுகள் ரூ. 920-க்கு தற்போது விற்பனை செய்யப்படுகின்றன. இதன்மூலம் மாதத்துக்கு ரூ.92 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. செலவு, ஆட்கள் கூலி ஆகியவை கழிக்கப்பட்டால் கூட மாதம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரத்துக்கு குறைவில்லாத வருமானம் கிடைக்கும் என்று பட்டுப்புழு வளர்ப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் விச்சந்தாங்கல் பட்டுப்பண்ணை ஆய்வாளர் அலெக்ஸாண்டரிடம் கேட்டபோது அவர் கூறியது:
பட்டுப் புழு வளர்ப்பதற்கு முதலில் மல்பெரி செடி வளர்ப்பது, கொட்டகை அமைப்பது ஆகியவற்றுக்குத்தான் அதிக செலவு ஆகும். ஆனால் அதற்கும் அரசு சார்பில் பல்வேறு மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக 1,000 சதுர அடியில் கொட்டகை அமைப்பவர்களுக்கு ரூ.87,500 மானிய உதவி அளிக்கப்படுகிறது. இதை அமைப்பதற்கு மொத்தம் ரூ.1.5 லட்சம் செலவாகும். இதேபோல் மருந்துகள், மோட்டார் உள்ளிட்டவற்றுக்கும் மானிய உதவிகள் அளிக்கப்படுகின்றன. ஒரு முறை செலவு செய்துவிட்டால், மாதம்தோறும் வருமானம் கொடுக்கும். இந்த பட்டுக் கூடுகளை அரசே கொள்முதல் செய்வதால் விற்பனையில் எந்தச் சிக்கலும் இல்லை. இந்தக் கூடுகளில் இருந்து தான் பட்டு நூல்கள் தயாரிக்கப்படுகினறன.
தற்போது பட்டுக் கூடுகள் கிலோ ரூ.920-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
ஒரு ஏக்கரில் மல்பெரி செடி வளர்த்து, அதில் உள்ள தழைகள் மூலம் பட்டுப் புழு வளர்த்தால் 1,600 கிலோ பட்டுக் கூடுகள் எடுக்க முடியும். இது விலை மிகவும் குறைந்து கிலோ ரூ.200-க்கு எடுக்கப்பட்டு, 100 கிலோ எடுக்க முடிந்தால் கூட ஏக்கரில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வருமானம் கிடைக்கும். ரூ. 80 ஆயிரம் செலவு போனால் கூட, ரூ. 1.2 லட்சம் லாபம் கிடைக்கும். இது விவசாயிகளுக்கு லாபகரமான தொழிலாகும். உடுமலைப்பேட்டை போன்ற இடங்களில் அதிகம் பட்டுக்கூடு உற்பத்தி செய்கின்றனர். இதற்குத் தேவையான பயிற்சிகளை, காஞ்சிபுரம் பட்டுப் பண்ணை மூலம் அளிக்க தயாராக உள்ளோம். பயிற்சி பெற விரும்பும் விவசாயிகள், 94458 38713 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.
நன்றி
தினமணி