மரபணு மாற்று கரும்பு
மத்திய அரசின் முதன்மை வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனமான ஐ.சி.ஏ.ஆர் (ICAR), வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மரபணு மாற்று கரும்பை உருவாக்க முடிவு செய்துள்ளது. முன்னாள் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாருக்கு சொந்தமான கரும்பு ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து, இந்த மரபணு மாற்று கரும்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறைந்த தண்ணீரில் வளரக்கூடிய மரபணு மாற்று கரும்பு ரகம்
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி, “வறட்சியைத் தாங்கியும், குறைந்த தண்ணீரில் வளரக்கூடியதாகவும் இருக்கும்படி இந்த மரபணு மாற்று கரும்பை உருவாக்க இருக்கிறோம். இதுவே இறுதி முடிவு இல்லை. இதுவொரு நீண்ட கால செயல்முறை. இதை சோதனை முறையிலும், வர்த்தக ரீதியிலும் பயிர் செய்யும்போது ஏற்படக்கூடிய விளைவுகள் உள்ளிட்ட விஷயங்களையும் கவனத்தில் கொண்டே இது நடைமுறைக்கு வரும். இந்த பயிருக்கு மட்டுமில்லை, இந்தியாவில் வெளியிடப்படும் எந்தவகையான மாற்று தொழில்நுட்ப பயிர்களுக்கும் இதை கருத்தில் கொள்வோம்” என்றிருக்கிறார்.
சமீபத்தில் மரபணு மாற்று கடுகு கொண்டு வருவதற்கு எதிர்ப்பு கிளம்பி வந்தது. ஆனால், கள சோதனையில் இந்த ரகம் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உடையாதாகவும், நேர்மறையான முடிவை அளித்துள்ளது. இந்த காரணங்களால் டெல்லி பல்கலைக்கழகம் இதை பயன்படுத்த கிரீன் சிக்னல் காட்டியுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆதாரங்களோடுதான் ஏற்றுக் கொள்வோம்
” மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் நிலவி வரும் கடும் வறட்சியை கருத்தில் கொண்டே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கரும்பை வறட்சி காலத்தில் தாங்கும் திறனுள்ளதாகவும், அந்தந்த கிராம அழுத்தங்களை தாங்கக் கூடியதாகவும், பொருளாதார ரீதியாகவும், சுற்றுச்சூழலுக்கு உதவுவதாகவும் இந்த மரபணு மாற்று கரும்பு இருக்கும். இந்த கரும்பினால் விளையும் பலன்களை உரிய ஆதாரங்களோடு மட்டுமே ஏற்றுக் கொள்வோம்.
மரபணு மாற்று கரும்பும் ஒரு சோதனை முயற்சியே. இந்த சோதனையின் முடிவு எப்படி இருந்தாலும், இதற்குமேல் மத்திய சுற்றுச்சூழல் துறையின் மரபணு மாற்று இன்ஜினீயரிங் அப்ரைசல் குழு ஒன்று இருக்கிறது. இந்த அமைப்பு அனுமதித்தால் மட்டுமே அது பயன்பாட்டுக்கு வரும். முன்பு பி.டி கத்திரிக்காயின் சோதனைக்கு பிறகு வர்த்தக ரீதியாக பயன்படுத்த இந்த அமைப்பு அனுமதிக்கவில்லை. அதைபோலதான், இதையும் பல சோதனைகளுக்கு பிறகே பயன்பாட்டுக்கு கொண்டு வர இருக்கிறோம்” என்று தெரிவித்து வருகின்றனர் விஞ்ஞானிகள்.
மரபணு மாற்று பயிர்கள் சார்ந்த மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு இயற்கை ஆர்வலர்கள், சுற்றுச்சூழலியலாளர்கள் மற்றும் ஆன்மீக அமைப்புகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்து உள்ளன.
மரபணு மாற்று தொழில்நுட்பத்துக்கு துணைபோகிறவர் சரத் பவார் ‘
இதுகுறித்து பேசிய பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து, “கரும்பு என்பது பணப்பயிரே கிடையாது. கரும்பு பயிரிட்ட இடங்களில் எல்லாம் ஆலை முதலாளிகள் மட்டுமே வளர்ந்திருக்கிறார்கள். விவசாயிகள் யாரும் வளரவில்லை. நம் மண்ணின் நிலத்தடி நீரையும், விவசாயிகளின் உழைப்பையும் சுரண்டியதுதான் கரும்பின் சாதனை. கர்நாடகாவில் கரும்பு பயிர் செய்யும் விவசாயிகள்தான் அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
மஹாராஷ்ட்ராவில் பெரும் வறட்சி நிலவுகிறது. தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. அதனால்தான் மரபணுமாற்று கரும்பை கொண்டு வருகிறோம் என்றால், தப்பான பயிரில் திரும்பவும் மாற்றம் கொண்டு வருவது நம் கண்ணை நாமே குத்திக் கொள்வது போன்றதுதான். சரத் பவார் ஏற்கெனவே மரபணு மாற்று தொழில்நுட்பத்துக்கு துணை போகிறவர்தான். அவரோடு சேர்ந்து இந்த ஆராய்ச்சி பணிகளை செய்வது ஆலை முதலாளிகளுக்கே சாதகமாக இருக்கும்.
நாட்டு ரகங்களுக்கே நல்ல விற்பனை சந்தை உள்ளது
இன்னொன்று கரும்பில் மரபணு மாற்று தொழில்நுட்பத்தை கொண்டுவருவது தேவையற்ற ஒரு வேலை. அதனால் பயன் ஒன்றும் ஏற்படப் போவதில்லை. இதற்கு முன்பு பருத்திக்கும் இப்படி சொல்லிதான் பி.டி பருத்தி கொண்டு வந்தார்கள். இன்று பி.டி பருத்தியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யமுடியாத நிலையில் வர்த்தகமே பாதிக்கப்பட்டு நிற்கிறது. மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையம், நாட்டு பருத்தி விதைகளை தேடி போய்க் கொண்டிருக்கிறது. பருத்தியில் மட்டுமில்லை, விவசாயத்தில் நாட்டு ரகங்களுக்கு நல்ல விற்பனை சந்தை உருவாகி வருகிறது. அதை மேம்படுத்துவதை விட்டுவிட்டு, பன்னாட்டு நிறுவனங்கள் கொண்டு வருகிற தொழில்நுட்பத்தில் போய் விழுந்து கொண்டிருக்கிறோம். இதில் நமக்கு தோல்வியே கிடைக்கும். சரத் பவார் போன்ற ஆட்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. பிரச்னைகள் எல்லாம் விவசாயிகளுக்குத்தானே. மரபணு மாற்று தொழில்நுட்பத்துக்கு பின்னணியில் இருக்கும் உண்மைகளை விஞ்ஞானிகள் விளக்க வேண்டும். சிறு, குறு விவசாயிகள் பலனடையும் தொழில்நுட்பமும், திட்டங்களுமே தற்போதைய தேவை. இதை ஆட்சியாளர்கள் முதலில் உணர வேண்டும்” என்றார் ஆவேசமாக.
பா.ஜ.க.வின் நிலைப்பாடு
இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை விமலநாதனிடம் பேசியபோது, “மரபணு மாற்று கத்திரிக்காயை கொண்டு வரக்கூடாது என்று போராடிய பா.ஜ.க.வே இன்று கடுகு, கரும்பு பயிர்களுக்கு மரபணு மாற்று தொழில்நுட்பத்தை கொண்டு வருகிறது. ஆட்சியில் இருக்கும் போது ஒரு நிலைப்பாடு, ஆட்சியில் இல்லாதபோது ஒரு நிலைப்பாடு என்று மாறி மாறி பா.ஜ.க செயல்படுவது வருத்தம் அளிக்கிறது. ஏற்கெனவே நம்முடைய பல்கலைக்கழங்களும், கரும்பு ஆராய்ச்சி நிலையங்களும் கண்டுபிடித்த கரும்பு ரகங்களே இங்கே நிறைய இருக்கின்றன. இவை அதிக மகசூல் கொடுக்கக்கூடிய, இந்த மண்ணுக்கும், தட்பவெப்பநிலைக்கும் பொருந்தி போகிற ரகங்களாக இருக்கின்றன. இந்த ரகத்திலேயே, கர்நாடக கரும்பு விவசாயி ராஜே கவுடா என்பவர், 112 டன் மகசூல் எடுத்துள்ளார்.
சொட்டுநீர் பாசனத்திலேயே கரும்பை சாகுபடி செய்யலாம்
இப்போது குறைந்த தண்ணீரில், வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய ரகங்களை உருவாக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கிறார்கள் விஞ்ஞானிகள். ஏற்கெனவே சொட்டுநீர் பாசனத்தில் விவசாயிகள் சிறப்பாக கரும்பை சாகுபடி செய்து வருகிறார்கள். இதற்காக கோடிக்கணக்கில் மானியங்களை வழங்கி வருகிறது மத்திய அரசு. இப்போது மஹாராஷ்ட்ரா வறட்சியைக் காரணம் காட்டி, மரபணு மாற்று கரும்பை கொண்டு வர இருக்கிறார்கள். கார்ப்பரேட் கம்பெனிகளின் நெருக்கடிக்கு பணிந்து விவசாயிகளுக்கு கெடுதல் விளைவிக்கும் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு வருவது வருத்தமாக இருக்கிறது.
எழுபது ஆண்டுகளாக பயிர் செய்யப்பட்டு வரும், நம்முடைய நாட்டு ரகங்கள், அதிலிருந்து உருவாக்கப்பட்ட ஆராய்ச்சி ரகங்கள் எல்லாம் வறட்சியை தாங்கி வளரக்கூடியவைதான். நம் மண்ணின் கரும்பு ரகங்கள் செய்யாததையா, மரபணு மாற்று கரும்பு செய்துவிட போகிறது.
ஏதோவொரு பன்னாட்டு கம்பெனி பலன் பெறுவதற்கு, மரபணு மாற்று தொழில்நுட்பத்தை நியாயப்படுத்தி சொல்லி கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய தேர்தல் அறிக்கையிலே, ‘மரபணுமாற்று தொழில்நுட்பத்தை இந்தியாவில் கொண்டு வரமாட்டோம்’ என்று சொல்லிய பா.ஜ.க.வே, இந்த நிலைப்பாடு எடுத்து வருவது அதிர்ச்சியாக இருக்கிறது” என்றார்.
த.ஜெயகுமார்
நன்றி: ஆனந்த விகடன்