ஆரோக்கியமான உணவுக்கு சிறந்த மாற்று இயற்கை விவசாயமே…
Date February 25, 2016 Author By admin Category இயற்கை உரம்/மருந்து
ரசாயன உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி நச்சுத் தன்மை உள்ள விளைபொருள்களை உண்ண வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால் மனித இனம் நோய் குடியிருக்கும் இடமாக மாறிவிட்டது. இதற்கு ஒரே மாற்று இயற்கை விவசாயம் மட்டும்தான் என்பதைத் தற்போது பல்வேறு நிலைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றால் அது மிகையில்லை.
நம் நாட்டில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க, பல்வேறு தொழில் நுட்பங்களைப் பசுமைப் புரட்சியின் மூலம் செயல்படுத்தத் தொடங்கினோம். இதனால், பல ஆயிரம் ஆண்டுகளாக அனுபவ ரீதியாக நம் முன்னோர்கள் கண்டுபிடித்து, கடைப்பிடித்து பாதுகாத்து வந்த பாரம்பரிய வேளாண் முறைகளையும், விதை வகைகளையும், கடந்த 50 ஆண்டுகளில் இழக்க நேரிட்டது. குறுகிய காலத்தில் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற ஆர்வ மிகுதியாலும், கூடுதல் வருவாய் ஈட்ட வேண்டும் என்ற வேகத்தினாலும், மண் வளத்தையும், நீர் வளத்தையும் சீரழிவின் விளிம்பிற்குத் தள்ளிவிட்டோம். ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி நச்சுத் தன்மை உள்ள விளைபொருள்களை உண்ண வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு நோய் குடியிருக்கும் மனிதர்களாக மாற்றப்பட்டுள்ளோம்.
விவசாயிகள் தனக்கும் சமுதாயத்துக்கும் ஆரோக்கியமான உணவினை உற்பத்தி செய்யக்கூடிய தலைசிறந்த பொறுப்புள்ளவர்களாகின்றனர். ஆனால் இந்த நிலை மாற்றப்பட்டு விவசாயி தனக்கும் இந்தச் சமுதாயத்துக்கும் நஞ்சு கலந்த உணவை விளைவிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டனர். இதனால், ரசாயன விவசாய முறைகளைத் தொடாந்து பயன்படுத்தியதால் நமது நிலங்கள் உயிரற்ற மண்ணாக மாறிப்போனது. நில வளமும் குன்றி சீரழிந்த நிலையில், சுற்றுச்சூழலும் மாசடைந்து, மண்ணின் கார்பன் அளவு குறைந்து (1.75 சதவிகிதம் இருக்க வேண்டிய மண் கார்பன், 0.3 சதவீதமாக உள்ளது) பூமியும் வெப்பமடைந்து கொண்டே இருக்கிறது.
விவசாயம் விவசாயிகளைச் சார்ந்ததாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், ஆரோக்கியமான உணவை உற்பத்தி செய்யக்கூடியதாகவும், நிலவளத்தை மேம்படுத்துவதாகவும், இடுபொருள் செலவைக் குறைப்பதாகவும் உள்ள முறைகளே நம் விவசாயிகளுக்கு இன்று தேவை. இதற்கான பணிகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோஸ் தொண்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
மூலிகைப் பூச்சி விரட்டி: உழவர்கள் காலங்காலமாக கடைப்பிடித்து வந்த இயற்கை வழி சாகுபடி முறை பூச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. எல்லாப் பூச்சிகளுமே பயிர்களின் விரோதிகள் அல்ல. பூச்சிகளை உண்ணும் தட்டான், பொறிவண்டு, மூக்கு வண்டு, சிலந்தி, கண்ணாடி சிறகி போன்றவைகள் இருக்கவே செய்கின்றன. பசுமைப் புரட்சியின் சாதனையாக, மிகவும் விஷத் தன்மை கொண்ட ரசாயன பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தி பூச்சிகளைக் கொல்லத் தொடங்கியதும், உணவுப் பண்டங்கள் அனைத்தும் நஞ்சானது மட்டுமின்றி, நன்மை செய்யும் பூச்சிகளும் அழிந்து உயரின பன்மைய சுழலில் சமன்பாடு பாதிக்கப்பட்டு தீமை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்ததோடு, அவற்றின் வீரியமும் பன் மடங்கு அதிகரித்தது. இதற்கு மாற்றாக பயிர்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மூலிகைப் பூச்சி விரட்டிகளை தயாரித்து பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். மூலிகைப் பூச்சி விரட்டியின் நோக்கம், பூச்சிகளை கொல்வது அல்ல, பூச்சிகளை விரட்டுவதே ஆகும்.
மூலிகைப் பூச்சி விரட்டி தயாரிக்கும் முறை: மூலிகைப் பூச்சி விரட்டிகள் மூன்று வகையான இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஒன்று, தொட்டால் வாசனையடிக்கக்கூடிய செடிகள், இரண்டு, தின்றால் கசக்கக்கூடிய செடிகள், மூன்று, ஒடித்தால் பால் வரக்கூடிய செடிகள் (எடுத்துக்காட்டாக ஆடாதொடா, ஆடுதீண்டாபாளை, ஊமத்தை, எருக்கு, தும்பை, துளசி, அத்தி, சோற்றுக்கற்றாழை, பெரண்டை, பீநாரி, பப்பாளி, சீதா, புங்கன், நொச்சி, வேம்பு, தழுதாளை, காட்டாமணக்கு, வேலிப்பருத்தி, வெட்பாலை, மமரை, ஆவாரை) ஆகியவற்றில் ஐந்து முதல் அதற்கு மேற்பட்ட செடிகளை எடுத்துக்கொண்டு, உரலில் போட்டு இடித்து, ஒரு மண் பானை, பிளாஸ்டிக் டிரம்மில் போட்டு, இலைகள் மூழ்கும் அளவிற்கு மாட்டுக் கோமியம், தண்ணீர் சேர்க்க வேண்டும். மேலே குறிப்பிட்ட கலவையை 15 நாள்கள் வரை நன்றாக மூடி வைக்கட வேண்டும். தயாரித்த 15 நாளில், ஒரு லிட்டர் பூச்சி விரட்டியுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர் மீது தெளிக்க வேண்டும். பயிரிட்ட 15-ஆம் நாளிலிருந்து (15 நாளுக்கு ஒரு முறை) பூ பூக்கும் வரை தெளிக்கலாம்.
மூலிகைப் பூச்சி விரட்டி செயல்படும் விதம்: பூச்சிகள் எண்ணிக்கையில் மிகுந்தவை. ஆனால் உயிரினங்களில் இது சிற்றினம். இவை இயல்புத் தூண்டலால் குறிப்பிட்ட செடிகளின் இலையையோ, காயையோ தின்று உயிர் வாழ்கின்றன. இதற்காக இவை இலைகளில் தொட்டுணர்ந்தே செடியை இனம் காணுகின்றன. பல வகை மணம் கொண்ட மூலிகைகளில் தயாரிக்கப்பட்ட பூச்சி விரட்டி பயிர்களின் வாசனையை மாற்றி விடுகிறது. இதனால் தாயப் பூச்சி பயிரின் மீது அமர்ந்து முட்டையிடுவது தவிர்க்கப்படுகிறது. இந்தப் பூச்சி விரட்டியுடன் புங்க எண்ணெய், வேப்பெண்ணெய் கலந்து தெளிக்கும்போது, எண்ணெய் பசை பயிரில் படிந்து இருப்பதால், எந்த ஒரு பூச்சியும் பயிரைத் தாக்காது. மூக்கு வண்டு, புகையான், தண்டு துளைப்பான், இலை சுருட்டு புழு, சாறு உறுஞ்சும் பூச்சி, குருத்துப்பூச்சி போன்ற எல்லா வகையான பூச்சிகளையும் கட்டுப்படுத்தும். பூச்சி விரட்டியானது, 80 சதவீதம் பூச்சி விரட்டியாகவும், 20 சதம் பயிர் ஊக்கியாகவும் செயல்பட்டு, விளைச்சலை அதிகரிக்கிறது
நன்றி
தினமணி
Tags: ஆரோக்கியமான உணவுக்கு சிறந்த மாற்று இயற்கை விவசாயமே...