இயற்கைவழி வேளாண்மையில் நெல் சாகுபடி
இயற்கைவழி வேளாண்மையில் நெல் சாகுபடி செயற்கை வேதி உரங்கள் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் நஞ்சில்லாத நெல் சாகுபடி முறை இப்போது பரவலாகி வருகிறது. தமிழக உழவர் தொழில்நுட்பக் கழகத்தில் இணைந்துள்ள பல்வேறு பண்ணையாளர்கள் இயற்கைவழி வேளாண்மையில் ஈடுபட்டு வருகின்றனர். அம்முறைகளை இப்போது பார்ப்போம்.
நாற்றங்கால் தயாரிப்பு
தேவையான நாற்றுக்களைப் பெற போதிய இடத்தைத் தேர்வு செய்து, எளிதில் மட்கி உரமாகும் வாகை, வேம்பு, எருக்கு, கிளிரிசிடியா, நெய்வேலிக்காட்டாமணக்கு, புங்கன், ஊமத்தை, எருக்கு போன்ற இலை தழைகளை மடக்கி உழவு செய்ய வேண்டும். இந்த தழைகள் விரைவாக மட்க அசஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர்உரங்களை 200 கிராம் என்ற அளவில் எடுத்து மக்கிய குப்பையுடன் கலந்து நாற்றங்காலில் கடைசி உழவின்போது இட வேண்டும். இதனால் தழைகள் விரைவில் மட்கிவிடும்.
விதைநெல் நேர்த்தி
தேவையான நீரில் உப்பைப் போட்டு அடர்த்தியான கரைசல் தயார் செய்து கொள்ள வேண்டும். இதற்கு ஒரு நல்ல முட்டையை எடுத்து உப்புக் கரைசலில் போட்டுப் பார்த்தால் அது மிதக்கும். இந்த அளவு கரைசலில் விதை நெல்லைப் போட வேண்டும். பதர்களும் சண்டு நெல்லும் மிதந்துவிடும். அவை சரியாக முளைக்காது. அவற்றை நீக்கிவிட வேண்டும். மூழ்கிய நெல் நல்ல முளைப்புத் திறன் கொண்டதாக இருக்கும். பின்னர் ஒரு பாத்திரத்தில் அசோஸ்பைரில்லம் முதலிய உயிர்உரங்களைக் போதிய நீரில் கரைத்துக் கொள்ள வேண்டும். அதில் 24 மணி நேரம் விதை நெல்லை ஊற வைக்க வேண்டும். 2 விழுக்காடு (2%) ஆவூட்டமும் 200 கிராம் சூடோமோனஸ் புளோரோசன்ஸ் சேர்த்த கரைசலில் 15 நிமிடங்கள் நெல்லை ஊறவைத்து எடுக்க வேண்டும். பின்னர் ஈரச் சாக்கில் நெல்லைப் போட்டுக் கட்டிய மூட்டையைச் சுற்றி ஈரச்சாக்கைக் கொண்டு மூடிவிடவும். அடுத்த 24 மணி நேரத்தில் நெல் முளைவிடும். பின்னர் நாற்றங்காலில் நெல்லை விதைக்க வேண்டும்.
நாற்றங்காலில் தெற்கு வடக்காகவோ, அல்லது கிழக்கு மேற்காகவோ நன்கு நீர் வடிக்க ஏதுவாக ஒரு அடி அகலம் வைத்து கயிறு பயன்படுத்தி கண்டி அமைக்கவும். நாற்றங்காலில் சீராக நெல் பரவ இது உதவியாக இருக்கும். தண்ணீர் வடிக்கவும் வடிகாலாக இந்தக் கண்டி பயன்படும்.
நாற்றங்கால் பயிர் பராமரிப்பு
நெல் பயிர் சீராக வளர விதைத்த 10 முதல் 15 நாட்களில் கீழ்க்கண்ட கரைசலை தயாரித்து நாற்றங்காலுக்கு நீர் பாயச்சும்போது சீராகக் கலந்துவிட வேண்டும். ஒன்று அல்லது இரண்டு முறை 4 முதல் 7 நாள் இடைவெளியில் இக்கரைசலைப் பயன்படுத்தலாம்.
பின்னர் 5 கிலோ மண்புழுக் கழிவு உரம் அல்லது சாணியுடன் 20 லிட்டர் நீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். இந்தக் கரைசலில் ஆவூட்டம் 200 மிலி முதல் 400 மிலி அல்லது தேங்காய்பால் மோர் கரைசல் அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் அத்துடன் 300 மிலி மீன் அமினோ அமிலமும் சூடோமோனஸ் புளுரோசன்ஸ் 50 கிராமும் சேர்த்து 3 நாட்கள் ஊறல் போட்ட பின்னர் தண்ணீர் பாய்ச்சும்போது கலந்துவிட வேண்டும்.
நடவு வயல்
அடி உரமாக ஏக்கர் ஒன்றுக்கு ஒரு டன் முதல் ஒன்றரை டன் கோழி உரம் மற்றும் அசோஸ் பைரில்லம் பாஸ்போபாக்டீரியா சூடோமோனஸ் புளோரசன்ஸ் ஒவ்வொன்றும் ஒரு கிலோவீதம் நன்கு மக்கிய குப்பையில் கலந்து பயன்படுத்தவும்.
நடவு செய்த பின்னர் 30 முதல் 40 நாளில் மேலுரமாக 500 முதல் 1000 கிலோ பயிரின் வயர்ச்சியைப் பொருத்து கோழி உரம் பயன்படுத்த வேண்டும். வேறு தொழு உரங்களையும் பயன்படுத்தலாம். அத்துடன் ஏற்கனவே குறிப்பிட்ட நுண்ணுயிர் உரங்களையும் பயன்படுத்த வேண்டும்.
மேலே குறிப்பிட்டது தவிர நடவு வயலில் முன்கூட்டிய பலவகை தானியங்களை ஏக்கர் ஒன்றுக்கு 25 கிலோ என்ற அளவில் விதைத்து 30 முதல் 60 நாட்களில் இதனை மடக்கி உழுது நெல் நடவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தொழு எரு அளவை பாதியாகக் குறைக்கலாம். வயதான நாளுள்ள நெல் வகைகளுக்கு தூர்கட்டும் திறன் குறைவாக இருக்கும். இதனை சரிக்கட்ட நடவு சமயம் ஒரு குத்துக்கு 4 முதல் 6 நாற்றுக்கள் பயன்படுத்தி நெருக்கி நடவு செய்ய வேண்டும்.
பல்வகைப் பயிர் வளர்ப்பு
இயற்கையான முறையில் ஊட்டங்களை நிறைவு செய்வதற்கான முதல்படி பல்வகைப் பயிர் வளர்ப்பாகும். இதன்படி நிலத்தை 200 நாட்களில் வளம் ஏற்றிவிட முடியும். வேதி உப்புக்களால் வளமிழந்த நிலத்தையும் வளமூட்ட முடியும்.
தவசம் (தானியம்) வகையில் ஏதாவது நான்கு (எ.கா. சோளம் 1 கிலோ, கம்பு 1 கிலோ, தினை 1 கிலோ, சாமை 1 கிலோ)
பயறுகள் (பருப்புகள்) வகையில் ஏதாவது நான்கு (எ.கா. உளுந்து 1 கிலோ, பாசிப்பயறு 1 கிலோ, தட்டைப் பயறு 1 கிலோ, கொண்டைக் கடலை 1 கிலோ)
எண்ணெய் வித்துகள் வகையில் ஏதாவது நான்கு (எ.கா. எள் 1 கிலோ, நிலக்கடலை 2 கிலோ, சூரியகாந்தி 2 கிலோ, ஆமணக்கு 2 கிலோ)
பசுந்தாள் பயிர்கள் வகையில் ஏதாவது நான்கு (எ.கா. தக்கைப்பூண்டு 2 கிலோ, சணப்பு 2 கிலோ, நரிப்பயறு 2 கிலோ, கொள்ளு 1 கிலோ)
மணப்பயிர்கள் வகையில் ஏதாவது நான்கு (எ.கா. கடுகு 1 கிலோ, வெந்தயம் 1 கிலோ, சீரகம் 1 கிலோ, கொத்தமல்லி 1 கிலோ)
மேலே கூறிய ஐந்து பயிர்களையும் வளர்த்து 50-60 ஆம் நாளில் மடக்கி உழுதால் அதில் கிடைக்கும் ஊட்டங்கள் சமச்சீரானதாகவும் நுண்ணூட்டக் குறைபாடு இல்லாதவாறும் இருக்கும். ஒரு ஏக்கருக்கு இது போதும். இருநூறு நாட்களில் நிலம் வளமேறிவிடும். இம்முறையை தபோல்கர் என்ற மராட்டிய அறிஞர் சிறப்பாகச் செய்து காட்டினார். இதன் மூலம் மண்ணில் இருந்து எடுப்பதை மண்ணிற்கே பலமடங்காக்கி உயிர்க்கூளமாகக் கொடுக்கிறோம்.
பயிர் பராமரிப்பு
பயிர் பராமரிப்பிற்கும் ஊட்டத்திற்கும் எந்தவித விலையுயர்ந்த வெளி இடுபொருட்களும் தேவை இல்லை. நம் கொல்லையிலேயெ கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சில எளிதான கரைசல்கள் தயாரித்து நம் பயிரை மிக நேர்த்தியாக வளர்க்கலாம். (எழுதுவதைப் படித்து மலைக்க வேண்டாம்; சாம்பார் செய்வது எப்படி என்று எழுதினால் இரண்டு பக்கங்களுக்கு வரும்! ஆனால் நம் தாய்மார்கள் தினமும் சாம்பார், குழம்பு என்று சமைத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்! மேலும், இயற்கைக்கு மாறினால் போகத்துக்கு போகம் , மண்ணின் வளம் கூடிக் கொண்டே போகும் எனவே நாமும் ஒவ்வொரு சாகுபடிக்கும் நம் உழைப்பைக் குறாஇத்துக் கொண்டே போகலாம் – ஆசிரியர்).
அமுதக் கரைசல்
பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்க நடவு செய்து 25 முதல் 30 ஆம் நாள் முதல் பின்வரும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்த வேண்டும். அமுதக் கரைசல் என்பது உடனடி வளர்ச்சி ஊக்கியாகச் செயல்படுகிறது. இதைத் தயார் செய்வதன் மூலம் 24 மணி நேரத்தில் நமது கையில் ஒரு வளர்ச்சி ஊக்கி கிடைக்கும். இதற்குச் செய்ய வேண்டியது மிகச் சிறிய அளவு வேலையே. முதலில் 1 லிட்டர் மாட்டுச் சிறுநீர், 1 கிலோ மாட்டுச் சாணம் இத்துடன் 250 கிராம் பனைவெல்லம் (கருப்பட்டி அல்லது நாட்டு வெல்லம்) இவற்றை எடுத்து 10 லிட்டர் நீரில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். முதலில் நீரை எடுத்துக் கொண்டு அதில் மாட்டுச் சாணத்தைக் கரைக்கவேண்டும். பின்பு மாட்டுச் சிறுநீரை ஊற்றிக் கலக்க வேண்டும். பின்பு பொடி செய்த பனங்கருப்பட்டியைப் போட்டு நன்கு கலக்கிவிட வேண்டும். கரைசல்கள் கட்டியில்லாமல் கரைந்து விட்டதா என்று பார்த்துவிட்டு மூடிவைத்துவிட வேண்டும். ஒரு நாளில் கரைசல் உருவாகிவிடும். இக்கரைசலை எடுத்து 1 லிட்டருக்கு, 10 லிட்டர் என்ற அளவில் (1:10 அல்லது 10%) சேர்த்து பயிர்களுக்குத் தெளிக்கவேண்டும்.
[அடர் கரைசலை அப்படியே அடிக்கக் கூடாது. நீர்த்த கரைசலைத்தான் அடிக்க வேண்டும். அடர் கரைசல் இலைகளைக் கருக்கிவிடும். கைத்தெளிப்பான் அல்லது விசைத் தெளிப்பான் பயன்படுத்தலாம்] .
இந்தக் கரைசல் உடனடியாக தழை ஊட்டத்தை இலை வழியாக செடிகளுக்குக் கிடைக்கச் செய்கிறது. பூச்சிகளையும் விரட்டுகிறது. இதைப் பயன்படுத்திவிட்டு அடுத்ததாக 7 முதல் 10 நாள் இடைவெளியில் பயிர் வளர்ச்சி ஊக்கியான ஆவூட்டத்தை தெளிக்க வேண்டும்.
ஆவூட்டம்
ஆவூட்டம் என்பது பசுவின் (ஆவின்) ஐந்து பொருட்களான பால், தயிர், நெய், சாணம், சிறுநீர் ஆகியவற்றைச் சேர்த்து ஊற வைத்துச் செய்யும் கலவை.
பசுமாட்டுச் சாணம் 5 கிலோ மாட்டுச் சிறுநீர் 5 லிட்டர் 15 நாட்கள் புளிக்க வைத்த தயிர் 2 லிட்டர்
பால் 2 லிட்டர்
நெய் 500 மி.லி. இவற்றுடன்
பனங்கருப்பட்டி அல்லது நாட்டுச் சக்கரை (வெள்ளைச் சீனி சேர்க்கக் கூடாது)1 கிலோ
அரசம் பழம் 500 கிராம்- 1கிலோ
இளநீர் 3 முதல் 5 எண்ணம்
வாழைப்பழம் 10 முதல் 15 எண்ணம் ஆகியவை தேவை
சாணத்தையும், உருக்கி ஆறிய நெய்யையும் நன்கு பிசைந்து 4 நாட்கள் ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும். தினமும் ஒருமுறை இதைப் பிசைந்து கொடுத்து வரவும். பின்னர் இக்கலவையுடன் மாட்டுச் சிறுநீர், பனங்கருப்பட்டியை தேவையான நீரைச் சேர்த்து 5 லிட்டர் ஆக்கிக்கொண்டு மண்பானையில் ஊறவிட்டுவிடவேண்டும். 15 நாட்களுக்கு நாள் தோறும் 3 முறை கலக்கி வர வேண்டும். 16 ஆம் நாள் இதுவரை (தனியாக) புளித்த தயிரையும், பாலையும் இத்துடன் கலந்து பாத்திரத்தில் கரைத்துவிட வேண்டும். மேலும் 7 நாட்கள் ஊறவிட வேண்டும். நாள்தோறும் 3 முறை கலக்கிவர வேண்டும்.
இருபத்திரண்டு நாட்களில் ஆவூட்டம் உங்கள் முன்னால் மிகச் சிறந்த மணத்துடன் இருக்கும். இதை 35 முதல் 50 லிட்டர் நீரில் 1 லிட்டர் கலந்து (2% முதல் 3%)தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். நீர் பாய்ச்சும்போது வாய்க்கால்களில் கலந்து விடலாம். இது நுண்ணூட்டக் குறைபாட்டை நீக்குகிறது, வளர்ச்சியைத் தூண்டி விடுகிறது. பூச்சிகளை விரட்டியடிக்கிறது. பயிரில் நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்க்கிறது. (கோயில்களில் தரப்படும் பஞ்சகவ்யா என்ற பொருள் ஊற வைக்கப்படுவதில்லை. அத்துடன் ஐந்து பொருட்கள் மட்டுமே பயன்படும், அளவும் மாறுபடும்). பசுவின் ஐந்து பொருட்கள் மட்டுமல்லாது எருமை, ஆடு போன்ற கால்நடைகளின் பொருட்களில் இருந்தும் இந்த நொதிப்புச் சாற்றை உருவாக்கலாம்.
அரப்புமோர்க் கரைசல்
இதற்கு அடுத்தபடியாக மூன்றவதாக அரப்புமோர்க் கரைசல் தெளிக்க வேண்டும் இதுவும் ஒரு வகை வளர்ச்சி ஊக்கியே. அரப்பு இலை என்று அழைக்கப்படும் உசிலை மர இலைகளை 1 முதல் 2 கிலோ பறித்து வந்து,
தேவையான நீர் சேர்த்து, நன்கு அரைக்கவும். அதில் இருந்து 5 லிட்டர் கரைசல் எடுத்து அதனுடன் 5 லிட்டர் புளித்த மோரைச் சேர்க்க வேண்டும். இக்கலவையை 7 நாட்கள் நன்கு புளிக்கவிட வேண்டும். இதன் பின்னர் கரைசலை எடுத்து ஒரு லிட்டருக்குப் பத்துலிட்டர் நீர் சேர்த்து பயிருக்குத் தெளிக்கலாம். இது பயிர்களை வளர்க்கின்றது. பூச்சிகளை விரட்டுகிறது. பூசண நோயைத் தாங்கி வளர்கிறது. இதில் ஜிப்பர்லிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கியின் திறன் உள்ளது.
தேமோர் கரைசல்
நெல் பயிரில் பூட்டை வெளிவரும் நேரத்தில் (ஙிஷீஷீt றீமீணீயீ stணீரீமீ) நெற்பயிர்கள் நன்கு வாளிப்பாக வளர்ந்து வருவதற்கும் பூக்கும் திறன் அதிகரித்து நெல்மணிகள் திரட்சி அடையவும் கீழ்க்கண்ட தேமோர் கரைசல் என்ற வளர்ச்சி ஊக்கியை தெளிக்க வேண்டும். இதற்கடுத்த வளர்ச்சி ஊக்கி தேமோர் கரைசல். தேங்காய்ப்பால் மோர் கலந்த கலவைக்கு இப்பெயர். நன்கு புளித்த மோர் 5 லிட்டர், 10 தேங்காய்களை உடைத்து எடுக்கவும். தேங்காயிலுள்ள தண்ணீரையும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேங்காயை துருவி எடுத்து தேவையான நீர் சேர்த்து நன்கு ஆட்டி பால் எடுக்கவும். இத்துடன் முன்பு எடுத்து வைத்த தேங்காய் நீரையும் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவை 5 லிட்டர் வருமாறு இருக்க வேண்டும். கொஞ்சம் குறைவாக இருந்தால் 5 லிட்டர் வரும் வகையில் நீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இக்கலவையை ஒரு மண்பானையில் 7 நாட்களுக்கு ஊறவிட வேண்டும். கலவை நன்கு நொதித்துப் புளித்து வரும். இப்போது கலவையை எடுத்து 1 லிட்டருக்கு பத்து லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம். இதற்கு பயிர்களை வளர்க்கும் ஆற்றலும், பூச்சிகளை விரட்டும் குணமும் பூசண நோயைத் தாங்கி வளரும் தன்மையும் உண்டு. பயிர்களின் பூக்கும் திறன் அதிகரிக்கிறது. இந்தக் கரைசல் சைட்டோசைம் என்று அழைக்கப்படும் வளர்ச்சி ஊக்கிக்குச் சமமான ஆற்றலைக் கொண்டது. மிக எளிய முறையில் இக்கரைசலைத் தயாரிக்கலாம்.
பூச்சிக கட்டுப்பாடு பூச்சிகளைக் கட்டுப்படுத்த பின்வரும் மூலிகைப் பூச்சிவிரட்டியைப் பயன்படுத்தலாம். பின்வரும் இலை. தழைகள் பூச்சிகளை விரட்டப்பயன்படும். இவை சாதாரணமாக நமது வயல்வெளிகளில் எங்கும் கிடைக்கும்.
1.ஆடு, மாடுகள் உண்ணாத இலை தழைகள் – ஆடுதொடா, நொச்சிபோன்றவை.
2. ஒடித்தால் பால் வரும் இலை தழைகள் -எருக்கு, ஊமத்தை போன்றவை.
3.கசப்புச் சுவை மிக்க இலை தழைகள் – வேம்பு, சோற்றுக் கற்றாழை போன்றவை.
4. உவர்ப்புச் சுமைமிக்க இலை தழைகள் – காட்டாமணக்கு, போன்றவை.
5. கசப்பு, உவர்ப்புச் சுவைமிக்க விதைகள் – கடுக்காய், வேப்பங்காய், எட்டிக்காய் இந்த வகையான செடிகளில் இருந்து ஊறல் போட்டு எடுக்கப்படும் சாறு அல்லது காய்ச்சி வடித்த நீர் போன்றவை மிகச் சிறந்த பூச்சி விரட்டியாகச் செயல்படுகின்றன.
இந்தப் பூச்சி விரட்டிகள் ஒருவித ஒவ்வா மணத்தை ஏற்படுத்துகின்றன. பொதுவாக புழுக்கள் மணத்தைக் கொண்டுதான் பயிர்களைக் கண்டறி கின்றன. இதனால் மணம் பிடிபடாத காரணத்தால் அவற்றால் பயிர்களைத் தின்ன முடிவதில்லை. மூலிகைகளும், சாணம், சிறுநீர் கரைசல்களும் வெறுப்பூட்டும் நெடியை ஏற்படுத்துவதால் பூச்சிகளும், புழுக்களும் விலகிச் செல்கின்றன. பல பூச்சிகள் உண்ணாமல் பட்டினி கிடக்கின்றன. இன்னும் பூச்சிகள் தவறித் தின்றுவிட்டு வயிற்றுக்குள் தொல்லை ஏற்பட்டு இறந்துவிடுகின்றன.இதனால் முட்டை பொரிப்பது குறைந்து விடுகிறது, இனப் பெருக்கம் தடைப்பட்டுவிடுகிறது, எண்ணிக்கையும் குறைந்து விடுகிறது, தப்பியவை ஊனமடைகின்றன, இவற்றைப் பறவைகள் எளிதில் கொத்திச் சென்று விடுகின்றன.
மாதிரி அளவு சோற்றுக் கற்றாழை அல்லது பிரண்டை எருக்கு அல்லது ஊமத்தை நொச்சி அல்லது பீச்சங்கு அல்லது சீதா இலை வேம்பு அல்லது புங்கன் உண்ணிச் செடி அல்லது காட்டாமணக்கு அல்லது ஆடாதொடா மேலே சொன்ன தழைகளில் ஒவ்வொன்றிலும் 2 கிலோ எடுத்துக் கொள்ளவும். ஆக 10 கிலோ இலைகளுடன் முதலில் சொன்ன விதைகளின் ஏதாவது ஒன்றை (கடுக்காய் 1 கிலோ, வசம்பு 200 கிராம், வேப்பங்காய் 2 முதல் 3 கிலோ, எட்டிக்காய் 500 கிராம்) எடுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். இவற்றைக் கலந்து ஊறல் முறையிலும், வேகல் முறையிலும் விரட்டிகள் தயாரிக்கலாம். ஊறல் முறை இலைகளையும், விதைகளையும் 2 கிலோ வீதம் எடுத்து துண்டு செய்து இடித்து இலை மூழ்கும் அளவிற்கு 12 லிட்டர் மாட்டுச் சிறுநீர் 3 லிட்டர் சாணக் கரைசல் சேர்த்து 7 முதல் 15 நாட்களுக்கு ஊறவிட வேண்டும். இதனால் இலைகள் கரைந்து கூழாக மாறிவிடும். இத்துடன் 1 லிட்டர் மஞ்சள் தூளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை 1 லிட்டருக்கு 10 லிட்டர் நீர் கலந்து பயிர்களில் அடிக்கலாம்.
வேகல் முறை இம்முறையில் ஏற்கனவே சொன்ன அளவில் இலைகளையும், விதைகளையும் எடுத்து துண்டு செய்து இடித்து முழுகும் அளவிற்கு ஏறத்தாழ 20 லிட்டர் நீரை ஊற்றி 2 முதல் 3 மணி நேரம் சீராக நெருப்புக் கொடுத்து வேகவிட வேண்டும். வெந்த பின்பு சாறை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மீண்டும் 20 லிட்டர் நீரைச் சேர்த்து நன்கு கலக்கி சாறை வடிகட்டி எடுக்க வேண்டும். இதேபோல மொத்தம் 5 முறை வடிகட்டி எடுக்கலாம். இதன் மூலம் 100 லிட்டர் சாறு கிடைக்கும். சாறு ஆறிய பின்னர் ஒரு லிட்டர் மஞ்சள்தூள் சேர்த்து 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் இச்சாற்றைக் கைத் தெளிப்பால் அல்லது விசைத் தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம்.
நோய்க் கட்டுப்பாடு இலைப் புள்ளி நோய் மற்றும் குலைநோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த பின்வரும் தழைக் கரைசல் பயன்படும். நுண்ணுயிர் இலைக்கருகல் இந்நோயும் பரவலாக காணப்படும் ஒன்று இதற்கு, 1. சோற்றுக் கற்றாழை- 3-5 கிலோ 2. இஞ்சி – 200 கிராம். 3. புதினா அல்லது சவுக்கு இவை-2 கிலோ. இவற்றை முன்னர் கூறியபடி வேக வைக்க வேண்டும். வெந்த பின்னர் ஆற வைத்து வடித்த சாற்றுடன் மஞ்சள்தூள் 1 லிட்டர், சூடோமோனஸ் புளோரசன்ஸ் 500 கிராம் 1 கிலோ சேர்த்து 12 மணி நேரம் ஊறவைத்துக் தெளிக்க வேண்டும். இதனால் நோய் கட்டுப்படும்.
இலைப்பேன் செம்பழுப்பு நிறமுடைய இலைப் பேன்களும், அதன் குஞ்சுகளும் இலையின் அடிப்புறத்தில் தங்கி இலைச் சாற்றினை உறிஞ்சி வாழ்கின்றன. இதனால் இலைகளின் ஓரங்கள் சுருண்டு வாடுகின்றன. இதைக் கட்டுப்படுத்த கீழ்க்கண்ட கரைசல் பயன்படுகிறது. உண்ணிச் செடி, வேம்பு, நொச்சி, புகையிலை, வசம்பு, பூண்டு, சீதா, பீச்சங்கு, வில்லவம் சோற்றுக்கற்றாழை, பிரண்டை இவற்றில் ஏதாவது 4 இலைவகைகளை துண்டு துண்டாக நறுக்கி அத்துடன் 1 கிலோ மஞ்சள் தூள் சேர்த்து ஏற்கனவே சொன்ன ஊறல் முறையில் ஊறவைத்து 7 நாட்கள் கழித்து வடிகட்டி 1 லிட்டருக்கு 10 லிட்டர் நீர் கலந்து தெளிக்க வேண்டும். இலைப்பேன் தாக்குதலை வைத்து 7-10 நாட்கள் இடைவெளியில் 2 அல்லது 3 முறை தெளிக்க வேண்டும். வேகல் முறையிலும் தயாரித்துத் தெளிக்கலாம். பொதுவாக வேகல்முறையில் உடனடியாக நமக்கு கரைசல் கிடைக்கின்றது. ஊறல்முறையில் சிறிது காத்திருக்க வேண்டும். புழுத்தாக்குதல் புழுத்தாக்குதல் அல்லது இலைத்துளைப்பான் அல்லது தண்டுதுளைப்பான் சேதத்தில் இருந்து பாதுகாக்க பின்வரும் கரைசல் தேவைப்படுகிறது. சீதா விதை – 100 கிராம் பீச்சங்கு – 1 கிலோ ஆடாதொடா – 500 கிராம் சிறியா நங்கை – 500 கிராம் தங்கரளி காய்/பழம் – 1 கிலோ நொச்சி – 1 கிலோ சோற்றுக் கற்றாழை – 1 கிலோ இவற்றைப் பசையாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் பத்து லிட்டர் கொதிநீரில் புகையிலைத் தூள் 1கிலோ கலந்து 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் மேலே சொன்ன பசையுடன் புகையிலைச் சாறையும் சேர்த்து 2 முதல் 3 நாள் ஊறல் போட வேண்டும். புளிப்புச் சுவை வரும். மஞ்சள் தூள் 1 கிலோவுடன் பசைபோல ஆக்கத் தேவையான அளவு களிமண் மற்றும் சாணம் இவற்றை மூன்று நாள் ஊறிய கலவையுடன் சேர்த்து பசையாக ஆக்கவும். 1 கிலோ பசையை எடுத்து 100 முதல் 125 லிட்டர் நீரில் கலந்து பயிருக்குத் தெளிக்கவும்.
இலைப்புள்ளி நோய் இந்நோயின் தொடக்கத்தில் இலைகளின் மேல்புறத்தில் நீண்ட கண் வடிவப் புள்ளிகள் தென்படும். இப்புள்ளிகளின் நடுவில் பூசண வித்துக்கள் காணப்படும். நோய் பெரிதாகும்போது பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலைகள் மஞ்சளாகி பின்னர் கருகிவிடும். இதனைக் கட்டுப்படுத்த சோற்றுக் கற்றாழை 3 முதல் 5 கிலோ காகிதப்பூ இலை 3 முதல் 5 கிலோ உண்ணிச் செடி இலை 3 முதல் 5 கிலோ சீதா இலை 3 முதல் 5 கிலோ பப்பாளி இலை 3 முதல் 5 கிலோ இவற்றில் ஏதாவது இரண்டு வகையை மட்டும் எடுத்து வேகல்முறை அல்லது ஊறல் முறையில் கரைசலை தயார் செய்து பயன்படுத்தலாம்.
பாசனமுறை ஒவ்வொரு வயலிலும் தண்ணீர் நுழையும் இடத்தில் இரண்டடி நீள, அகல, ஆழ குழி அமைத்துக் கொள்ள வேண்டும். அதில் நன்கு மக்கும் வேம்பு, எருக்கு, ஊமத்தை, தங்கரளி, நெய்வேலிக் காட்டாமணக்கு போன்றவற்றின் இலைகளைக் போட்டுக் கொள்ள வேண்டும். அதன்மேல் கல் அடுக்கி வைத்து நீர் பாய்ச்சி வர வேண்டும். இந்தக் கசாயம் நீரில் சீராகப் பரவி வளர்ச்சிக்கு உதவும். நூற்புழுவைக் கட்டுப்படுத்தும். நூற்புழுவுக்கு எதிரான நுண்ணுயிர்கள் இதில் வாழ வாய்ப்புக் கிடைக்கும். நெற்பயிரின் தூரில் தங்கி சேதப்படுத்தும் புகையான் தாக்குதலையும் கட்டுப்படுத்தும். நெற்பயிரின் சீரான வளர்ச்சி மற்றும் தூர்க் கட்டும் திறன் அதிகரிக்க வாளிப்பான நெற்குலைகள் உருவாக, திரட்சியான நெல் மணிகள் உருவாக கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றலாம். சாண எரிவாயுக் கலனில் வெளிவரும் சாணக்கரைசல் 75 லிட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் நீர் 75 லிட்டர் சேர்த்துக் கொள்ள வேண்டும். எரிகலன் இல்லாதவர்கள் 50 கிலோ சாணியை 100 லிட்டர் நீருடன் கலந்து சாணக் கரைசல் தயார் செய்து கொள்ள வேண்டும். இத்துடன் முன்னர் சொன்ன வளர்ச்சி ஊக்கிகளில் தெளிப்பதற்கு தேவையான ஒன்றைக் கலந்து 3 முதல் 7 நாட்கள் நொதிக்கவிட வேண்டும். பின்னர் அவற்றை பாசன நீருடன் கீழ்க்கண்ட அளவில் கலந்து விட வேண்டும்.
வளர்ச்சி ஊக்கி ஏக்கருக்கான அளவு அமுதக் கரைசல் 50 – 80 லிட்டர் ஆவூட்டம் 5 – 10 லிட்டர் தேமோர்க் கரைசல் 5 – 10 லிட்டர் அரப்புமோர் கரைசல் 5 – 10 லிட்டர் மீன் அமினோ அமிலம் 3 லிட்டர் நெல் நடவு செய்த 20 முதல் 25ஆம் நாளில் இருந்து 7 முதல் 10 நாள் இடைவெளியில் 2 முதல் 4 முறை இக்கரைசல்களைப் பயன்படுத்தலாம்.
ஒட்டுண்ணிகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மூலிகைப் பூச்சி விரட்டிகள் பயன்படுத்துதோடு மட்டுமல்லாமல் ஒட்டுண்ணிகளையும் பயன்படுத்த வேண்டும். இலைச்சுருட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்த ‘ஜப்பானிகம்’ என்ற ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 2சிசி என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். ‘பிரக்கானிட்’ என்ற குளவியை ஏக்கருக்கு 5 பாக்கெட் என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். இலைச்சுருட்டுப் புழுத் தாக்குதல் மிக அதிகமாக இருப்பின் மூலிகைப் பூச்சிவிரட்டியுடன் ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கிலோ பவேரியா ப்ராங்கியார்ட்டி அல்லது பவேரியா பாஸ்ஸியானா கலந்து தெளிக்கலாம். எப்பொழுதும் ஒரு வளர்ச்சி ஊக்கி-ஒரு பூச்சிவிரட்டிச் கரைசல்-சூடோமோனஸ் என்று மாற்றி மாற்றி நெல்லுக்கு உணவைக் கொடுத்துவர வேண்டும். இவ்வாறு சீராக இயற்கை வழி வேளாண்மையில் நெல் அறுவடை செய்யலாம்.
நன்றி
வேளண்மை