தென்னை மரங்கள் ஏற பெண்களுக்கு பயிற்சி:வழி காட்டும் விவசாய கல்லூரி
மதுரை விவசாய கல்லுாரி வேளாண் அறிவியல் மையத்தில் பெண்களுக்கு தென்னை மரங்கள் ஏறுவதற்கும், பிற இயந்திரங்களை கையாள்வதற்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.’எர்கனோமிக்ஸ்’ முறையில் கிராம பெண்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்காக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நிலக்கடலையை செடி மற்றும் காய்களை தனியாக பிரிப்பது, மக்காச்சோள விதை பிரிப்பதற்கு ஒரு நாள் இயந்திர பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மையத்தின் உழவியல் துறை உதவி பேராசிரியர் பத்மநாபன் கூறியது: பெண்கள் கையாளும் வகையிலான கருவிகளுக்கு குழுவாகவும், தனியாகவும் பயிற்சி தருகிறோம். பாதுகாப்பான முறையில் தென்னை மரங்கள் ஏறுவதற்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் கிராமப் பெண்கள் அச்சமின்றி தென்னை மரம் ஏறலாம்.
விவசாயிகளுக்கு நேரடி நெல் விதைப்பு மற்றும் களை கருவி மற்றும் ஸ்பிரேயர் கையாளும் முறை ஒரு நாள் பயிற்சியாக தரப்படுகிறது. விவசாயிகள், படித்த இளைஞர்கள் குழுவாக வரலாம். மானாவாரியில் நிலக்கடலை, பருத்தி, மக்காச்சோளம் பயிர்களை விதைப்பதற்கும், களை எடுப்பதற்கும் சற்றே பெரிய கருவிகள் தேவைப்படும். இவற்றை இயக்குவதற்கு பயிற்சி தரப்படுகிறது. பயிற்சிக்கு பின் விவசாயப் பொறியியல் துறை மூலம் மானியத்தின் மூலம் கருவிகள் வாங்கவும் ஏற்பாடு செய்யப்படும். விவசாயிகள் இதன் மூலம் பயன்பெறலாம், என்றார். விபரங்களுக்கு: 97888 20438.
நன்றி
தினமலர்