மானாவாரி நிலத்தில் பருத்தி விவசாயம் வேளாண்துறையினர் ஆலோசனை
மானாவாரி நிலங்களில் பருத்தி விவசாயம் செய்யும்முறை குறித்து வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். பணப்பயிர்களில் பருத்தி முதன்மை இடத்தில் உள்ளது. உலகளவில் பருத்தி உற்பத்தியில் இந்தியா 2ம் இடத்தில் உள்ள போதிலும், பருத்தியின் உற்பத்தியில் தமிழகத்தில் குறைவாகவே உள்ளது. தமிழகத்தில் உள்ள நூற்பாலைகளுக்கு ஆண்டு ஒன்றிற்கு சுமார் 70 லட்சம் பேல்கள் பஞ்சு தேவைப்படுகின்றன. ஆனால் தமிழகத்தில் அந்தளவிற்கு பருத்தி கிடைப்பதில்லை. இதன் காரணமாக வேளாண்துறையினர் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் பல நவீன சாகுபடி முறைகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பழநி வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் குளிர்கால இறவைப் பருத்தி, மானாவாரிப் பருத்தி, இறவைப் பருத்தி, நெல் தரிசுப் பருத்தி என பருத்தி 4 பருவங்களில் பயிரிடப்படுகிறது. மானாவாரிப் பகுதிகளுக்கு கே 10, கே 11, கே.சி.2, கே.சி.3, எஸ்.பி.பி.ஆர் 3, எஸ்.வி.பி.ஆர் 4, எம்.சி.யு. 5, எம்.சி.யு. 12, பையூர் 1, எல்.ஆர்.ஏ.5166 ஆகிய ரகங்கள் சிறந்தவைகளாக கண்டறிப்பட்டுள்ளன. விவசாயிகள் கோடை உழவு செய்யும்போது நிலத்தின் சரிவுக்கு குறுக்காக உழவு செய்ய வேண்டும். இதனால் வழிந்தோடி வீணாகும் நீர் தடுக்கப்பட்டு உட்கிரகிக்கப்பட்டு விடும்.
மண்ணின் உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்யும் பொருட்டு தொழுஉரம், மக்கிய குப்பை அல்லது ஆடுமாடுகள் கிடைபோடுதல் ஆகியவற்றை முறையே செய்ய வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 12.5 டன் தொழுஉரம் இடுவதால், மண்ணின் தன்மை கெடடுவிடாமல் பருத்தியின் விளைச்சலை அதிகமாக பெறலாம். இதனால் மண்ணின் சேமிப்புத் திறனும் அதிகரிக்கின்றது. மண் பரிசோதனையின்படி உரம் இட வேண்டும். இல்லையெனில் பொதுப் பரிந்துரையின்படி ரகங்களுக்கு தகுந்தவாறு உரம் இட வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட தழைச்சத்தில் பாதியையும், முழு அளவு மணிச்சத்தையும் அடியுரமாக இடவேண்டும்.
தொடர்ந்து நூண்ணட்ட கலவையை 12.5 கிலோவை சுமார் 40 கிலோ மணலுடன் கலந்து விதைச்சாலில் தூவ வேண்டும். மண் ஈரம் காக்கும் பொருட்டு மண் போர்வை அமைத்து பயிர் வறட்சியில் வாடுவதைத் தடுக்கலாம். பருத்தியில் அதிகப்படியான நீராவிப் போக்கைக் கட்டுப்படுத்த பராபின் என்ற மெழுகு பொருளை 1% என்ற அளவில் இலைகளில் தெளித்து நீராவிப் போக்கைக் குறைக்கலாம்.
காய்கள் நன்றாக வெடித்து வரும்போது ஒரு வார இடைவெளியில் பருத்தி அறுவடை செய்ய வேண்டாம். காலை 11 மணிக்குள் பருத்தி அறுவடைய முடித்துவிட வேண்டும். நன்கு வெடித்த பருத்தியை குவியலாகவும், பூச்சிகளினால் சேதமடைந்த பருத்தியை தனிக்குவியலாகவும் வைக்க வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு விவசாயிகள் வேளாண் அலுவலகத்தை அணுகலாமென வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நன்றி: தினகரன்