டிசம்பர் மாதத்துக்கான பூச்சி நோய் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு முறைகள்
Date December 17, 2015 Author By admin Category தகவல்கள்
தமிழ்நாடு விவசாயிகளுக்கு டிசம்பர் 2015 மாதத்துக்கான பூச்சி நோய், கண்காணிப்பு, கட்டுப்பாட்டு முறைகள் குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பயிர் பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நெல் பயிரிடும் கடலோர மாவட்ட விவசாயிகள் கவனத்துக்கு…: கடலோர மாவட்டங்களில் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் மேகமூட்டத்துடன் கூடிய வானிலையும், காற்றில் அதிக ஈரப்பதமும் 3 அல்லது 4 நாள்களுக்கு காணப்பட்டால் நெல் பயிரில் குலைநோய் தென்பட அதிக வாய்ப்பு உள்ளது. விவசாயிகள் உடனடியாக 0.1 சதம் ட்ரைசைக்கிலோசோல் மருந்தை பயிர்களில் தெளிக்கவும். தேவைப்பட்டால் 10 நாள்கள் இடைவெளியில் மறுமுறை தெளிக்கவும்.
பாக்டீரியா இலை நோயை கட்டுப்படுத்த கோசைடு 101 என்ற மருந்தை 2.5 கிராமை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். தழைச்சத்தை மூன்று முறை பிரித்து இடவும். இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த மான்கோசாப் 2.0 கிராமை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 2 முறை, நட்ட 40, 55 நாள்களுக்குப் பின்னர் பயிர்களில் தெளிக்கவும்.
நெல் வயல்களில் பூச்சி மேலாண்மை: இலை சுருட்டுப்புழு: தற்போது நிலவும் தொடர் மழை, பனிமூட்டமான காலநிலை காரணமாக நெல்லில் இலை சுருட்டுப் புழு தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது. இளம் பயிர்கள், தூர் பிடிக்கும் பருவத்தில் உள்ள பயிர்களைத் தாக்கும் இந்த புழுக்கள், இலைகளை உள்பக்கமாக சுருட்டி உள்ளிருந்து பச்சையத்தை சுரண்டி உண்கின்றன. இதனால் இலைகள் வெள்ளை நிற சுரண்டல்களுடன் காணப்படும். தாக்குதல் அதிகமானால் செடிகள் காய்ந்து விடும். இப்பூச்சியின் தாக்குதல் இருக்கும் சமயம் தழைச்சத்து உரங்களை வயலில் இடுவதை குறைக்க வேண்டும். வயலில் இப்புழுவின் அந்தி பூச்சிகளின் நடமாட்டத்தை அறிந்து விளக்கு பொறி வைத்து கவர்ந்து அழிக்கலாம்.
தாவர பூச்சிக் கொல்லியான அசாடிரக்டீன் 0.03 சதக் கரைசலை ஏக்கருக்கு 400 மில்லி என்ற அளவில் தெளிக்கலாம். ரசாயன பூச்சிக் கொல்லிகளான கார்ட்ப் 50 சத பெளடர் 400 கிராம் ஏக்கருக்கு (அல்லது) குளோர்பைரிபால் 20 சதவீதம் 500 மில்லியை, ஏக்கருக்கு என்ற அளவில் உபயோகித்து கட்டுப்படுத்தலாம்.
புகையான்:நெல் வயலில் அதிகமாக நீர்தேங்கி வெளியேற முடியாமல் உள்ள இடங்களில் இந்த பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். நெல்லின் தண்டு பகுதியில் கூட்டமாக அமர்ந்து சாறு உறிஞ்சும் இந்தப் பூச்சிகளால் நெற்பயிர் முற்றிலுமாக காய்ந்து விடும்.
தாக்குதல் அதிகம் உள்ள வயல்களில் எரித்தது போன்ற அறிகுறிகள் ஆங்காங்கே தென்படும். தழைச்சத்து உரங்களை 3-4 முறை பிரித்து இட வேண்டும். செயற்கை பைரித்திராய்டு, பூச்சிகளின் மறு உற்பத்தியை தூண்டும் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது. 3 சத வேப்ப எண்ணெய் கரைசலை ஏக்கருக்கு 6 லிட்டர் என்ற அளவில் சோப்பு கரைசலுடன் கலந்து தெளிக்க வேண்டும்.
பூச்சிக் கொல்லிகளான டைக்குளோர்வாஸ் 76 எஸ்.சி. 200 மில்லி (அல்லது) புப்ரோபசின் 25 எஸ்.சி. 325 மில்லி, (அல்லது) பிப்ரோனில் 5 சத எஸ்.சி. 400 மில்லி (அ) இமிடாகுளோபிரிட் 17.8 சதம் 40 மில்லி என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
குருத்துப் பூச்சி: இந்தப் புழுக்கள் இளம் பயிரின் தண்டில் துளையிட்டு அதன் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு உட்பகுதியை கடித்து உண்பதால் இளம் பயிரின் நடுக்குருத்து வாடிக் காய்ந்து விடும். அவ்வாறு வாடிய நடுக்குருத்தை லேசாக இழுத்தால் கையோடு வந்து விடும். கதிர் பிடிக்கும் பருவத்தில் தாக்குதல் தொடர்ந்தால் வெளிவரும் கதிரில் மணிகள் பால் பிடிக்காமல் வெண் கதிர்களாக மாறுகின்றன. அதனால் மகசூல் பெருமளவு பாதிக்கப்படும். முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் ஒட்டுண்ணி அட்டைகளை ஒரு ஏக்கருக்கு 5 சிசி என்ற அளவில் வார இடைவெளியில் மூன்று முறை கட்ட வேண்டும். தாவரப் பூச்சிக் கொல்லியான அசாடிரக்டீன் 0.03 சத கரைசலை ஒரு ஏக்கருக்கு 400 மில்லி என்ற அளவில் தெளிக்க வேண்டும். தாக்குதல் அதிகமாக காணப்படும்போது ரசாயன பூச்சிக் கொல்லிகளான கார்ட்ப் 50 சத பவுடர் 400 கிராம் (அல்லது) குளோர்பைரிபால் 20 இ.சி. 500 மில்லி (அல்லது) பிப்ரோனில் 5 சதம் 400 மில்லி என்ற அளவில் உபயோகித்து கட்டுப்படுத்தலாம்.
கூண்டுப் புழு: இவை இலைகளின் பச்சையத்தை சுரண்டி உண்ணுவதால், இலைகள் வெள்ளை நிறக் காகிதம் போல் தோன்றும். இலைகள் வெட்டப்பட்டு தூர்களைச் சுற்றி குழாய் வடிவ கூண்டுகள் காணப்படும். வயலில் தேங்கி இருக்கும் தண்ணீரில் சிறிது மண்ணெண்ணெய் கலந்து விட்டு பின்னர் தூர்களிலிருக்கும் குழல் வடிவ கூண்டுகளை பயிர்களின் குறுக்கே கயிரைப் போட்டு இழுத்து நீரில் விழச்செய்து, பின் வயலிலுள்ள நீரை வடித்து புழுக்களை அழிக்கலாம்.
தேவை ஏற்பட்டால் கார்பரைல் 10 சதம் டி.பியை 10 கிலோ அல்லது பென்தோயேட் 50 சதம் இ.சி. 400 மில்லி என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
பருத்தி:காய் புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறிகளை ஏக்கருக்கு 5 வைத்து அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். அதிகம் சேதம் உள்ள பயிர்களில் குளோர்பைரிபாஸ் 20 இ.சி 800 மில்லி அல்லது பாசலோன் 35 இ.சி 600 மில்லி என்ற அளவில் தெளிக்கலாம்.
பருத்தி செடியில் சாறு உறிஞ்சும் தத்துப் பூச்சிகளின் நடமாட்டத்தை ஏக்கருக்கு 5 என்ற அளவில் மஞ்சள் ஒட்டும் பொறி வைத்து பூச்சிகளைக் கண்காணிக்கவும். தேவைப்பட்டால் இமிடோகுளோபிரிட் 200 எஸ்.எல் ஏக்கருக்கு 400 மில்லி என்ற அளவில் தெளிக்கவும்.
கரும்பு:தண்டுத் துளைப்பான் தாக்குதலைக் கட்டுப்படுத்த முட்டை ஒட்டுண்ணி ட்ரைக்கோகிரமா (1 சிசி) ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தவும். இதனை 6 முறை 15 நாள்கள் இடைவெளியில் பயன்படுத்தவும்.
நிலக்கடலை இலைச் சுருட்டுப் புழு:
இலைச் சுருட்டுப் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த அந்து பூச்சிகளின் நடமாட்டத்தை விளக்குப்பொறி வைத்து கண்காணிக்கவும். மாலத்தியான் 50 இ.சி. 500 மில்லி என்ற அளவில் தெளிக்கலாம்.
சிவப்பு கம்பளிப் புழு:மின்சார வசதி உள்ள இடங்களில் விளக்குப் பொறியை மாலை 7 முதல் 10 மணி வரை எரிய விட்டு, வெண்ணிற அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். பயிரில் இலையின் அடியில் முத்துப்போன்று குவியலாக இருக்கும் முட்டைக் குவியல்களையும், கண்ணாடி போன்று சுரண்டப்பட்ட இலைகளில் கூட்டமாகக் காணப்படும் இளம் புழுக்களையும், இலையோடு கிள்ளி எடுத்து அழிக்கலாம்.
இளம் பருவ புழுக்களை பாஸலோன் 35 இ.சி. மருந்தை 300 மில்லி அல்லது டைக்குளோர்வார்ஸ் 76 எஸ்.ஸி 250 மில்லியை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
வேர் அழுகல் நோய்த் தாக்குதல் உள்ள பகுதிகளில் கார்பன்டாசிம் (0.1 சதம்) மருந்தை வேர்கள் நனையுமாறு ஊற்றவும். கடலையில் டிக்கா இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த கார்பன்டாசிம் (லிட்டருக்கு 1 கிராம்) அல்லது மான்கோசாப் (லிட்டருக்கு 2 கிராம்) அல்லது குளோர்தலானில் (லிட்டருக்கு 2 மில்லி) தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
மக்காச்சோளம்- தண்டு துளைப்பான்:
தண்டு துளைப்பானை கட்டுப்படுத்த அந்து பூச்சிகளின் நடமாட்டத்தை விளக்குப்பொறி வைத்து கண்காணிக்கவும். தேவை ஏற்பட்டால், கார்போபியுரான் 3 ஜி 6.8 கிலோவை ஒரு ஏக்கருக்கு 20 கிலோ மணலுடன் கலந்து குருத்தில் இடவும்.
இலைக்கருகல் நோய்: இலைக் கருகல் நோயை மேன்கோசெப் லிட்டருக்கு 2 கிராம் என்ற அளவில் விதைத்த 20-ஆம் நாளில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
பாசிப்பயறு, உளுந்து-வெள்ளை ஈ: பாசிப்பயறு, உளுந்து பயிரில் தென்படும் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த விவசாயிகள் டைமித்தோவேட் 200 மில்லி அல்லது மிதைல் டிமட்டான் 200 மில்லி என்ற அளவில் தெளிக்கலாம்.
காய்த் துளைப்பான்: அசாடிரக்டீன் 0.03 சத கரைசலை ஒரு ஏக்கருக்கு 400 மில்லி. என்ற அளவில் தெளிக்க வேண்டும். டைமித்தோவேட் 200 மில்லி அல்லது இமாமெக்டின்பென்சோயேட் 5 சதம் எஸ்.சி. 88 கிராம் அல்லது இன்டாக்சோகார்ப் 15.8 எஸ்.சி. 133 மில்லி அல்லது வேப்பங்கொட்டை சாறு (5 சதம்) தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
தக்காளி: தக்காளி இலைக் கருகல் நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் மான்கோசாப் மருந்தை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற விகிதத்தில் கலந்து வாரம் இருமுறை தெளிக்கவும்.
விவசாய, தோட்டக்கலைப் பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் கட்டுப்பாடு: சாறு உறிஞ்சும் பூச்சிகளான தத்துப்பூச்சி, இலைப்பேன், வெள்ளை ஈ, சுருள் வெள்ளை ஈ, மாவு பூச்சியின் சேதம் அதிகமாக வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் மஞ்சள் ஒட்டும் பொறியை ஏக்கருக்கு 5 என்ற அளவில் வைத்து நடமாட்டத்தை கண்டறியலாம். தேவைப்பட்டால் வேப்பங்கொட்டைச் சாறு 5 சதம் அல்லது மீன் எண்ணை சோப் 1 கிலோவை 40 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
இது குறித்த மேலும் விவரங்களுக்கு, வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு இயக்குநரை 0422-6611237 என்ற தொலைபேசி எண்ணிலோ, பூச்சியியல் துறை பேராசிரியரை 0422-6611214, 6611414 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
தினமணி
Tags: கட்டுப்பாட்டு முறைகள், டிசம்பர் மாதத்துக்கான பூச்சி நோய் கண்காணிப்பு