வாழை சாகுபடியில் ஏற்படும் மகசூல் இழப்பை தடுப்பது எப்படி?
தொடர் மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் ேதங்கி நிற்பதால் வாழை சாகுபடியில் 25 சதவிகிதம் வரை ஏற்படும் மகசூல் இழப்பை தடுப்பது எப்படி? என்பது குறித்து தேசிய வாழை ஆராய்ச்சி மையம் ஆலோசனை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் பருவ மழை காரணமாக, சாகுபடி செய்யப் பட்டுள்ள பெருவாரியான வாழைத் தோட்டங்களில் மழைநீர் தேங்கி நிற்க அதிகம் வாய்ப்புள்ளது, இந்த தண்ணீரை தோட்டங்களில் இருந்து வடிக்கும்போது 2 மற்றும் 3ம் தவணையாக இடப்பட்டுள்ள பொட்டாஷ் உரம் தண்ணீரில் கரைந்து வீணாகும் நிலை உருவாகிறது. இதன் காரணமாக வாழைக்கு தேவையான பொட்டாஷ் உரம் சரிவர கிடைக்காத சூழல் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதால் வாழையில் 20 முதல் 25 சதம் வரை மகசூல் இழப்பு ஏற்படலாம்.
இதைத் தவிர்க்க பருவமழை நின்ற உடன், வாழை மரம் ஒன்றுக்கு 100 கிராம் யூரியா, 150 கிராம் மூரியேட் ஆஃப் பொட்டாஷ் மற்றும் 100 கிராம் டோலமைட் (கால்சியம் – மக்னீசி யம் கார்பனேட்) உரங்களை மண்ணில் இடவேண்டும். மேலும், இலை வழியூட்டமாக, 1 சதவிகித பொட்டாஷியம் நைட்ரேட் கரைசலையும் (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம்), 1 சதவிகித கால் சியம் நைட்ரேட்டையும் (ஒரு லிட்டர் தண்ணீருக்கும் 10 கிராம்) இலை மேல் தெளிக்க வேண்டும். மேலும், வாழைக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் நுண்ணூட்டச் சத்துகளும், மழை நீரை தோட்டங்களில் இருந்து வடிக்கும்போது வீணாக வாய்ப்புள்ளது. இதுகுறித்து திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் பால.பத்மநாபன் கூறுகையில், வாழையில் இழப்புகளை சரிகட்ட, வாழைக்கு நுண்ணூட்டச் சத்துகள் இடுவது மிகவும் அவசியம். இதற்கு, வாழை நுண்ணூட்டக் கலவையான பனானா சக்தியை இரண்டு சதவிகித கரைசலாக (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம்) இலைமேல் தெளிக்கவும். ஒரு கிலோ பனானா சக்தி நுண்ணூட்ட உரத்தின் விலை ரூ.150ஆகும். எனவே வாழை சாகுபடியில், தேங்கி நிற்கும் மழை நீரால் ஏற்படக்கூடும் இத்தகைய பொட்டாஷ் மற்றும் நுண்ணூட்டச் சத்துகளின் இழப்புகளை, மேற்குறிப்பிட்ட முறையில் நிவர்த்திச் செய்து, அதிக மகசூல் பெறலாம். மேலும் விவரங்களுக்கு இயக்குநர், தேசிய வாழை ஆராய்ச்சி மையம், தோகைமலை சாலை, தாயனூர் அஞ்சல், திருச்சி- 620102 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 93443 53587 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என்றார்
நன்றி
தினகரன்