விறுவிறு லாபம் தரும் மிளகாய்!
பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே…”
-கவிஞர் புலமைப்பித்தனின் இந்த வரிகள், குழந்தைகளுக்கு மட்டுமல்ல… விவசாயத்துக்கும் பொருந்தும். தேவையான தொழில்நுட்பங்கள், முறையான திட்டமிடல் போன்றவை இருந்தால்… விவசாயத்தில் வெற்றிக் கொடி நாட்டலாம், என்பதை பல விவசாயிகள் நிரூபித்து வருகிறார்கள். குறிப்பாக, பொறியியல், தகவல் தொழில்நுட்பம் என அதிக சம்பளம் கிடைக்கும் படிப்பைப் படித்த இளைஞர்கள்கூட… விவசாயத்தின் மீதிருக்கும் பாசம் காரணமாக அதில் கால் பதித்து, அசத்தல் வருமானம் ஈட்டி வருகிறார்கள். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள துவார் கிராமத்தின் தகவல் தொழில்நுட்பப் பட்டதாரி சரவணன், அவர்களில் ஒருவராக ஆச்சர்யம் கூட்டுகிறார்!
கணினி வேண்டாம்… களத்துமேடு போதும்!
செம்மண் பூமியில் ‘பச்சைப் பசேல்’ எனப் படர்ந்து விரிந்திருந்த மிளகாய் தோட்டத்தில் சரவணனை சந்தித்தோம். ”தாத்தா காலத்துல விவசாயம்தான் பிரதான தொழில். அப்பா அரசியல்ல இருந்ததால, விவசாயத்தை கவனிக்க முடியாமப் போச்சு. நான் ஐ.டி. (இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி) முடிச்சு, முழுக்க நகரவாசியா மாறிட்ட நிலையில… ஏதாவது தொழில் ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன். அப்ப, விவசாயம்தான் கண்முன்னே வந்துச்சு. சொந்த ஊருக்கு வந்து பார்த்தா… புதர் மண்டி, காடு மாதிரி கிடந்துச்சு எங்க நிலம். அதை சுத்தம் செஞ்சு, விவசாயத்துக்கு ஏத்த நிலமா மாத்தினேன். கிணறு இருந்ததால தண்ணி பிரச்னை இல்ல. நிலம் தயாரானதும்… சோளம் விதைச்சேன். அதுல ஓரளவு லாபம் கிடைக்கவே… அடுத்தடுத்து அடி எடுத்து வைக்கிற நம்பிக்கை உள்ளுக்குள்ள துளிர் விட்டுச்சு” என்று நம்பிக்கையை விதைத்த சரவணன், தொடர்ந்தார்.
திட்டமிட்டது 3 ஏக்கர்… நடவு செய்தது 5 ஏக்கர்!
”நிலத்து மண்ணை பரிசோதனை பண்றதுக் காக குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்துல கொடுத்தேன். ‘இந்த மண்ணுல மிளகாய் நல்லா வரும்’னு சொன்னதோட… தொழில்நுட்பங்களையும் அங்க சொல்லிக் கொடுத்தாங்க. ஆரம்பத்துல மூணு ஏக்கர்லதான் மிளகாய் நடலாம்னு இருந்தேன். அதுக்காக நாத்து தயாரிக்கறதுக்காக மேட்டுப்பாத்தி போட்டு, வீரிய ரக மிளகாய் விதைகள விதைச்சப்போ… எல்லா விதையுமே முளைச்சு வந்துடுச்சு. அதனால அஞ்சு ஏக்கர்ல நாத்துகளை நடவு செஞ்சுட்டேன். இந்த வீரிய ரகம் வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது. இதுல, நல்ல விளைச்சல் கிடைச்சுது. இப்போ ரெண்டாவது முறையாவும், மிளகாய் சாகுபடி செய்திருக்கேன்” என்ற சரவணன், மிளகாய் சாகுபடி முறைகளைச் சொன்னார். அவை அப்படியே பாடமாக இங்கே…
குளுமை இருந்தால், நோய் தாக்காது!
‘மேட்டுப்பாத்தி அமைத்து, அதில் மிளகாய் விதைகளைத் தூவி விதைத்து, நாற்று தயார் செய்து கொள்ள வேண்டும் (ஏக்கருக்கு 80 கிராம் விதை தேவைப்படும்). தேர்வு செய்த நிலத்தை… சட்டிக் கலப்பை, கொக்கிக் கலப்பை, ரோட்டோவேட்டர் ஆகியவற்றால் வரிசையாக உழுது… ஒரு ஏக்கருக்கு 10 டன் தொழுவுரம், இரண்டு டன் மண்புழு உரம் என்ற கணக்கில் தூவி, மண் பொலபொலப்பாகும் வரை உழவு செய்ய வேண்டும். பிறகு, இரண்டடி அளவில் பார் பிடித்து அதில், 25 நாள் வயதுடைய நாற்றுகளை இரண்டடி இடைவெளியில், குத்துக்கு ஒன்றாக நடவு செய்ய வேண்டும்.
எப்போதும் நிலம் ஈரம் காயாமல், குளுமையாக இருக்குமாறு பாசனம் செய்துவர வேண்டும். குளிர்ச்சி நிலவினால், நோய்கள் தாக்காது. களைகள் மண்டுவதைப் பொருத்து அவற்றை, அகற்றி, மண் அணைத்துவிட வேண்டும் சொட்டுநீர்ப் பாசனம் செய்தால், களைகள் கட்டுப்படும். மாதம் ஒரு முறை,10 லிட்டர் தண்ணீருக்கு, 300 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து, செடிகளுக்கு மேல் தெளிப்பாக தெளித்துவர வேண்டும். இது ஒரு டேங்க்குக்கான அளவு. ஏக்கருக்கு 10 டேங்க் தெளிக்க வேண்டும் 45-ம் நாளுக்கு மேல் பூவெடுத்து, பிஞ்சாக மாறி 75-ம் நாளில் அறுவடைக்கு வரும்.
வேர் அழுகலுக்கு வேப்பம் பிண்ணாக்கு!
காய்க்கத் தொடங்கியதில் இருந்து, 15 நாட்களுக்கு ஒரு முறை பத்து லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் நொச்சி இலைக்கரைசல் (நொச்சி இலைகளை மாட்டு சிறுநீரில் ஒரு நாள் ஊற வைத்தால்… கரைசல் தயார்) என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். இது ஒரு டேங்கிற்கான அளவு. ஏக்கருக்கு 10 டேங்க் தெளிக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு பயிர் வளர்ச்சி ஊக்கியையும், இதேபோல தெளித்துவர வேண்டும். இந்த மூன்றையும் ஒரே நாளில் தெளிக்காமல், வெவ்வேறு நாட்களில் தெளிக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளவும்.
மழைக்காலத்தில் நிலத்தில் தண்ணீர் தேங்கி நிற்காத அளவுக்கு பராமரிக்க வேண்டும். தண்ணீர் தேங்கும் சூழல் ஏற்பட்டால், முன்னெச்சரிக்கையாக ஏக்கருக்கு 50 கிலோ வேப்பம் பிண்ணாக்கு இட்டால், வேர் அழுகலைத் தடுக்கலாம். 70-ம் நாளில் இருந்து தொடர்ந்து நான்கு மாதங்கள் வரை அறுவடை செய்யலாம். ஆரம்பத்தில் விளைச்சல் குறைவாக இருந்து, படிப்படியாக அதிகரிக்கும். தினமும் ஒரு ஏக்கர் நிலத்திலிருந்து 100 கிலோ முதல் 200 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
சுழற்சி முறையில், தினமும் அறுவடை!
சாகுபடிப் பாடம் முடித்த சரவணன், ”ஒரு செடியில எட்டு நாளைக்கு ஒரு தடவை காய் எடுக்கிறோம். அதனால, சுழற்சி முறையில் காய் எடுத்தா… தினமும் அறுவடை செய்யலாம். எனக்கு அஞ்சு ஏக்கர்ல இருந்து தினமும் 500 கிலோவுக்கும் மேலதான் மிளகாய் கிடைக்குது. மொத்தமா 5 ஏக்கர்ல 65 டன் அளவுக்கு மகசூல் கிடைக்குது. ஒட்டன்சத்திரம் சந்தையிலிருந்து வியாபாரிங்க வந்து வாங்கிட்டுப் போயிடுறாங்க. மிளகாய் விலை தினமும் மாறுனாலும், சராசரியா 15 ரூபாய் விலை கிடைச்சுடுது. எல்லா செலவும் போக அஞ்சு ஏக்கர்ல, இருந்து 200 நாள்ல ஏழரை லட்ச ரூபாய் லாபம் கையில நிக்குது’ என்று சந்தோஷமாகச் சொன்ன சரவணன்,
”இப்போ சொல்லுங்க…. இந்த வருமானம், வேறெந்த வருமானத்துக்கும் குறைஞ்சதா” என்று சிரித்தபடியே கேட்டு விடைகொடுத்தார்.
தொடர்புக்கு,
சரவணன்,
செல்போன்: 99655-95314
நன்றி
பசுமை விகடன்
மிகவும் பயனுள்ள தகவல்.
பகிர்ந்தமைக்கு நன்றி.