மழைக்காலத்தில் நிலக்கடலை பயிரை தாக்கும் பூச்சிகள்:பாதுகாக்க எளிய வழிமுறை
நிலக்கடலை பயிரை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க எளிய வழிமுறையை வேளாண்மை துறை அதிகாரி ஆலோசனை வழங்கினார்.தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் எண்ணெய் வித்து பயிரில் நிலக்கடலை முக்கியமானது. நிலக்கடலை பயிரிட முறையான பாத்தி அமைத்தல், உரமிடுதல், நுண் ஊட்டமிடுதல், ஊட்டச்சத்து கலவை தெளிப்பு, விதை நேர்த்தி, களை கட்டுபாடு, பாசனம் செய்தல் அவசியம். பூச்சி மேலாண்மையிலும் விவசாயிகள் அக்கறை காட்ட வேண்டும். மழைக்காலத்தில் நிலக்கடலை பயிரில் ரோமப்புழு, சுருள் பூச்சியின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதைக் கட்டுபடுத்த, கோடை காலத்தில் நிலத்தை உழவு செய்து ரோமப்புழுக்களின் கூட்டுப்புழுக்களை அழிக்க வேண்டும்.
விளக்குப் பொறி, தீப்பந்தம் வைத்து கவர்ந்து அழிக்க வேண்டும். பயிர்களில் இடப்பட்டுள்ள முட்டைகளை சேகரித்து அழிக்க வேண்டும். வயலை சுற்றிலும் 30 முதல் 25 செ.மீ அகலத்தில் குழிகள் அமைப்பதனால் பாதிக்கப்பட்ட வயல்களில் இருந்து பரவுவதை தவிர்க்கலாம்.
விவசாயிகள் பாசலான், டைமீத்தேயேட், மாலத்தையான், மீத்தைல்மத்தான், டைகுளோரோவாஸ் போன்றவற்றை வயலுக்கு தெளிக்கலாம். இதன் மூலம் பயிரை தாக்கும் பூச்சியினங்களின் தாக்குதல் குறையும்.
வேளாண்மை துறை இணை இயக்குனர் சம்பத்குமார் கூறுகையில்,” மழைக்காலங்களில் நிலக்கடலை பயிரை பூச்சிகளின் தாக்குதலிருந்து பாதுகாக்க விவசாயிகள் முறையான ஊட்டச்சத்து உரங்களை இடுதல் வேண்டும். வேளாண் துறையினரின் ஆலோசனை பெற்று அதன்படி கடைபிடித்தல் வேண்டும். மேலும், நிலக்கடலை பயிருக்கு இடையே ஊடுபயிராக துவரை மற்றும் தட்டைபயிரை பயிரிடலாம்’, என்றார்.
நன்றி
தினமலர்