ஒரு ஏக்கரில் 90 டன் கரும்பு மகசூல்: மொடக்குறிச்சி விவசாயி சாதனை
செம்மை சாகுபடி முறையில் ஒரு ஏக்கரில் 90 டன் கரும்பு மகசூல் செய்து மொடக்குறிச்சி விவசாயி சாதனை படைத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே ஈஞ்சம்பள்ளி வாத்தியார் காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த விவசாயி ரங்கசாமி. தனது நிலத்தில் விளையும் கரும்பை ஒப்பந்த அடிப்படையில் எழுமாத்தூர் சக்தி சர்க்கரை ஆலைக்கு அரவைக்காக விவசாயி ரங்கசாமி அனுப்பி வருகிறார்.
சாதாரணமாக ஒரு ஏக்கர் நிலத்தில் 40 முதல் 45 டன் கரும்பு மட்டுமே விளையும். இந்த ஆண்டு ரங்கசாமி ஒரு ஏக்கரில் 90.20 டன் மகசூல் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து, விவசாயி ரங்கசாமி கூறியதாவது:
15 ஆண்டுக்கும் மேலாக கரும்பு சாகுபடியில் ஈடுபட்டு வருகிறேன். 2005-ஆம் ஆண்டு சொட்டுநீர் பாசனம் அமைக்க சக்தி சர்க்கரை ஆலை சார்பில் ரூ. 5 ஆயிரம் மானியம் அளிக்கப்பட்டது. அதை கொண்டு எனக்குச் சொந்தமான 1.20 ஏக்கர் நிலத்தில் செம்மை கரும்பு சாகுபடி செய்தேன். கடந்த ஆண்டு வறட்சி காரணமாக ஒரு ஏக்கருக்கு 70 டன் மட்டுமே மகசூல் கிடைத்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு எனது 1.20 ஏக்கர் நிலத்தில் 353 ரகம் செம்மை கரும்பு சாகுபடி செய்தேன். சொட்டுநீர் பாசனம் மூலமாக உரம் போன்றவற்றை செலுத்தினேன். கரும்பு தொழில்நுட்பங்கள் குறித்த விவரங்களை மொடக்குறிச்சி சர்க்கரை ஆலை அலுவலர்கள் அவ்வப்போது நேரில் வந்து தெரிவித்தனர். இதன் காரணமாக, இந்த ஆண்டு ஓரு ஏக்கரில் 90.20 டன் கரும்பு விளைந்தது.
பொதுவாக கரும்பு சோகையை உரித்தால் மட்டும் 10 டன் ஏக்கருக்கு கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை எனது அனுபவத்தின் மூலமாகக் கற்று கொண்டேன்.
மேலும், இதுதொடர்பான தகவல்களைப் பெற விரும்பும் விவசாயிகள் 97152-16281 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: தினமணி