தமிழகத்தில் பயறு சாகுபடி வகைகளில் உளுந்து, பாசிப்பயறு, தட்டைப் பயிறு, துவரை, கொண்டைக்கடலை ஆகியன முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இதில் உளுந்து, பாசிப்பயிறு போன்றவை குறைந்த நாள்களில் விளைச்சல் பெறுவதால், இதன் உற்பத்தித் திறன் குறைவாகவே உள்ளது. துவரைப் பயறு விளைச்சலுக்கு 105 முதல் 200 நாள்கள் வரை உள்ளதால், இதன் உற்பத்தித் திறன் அதிகமாகும். மேலும், உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் தொழில்நுட்ப நடவு முறையில் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம்.
தொழில்நுட்பம் குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் ச. கண்ணையா கூறியது:
துவரை சாகுபடியில் நடவுமுறையைப் பின்பற்றுவதன் மூலம் போதிய பயிர் எண்ணிக்கையைப் பராமரிப்பதுடன், குறைந்த விதையளவுடன் 1 ஏக்கருக்கு 1 கிலோ விதை போதுமானது. தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்துவதால் இறவையில் 1 ஏக்கருக்கு 500 முதல் 600 கிலோவும், மானாவாரியில் 1 ஏக்கருக்கு 300 முதல் 400 கிலோ வரை கூடுதல் மகசூலும் கிடைக்கும்.
துவரை நடவு செய்வதற்குத் தேவையான நாற்றாங்காலை குழித்தட்டு மற்றும் பாலித்தீன் பைகளில் வளர்த்து நடவு செய்யலாம். பெருங்கரை போன்ற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இதுபோன்ற நாற்றாங்கால் அமைக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. குழித்தட்டு நாற்றங்கால் முறையில் 200 காஜ் கருப்பு நிற குழித்தட்டுகள் அமைத்து, அக் குழிகளில் மக்கிய தென்னை நார்க் கழிவுகள் மற்றும் மணல் பயன்படுத்தப்படுகிறது. தட்டில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி வேர்கள் அழுகி விடாமல் இருந்திட 3 முதல் 4 துளைகள் போட வேண்டும். 15 நாள் வளர்ந்துள்ள நாற்றுகளை நடவு செய்திடலாம்.
இக் குழித் தட்டுகளில் 90 சதவீதம் பரப்பியுள்ள தென்னைநார் மற்றும் மணலில் குழி ஒன்றில் இரண்டு விதைகளை ஊன்ற வேண்டும். பூஞ்சாள நோய் தாக்குதலிலிருந்து நாற்றுகளைப் பாதுகாத்திட 1 கிலோ விதையுடன் 10 கிராம் சூடோமோனாஸ் கலவையுடன் கலந்து விதைக்க வேண்டும். முளைத்த 10ஆம் நாளில் வீரியமான நாற்றை மட்டும் வைத்துவிட்டு, வலுவிழந்த நாற்றினை நீக்கி, ஒரு குழியில் ஒரு நாற்று மட்டும் இருக்குமாறு வைத்து பின்னர் நடவு செய்ய வேண்டும்.
நடவு முறை: நடவு செய்வதற்கு 1 வாரத்திற்கு முன்பு தொழு உரம் இட்டு நடவு வயலைத் தயார் செய்திட வேண்டும். வரிசைக்கு வரிசை 5 அடி, செடிக்கு செடி 3 அடி இடைவெளியில் நாற்றுகள் நடுவதற்கு ஏதுவாக சிறு குழிகள் எடுக்க வேண்டும். 15 நாள்கள் வளர்ந்துள்ள நாற்றுகளை அந்த குழிகளில் நடவு செய்ய வேண்டும்.
ஊடுபயிர் சாகுபடி: வரிசைக்கு வரிசை 5 அடி இடைவெளி உள்ளதால், காலியாக உள்ள பரப்பில் ஊடுபயிராக உளுந்து, பாசிப் பயறு மற்றும் கடலை போன்ற பயிர்களைப் பயிர் செய்யலாம். இதனால் கூடுதல் மகசூல் பெற்று அதிக லாபம் பெறலாம்.
களை மற்றும் நீர் மேலாண்மை: நடவு செய்த 20-ஆம் நாளில் கைக் களை எடுத்து களைகளைக் கட்டுப்படுத்தலாம். தண்ணீர் தேங்கினாலும், பற்றாக்குறை ஏற்பட்டாலும் பயிரின் வளர்ச்சி பாதித்து, மகசூல் இழப்பு ஏற்படும். இதனால் நடவின்போதும், பூக்கள் மலரும்போதும், காய்கள் உருவாகும்போதும் தண்ணீர் பாய்ச்சுவது அவசியம்.
நடவு செய்த 30ஆம் நாள் ஜீவாமிர்த கரைசல் தர வேண்டும். பூக்கும் தருணத்தில் பஞ்சகவ்ய கரைசலை இலை வழியாக 15 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். இதனால் அதிக எண்ணிக்கையில் காய்கள் உருவாகும்.
துவரையின் நுனி மேல் நோக்கி வளர்ந்து கொண்டே செல்லும். இதனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பக்கக் கிளைகள் தோன்றி, அதிக காய்கள் உருவாகும்.
எனவே, நடவு செய்த 20 முதல் 30ஆம் நாள் ஒருமுறையும், 50ஆம் நாள் இரண்டாவது முறையும் நுனியைக் கிள்ளிவிடவது அவசியம்.
பயிர் பாதுகாப்பு முறைகள்: சரியான நேரத்தில் மண் அணைத்துக் கொடுக்க வேண்டும். பூச்சிகள் ஏதேனும் தென்பட்டால், வேப்பம் கொட்டை கரைசல், பூண்டு மற்றும் நொச்சி கரைசல் போன்றவற்றை வேளாண் துறையினரின் ஆலோசனைப்படி தெளிக்க வேண்டும்.