நெல்வயலில் அசோலாவை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் விவசாயிகளுக்கு அதிகாரி யோசனை
நெல் வயலில் அசோலாவை பயன்படுத்துவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம் என வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துஅரியலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அசோலா என்பது தண்ணீரில் மிதக்ககூடிய பெரணி வகையைச் சேர்ந்த தாவரம். தமிழில் இதன் பெயர் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என அழைக்கப்படுகிறது. இது நெற்பயிருக்கு ஒரு சிறந்த இயற்கை உரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் கால்நடை மற்றும் கோழித் தீவனமாகவும் பயன்படுகிறது. நெல் வயலில் இரண்டாம் களை எடுக்கும்போது அசோலாவை வயலில் வைத்து மிதித்து விட்டால், கூடுதல் மகசூல் கிடைக்கும். அசோலாவை மண்ணில் கலந்து மக்கும் பொழுது சிறந்த உரமாக பயன்படும். மற்ற தாவரங்கள் அனைத்திற்கும் உரமாக பயன்படுத்தலாம். நெல் விளைச்சலில் இயற்கை உரமாக செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது. நெல்வயல்களில் இந்த அசோலாவை தூவிவிடுவதன் மூலம் 10 நாட்களில் வயல் முழுவதும் பரவி வளர்ந்துவிடும். நாற்று நடவு செய்த 7ம் நாள் வயலில் அசோலாவை 5 கிலோ தூவ வேண்டும். இதற்கு அளவு கிடையாது. பயிர்களுக்கு இடைவெளியில் கிடைக்கும் காற்று, சூரிய ஒளியை பயன்படுத்திக் கொண்டு அசோலா வேகமாக வளரும். நிலத்தில் பச்சைப் போர்வை போர்த்தியது போல, நிலம் முழுவதும் அசோலா படர்ந்து விடும். 20ம் நாளில் இருந்து ஒரு ஏக்கரில் தினமும் 50 முதல் 100 கிலோ வரை அசோலாவை அறுவடை செய்யலாம். நிலம் முழுவதும் படர்ந்து விடுவதால், களை கட்டுப்படுகிறது. சாதாரணமாக 15 தூர்கள் வெடிக்கும் நிலத்தில், 40 தூர்கள் வரை வெடிக்கும். இதன் காரணமாக வழக்கமான மகசூலைவிட 10% முதல் 20% கூடுதல் மகசூல் கிடைக்கும்.இதேபோல் மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்தால், அதிகபட்சம் 2 லிட்டர் வரை கூடுதல் பால் கிடைக்கும். 25% அளவுக்கு தீவனச்செலவு குறையும். கோழிகளுக்குக் கொடுத்தால் அதிக முட்டையிடும். மீன்களுக்குப் போட்டால் விரைவாக வளரும். புரதச்சத்து மிகுந்த இந்தப் பாசியில் வடை, போண்டா செய்து நாமும் சாப்பிடலாம். ஆகையால், ஒவ்வொரு விவசாயியும் கட்டாயம் அசோலா வளர்த்தால், வீட்டில் உள்ளவர்களோடு சேர்ந்து பயிர்கள், கால்நடைகள் என அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும். மிகச்சிறிய இலைகளையும், துல்லியமான வேர்களை கொண்டது. மேலும் இதன் தண்டு மற்றும் வேர்ப்பகுதி நீரில் மூழ்கி இருக்கும். இந்த வகை தாவரம் அதிவேக வளர்ச்சி கொண்டவை. பெரணி தாவரமான அசோலாவின் வளர்ச்சிக்கு மிதமான வெப்பநிலையான 35-36 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படுகிறது. அசோலாவில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து என முக்கியமான சத்துக்கள் ஒருங்கே அடங்கிய அதிசய தாவரமாக விளங்குகிறது. மேலும் தாது உப்புக்கள் 10% முதல் 15% வரையும் (கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம்), வைட்டமின்கள் மற்றும் பீட்டாகரோடின் மற்றும் பல நுண்ணூட்டச் சத்துக்களும் இதில் உள்ளன. இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த அசோலாவின் பயன்பாடுகளை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
உரச்செலவு 30% குறைவு
அசோலாவை நெல் வயலில் வளர்க்கும் போது, நீர் ஆவியாவது குறைகிறது. அசோலா, காற்றிலுள்ள நைட்ரஜனை மண்ணில் பிடித்து வைக்கும் வேலையைச் செய்வதால், ரசாயன முறையில் விவசாயம் செய்பவர்களுக்கு 30 சதவிகிதத்துக்கும் மேல் உரச் செலவு குறைகிறது.