மண்வளத்தை பெருக்க “சணப்பு’ சாகுபடி
மண் அரிப்பை தடுத்து மண்வளத்தை அதிகரிக்க சணப்பு பயிர் சாகுபடி செய்யலாம் என மேல்புறம் வேளாண்மை விரிவாக்க மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மேல்புறம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மேல்புறம் வட்டாரத்தில் மேடு பள்ளமான நிலப்பரப்பில் வேளாண் சாகுபடி நடைபெற்று வருகிறது. மழைக் காலங்களில் மழைநீரால் வளமான மேல் மண் அரிக்கப்பட்டு நிலம் வளம் அற்றதாக மாறி பயிரின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. மழைநீரால் சாகுபடி பயிரை சுற்றி களைகள் வளர்ந்து அவை சாகுபடி பயிருடன் நீருக்காகவும், உரத்துக்காகவும் போட்டிபோட்டு பயிர் மகசூலை குறைக்கிறது. மழையை நம்பி சாகுபடி செய்யப்படும் மானாவாரி தென்னை பயிர், கோடையால் வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கிறது. நீண்டகால பயிரான தென்னந் தோப்புகளில் மண் அரிப்பும், களை தொல்லையும், வறட்சியில் நீர் தேவையும் மிக அதிகம். இதனால் மகசூல் இழப்பும் அதிகம் ஏற்படுகிறது. இக் குறைகளை போக்க தென்னந்தோப்பில் ஊடுபயிராக சணப்பு பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.
காற்றில் உள்ள தழைச்சத்தை தனது வேர் முடிச்சுகளில் உள்ள நுண்ணுயிர்கள் மூலம் சேமிக்கும் திறன் கொண்ட சணப்பு பயிர் விதைத்த 45 நாள்களில் சுமார் 2 மீட்டர் உயரத்துக்கு வேகமாக வளர்ந்து ஏக்கருக்கு 4 முதல் 5 டன் தழை உரத்தையும் சுமார் 15 கிலோ தழைச்சத்தையும் தரும் தன்மை கொண்டது. சணப்பு பயிரின் ஆணி வேர்கள் மண்ணின் ஆழத்துக்கு ஊடுருவி, மற்ற பயிருடன் உரத்திற்காக போட்டியிடாது வளரும் தன்மை கொண்டது. தென்னந்தோப்புகளில் வேறு மரத்தின் இலைத் தழைகளை இட்டால் அவை மக்குவதற்கு அதிக காலத்தை எடுத்துக் கொள்ளும். ஆனால் நன்கு வளர்ந்த சணப்பு பயிர் பூக்கும் முன் மண்ணுடன் உழுவதால் 5 முதல் 6 வாரத்துக்குள் நன்றாக மக்கி பயிருக்கு நல்ல உரமாக மாறிவிடும்.
சணப்பு பயிர் சாகுபடி செய்யப்பட்ட தென்னந்தோப்புகளில் மண் பிடிமானம் அதிகமாகி மேல் மண் அரிப்பு தடுக்கப்படும். வளமான மண் நஷ்டம் அடைவதில்லை. சணப்பு மிகவும் வேகமாக வளரும் தன்மை கொண்டதால் களைகள் ஏதும் வளராமல் களை வளர்ச்சியை கட்டுப்படுத்தி மகசூல் அதிகரிக்கச் செய்யும்.
ஒரு ஏக்கர் தென்னந்தோப்பில் 20 கிலோ சணப்பு விதை விதைக்க வேண்டும். சணப்பு விதைத்த விவசாயிகளுக்கு விதைக்கான விலையில் பாதி மானியமாக வழங்கப்படும். சணப்பு விதைக்கான மானியம் பெற மேல்புறம் வட்டார வேளாண்மை துறை அலுவலர்களை 04651 262263 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
தினமணி