சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க…
Date November 5, 2015 Author By admin Category தகவல்கள்
உடல் ஆரோக்கியத்தில் சிறுதானியங்களின் பங்களிப்பு அதிகமுள்ளதால் வரும் காலத்தில் சிறுதானியங்களின் பயன்பாடு அதிகரிக்கும். இதையொட்டி, சிறுதானியங்களைப் பயிரிடும் விவசாயிகளுக்கு பலனும் அதிக அளவில் இருக்கும் என வேளாண் துறையினர் கூறுகின்றனர்.
நாளுக்கு நாள் மக்களின் உடல் ஆரோக்கியம் கேள்விக் குறியாக உள்ளது. உண்ணும் உணவிலும் ரசாயனங்களின் கலவை உள்ளதால், 30 வயது முதலே மக்கள் நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு ஒரே தீர்வாக ஊட்டச் சத்து உணவு தேவை என்றால், அது சிறுதானிய உணவு வகை மட்டுமே.
சிறுதானியங்களின் சிறப்பு: அரிசி, கோதுமை, மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, பணிவரகு, சாமை, வரகு, குதிரைவாலி ஆகியவை சிறு தானியங்கள் ஆகும்.
உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் நுண் கிருமிகளின் வளர்ச்சியை சிறு தானியங்கள் தடுக்கின்றன; பெருங்குடலின் செயல்பாட்டை சீராக்குகின்றன; உடல்நலத்துக்கு ஏதுவான கிருமிகளின் வளர்ச்சியைத் தூண்டுகின்றன; உடலின் சுறுசுறுப்புக்குக் காரணமான சொரட்டின் உற்பத்தியை அதிகரிக்கின்றன.
சிறுதானியங்களில் அதிக அளவில் காணப்படும் மெக்னீசியம், ஆஸ்துமாவையும் ஒற்றைத் தலைவலியையும் தடுக்கிறது. ரத்த அழுத்தத்தை சீராக்குவதால் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. சிறுதானியங்களில் உள்ள நியாசின் (வைட்டமின் பி3) ரத்தத்தில் அதிக அளவில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது.
தினமும் சிறுதானியங்களைப் பயன்படுத்துவேருக்கு நிரிழிவு நோய் வருவதில்லை.
இவற்றை அதிக அளவு உணவில் பயன்படுத்துவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும்.
ஊட்டச்சத்துக் குறைவால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் தடுக்கப்படுகின்றன. பெண்களுக்கு பித்தப்பையில் கற்கள் வருவதும் தடுக்கப்படுகிறது. அதிக அளவு நார்ச்சத்து உள்ள சிறுதானியங்கள் புற்றுநோயைத் தடுக்கின்றன.
உடல் பருமன் உள்ளவர்கள் சிறுதானியங்களைப் பயன்படுத்தும்போது உடல் எடை சீராகிறது. பைட்டோ கெமிக்கல், பைட்டிக் அமிலம் ஆகியவை சிறு தானியங்களில் காணப்படுவதால், அவற்றை உட்கொள்வோருக்கு நோய்கள் வராமல் தடுக்கின்றன. மேலும் எலும்பு வளர்ச்சிக்கும், உடலின் சராசரி ஆரோக்கியத்துக்கும் சிறு தானியங்கள் பெரிதும் துணை புரிகின்றன.
விவசாயிகளுக்கு விதை பெருக்குத் திட்டம்: தரமான சான்று பெற்ற நெல் மற்றும் சிறுதானியங்கள், பதிவு செய்யப்பட்ட விதைப் பண்ணை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, அரசால் நிர்ணயிக்கப்பட்ட விதை மாற்று சதவீதத்தின்படி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
எண்ணெய் வித்துக்கள், பயறு வகை, மக்காச்சோளம் ஒருங்கிணைந்த திட்டம்: மக்காச்சோளம் பயிரின் சாகுபடிப் பரப்பை அதிகரிக்கவும், உற்பத்தித் திறனை உயர்த்துவதற்கும், சான்று விதை உற்பத்தி, விநியோகம் செயல்முறை விளக்கங்கள் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். மேலும் நீர் ஆதாரத்தில் இருந்து வயலுக்கு குழாய் மூலம் நீரைக் கொண்டு செல்லவும் பயிற்சி அளித்தல் போன்ற செயல்பாடுகள் இத்திட்டத்தில் உள்ளன.
சிறுதானிய விரைவுத் திட்ட அணுகுமுறை: தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிறுதானிய சாகுபடியை தமிழகத்தில் ஊக்குவித்தலுக்காக அரசுத் தரப்பில் பல கோடி செலவிடப்படுகிறது.
சோளம், கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம், தினை, வரகு, சாமை, குதிரைவாலி ஆகிய சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க சிறுதானிய விரைவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டம் பல்வேறு இனங்களாக தொகுப்பு செயல் விளக்கம், விதை விநியோகம், மக்காச்சோளத்தில் துல்லியப் பண்ணையம், பருவ வாரியாக விவசாயிகளுக்குப் பயிற்சி, கருத்தரங்கு ஆகியவை பயிர் வாரியாக விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, ஈரோடு, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் இணைய விருப்பமுள்ள விவசாயிகள், அந்தந்தப் பகுதி வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்துக்குச் சென்று அறிந்து கொள்ளலாம்.
நன்றி
தினமணி
Tags: வேளாண்மை துறை சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க...