தரிசு நிலத்தில் வருவாய்அளிக்கும் “லெமன் கிராஸ்’
தரிசு நிலத்தில் பராமரிப்பின்றி வருவாய் அளிக்கும் லெமன் கிராஸ் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தாண்டிக்குடி மலைப்பகுதியில் எலுமிச்சை வாசனை அளிக்கும் புல் அதிகளவு கரடு, சரிவான வனப்பகுதியில் உள்ளது. இவ்வகை புல் மண் அரிப்பு, நீர் சேமிப்பிற்கு உதவியாக உள்ளது. லெமன் கிராஸ் எனறழைக்கப்படும் இவற்றை “தரகு’ என்றும் கூறுவர். இவற்றிலிருந்து எடுக்கப்படும் சிட்ரோனால், சிட்நூல், ஜெரேனியா எண்ணெய் அழகு சாதனப் பொருட்கள் பயன்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. விவசாயப்பயிர்களுக்கு பூஞ்சாண கொல்லியாகவும் பத்ன்படுகிறது.
இவற்றின் இலையை சிறிதளவு தேனீருக்கு பயன்படுத்துவதால் உடலில் சுறுசுறுப்பும், நோய் எதிர்ப்பு அதிகரிக்க உதவுகிறது. வீடுகளில் கொசு விரட்டியாகவும் பயன்படுகிறது. வருசநாடு மலைப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் நடவு செய்து எண்ணெய் எடுத்து விற்பனை செய்தனர். காலப்போக்கில் இதன்பயன்பாட்டை தவிர்த்து விட்டப்படியால் வனப்பகுதி கரடுகளில் இவற்றை காண முடிகிறது. ஒரு ஏக்கர் தரிசு நிலத்தில் மானாவாரியாக இவ்வகை புல்லை நடவு செய்தால் ஆண்டுக்கு எண்ணெய் மூலம் ரூ. ஒன்றரை லட்சம் வரை லாபம் ஈட்டலாம் என தோட்டக்கலை ஆராய்ச்சி நிலை விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். குறைவாக உள்ள இவ்வகை புல் மூலம் கிடைக்கும் எண்ணெய்க்கு வெளிநாடுகளில் மவுசு உள்ளது. தரிசு நிலத்தில் லாபம் ஈட்டும் இவ்வகை புல்லை நடவு செய்ய இனி மேலாவது விவசாயிகள் முயற்சிக்கலாம்.
நன்றி
தினமலர்