காணாமல் போன தமிழரின் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்துவரும் புதுகை விவசாயிகள்…!
சாகுபடியில் காணாமல் போன விவசாயிகள் மறந்துவிட்ட பாரம்பரிய மருத்துவ குணம் கொண்ட வறட்சியையும், நோய்த் தாக்குதலையும் தாக்குப்பிடிக்கக்கூடிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் பணியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் தமிழகத்துக்கே முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்றனர் என்றார் மிகையில்லை.
ஆயிரமாயிரம் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இயற்கையை அவற்றால் வெல்ல முடியாது என்பதற்கு தற்போது புழக்கத்தில் உள்ள ஒட்டு நெல் இரகங்களை உதாரணமாகக்கூறலாம். பெரும்பாலான ஒட்டு ரக நெல் வகைகள் நமது மண்ணுக்கும், சூழலுக்கும் ஏற்றதாக இல்லை. “குறைந்த நாட்களில் அதிக விளைச்சல்” என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்டவைதான் இந்த குட்டை ரக நெல்கள். ஆனால் பாரம்பரிய நெல் ரகங்கள், மாட்டுக்கு வைக்கோல், மண்ணுக்குத் தழைச்சத்து, விவசாயிக்கு நெல் ஆகிவற்றை உள்ளடக்கியதாக இருந்தன.
மேலும், மண்வளம், பூச்சி வளம், நீர் வளம், நம் உடல் வளம் ஆகியவற்றை காக்கும் வலிமையுடையது. சுமார் 160 பாரம்பரிய நெல் ரகங்கள் அனைத்தும் பசுமைப் புரட்சியால் மறக்கடிக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டன. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளும், தொண்டு நிறுவனங்களும் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரின் வழிகாட்டுதலுடன் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்ட இயற்கை விவசாயிகளால் 24 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்டுள்ள பாரம்பரிய நெல் ரகங்கள்:(வயது நாள்கள் அடைப்புக்குள்):
பூங்கார் -(100 – 105), மாப்பிள்ளைச் சம்பா-(165 – 170 ), கருடன் சம்பா-(170 – 180),சிவப்பு கவுனி-(135 – 140), பனங்காட்டு குடவாழை-(135 – 145 ), கருத்தக்கார்-(105 – 110), சண்டிகார்-(155 – 165), கருங்குறுவை-(120 -125), குருவைக்களஞ்சியம்-(140 – 145), தூயமல்லி-(135 – 140),தங்கச்சம்பா-(160 – 165),நீலச்சம்பா-(175 – 180),செம்புளிச்சம்பா-(135 – 140),கிச்சடிச்சம்பா-(135 – 140), இலுப்பைப்பூ சம்பா-(135 – 140),அறுபதாம் குறுவை-( 80 – 90), சீரகச்சம்பா-(125 – 130), காட்டுயானம்-(180 – 185), சொர்ணமுசிறி-(140 – 145) சிவப்பு குருவிக்கார்-(120 – 125),கருப்புக்கவுனி-(140 – 150), மிளகி-(120 – 130),சம்பாமோசனம்-(160 – 165), கைவிரச்சம்பா-(160 – 165) ஆகிய ரகங்கள் அடங்கும்.
பாரம்பரிய நெல் ரகங்களில் உள்ள மருத்துவ குணங்கள்:
அனைத்து ரகங்களுமே எளிதில் ஜீரணமாகக்கூடியது, மலச்சிக்கலை நீக்கும், நரம்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது.
பூங்கார்: உடம்பில் சுரக்கும் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. கர்பிணிப் பெண்களுக்குப் பத்தியக் கஞ்சி வைத்துக் கொடுத்தால் சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும், துத்தநாக சத்து உள்ளது.
மாப்பிள்ளைச்சம்பா:
நேரடி விதைப்பிற்கும் ஏற்றது, சத்துள்ள இந்த நீராகாரத்தை சாப்பிட்டால் இளவட்டக் கல்லைக் தலைக்கு மேல் சுலபமாகத் தூக்க முடியும். நரம்புகளை வலுப்படுத்தும், ஆண்மைத்தன்மையை அதிகரிக்கும்
சிவப்பு கவுணி: இதயத்தை பலப்படுத்தும், பல் அலகுகளை பலப்படுத்தும், இரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்தும், மூட்டு வலியை நிவர்த்தி செய்யும்.
குடவாழை:குடலை வாழ வைப்பதால் இப்பெயர் வந்தது. சர்க்கரை நோய் வராமல் தடுக்கும், அஜீரண கோளாறை குணப்படுத்தும். நீர்ப்பிடிப்பு பகுதிக்கு மிகவும் ஏற்றது.
கருத்தக்கார்: வெண்குஷ்டத்தை போக்கும் காடி தயாரிப்பதற்கு பயன்படுகிறது. பாதரசத்தை முறித்து மருந்து செய்வதற்கு பயன்படுகிறது.
சண்டிகார்: தீராத நோய்களை தீர்க்க வல்லது, உடல் வலிமையை கொடுக்கும், முறுக்கேற்றும்
நரம்புகளை பலப்படுத்தும். போன்ற பல்வேறு வகையான மருத்துவ குணங்களை உள்ளடங்கியுள்ளன.
கருங்குறுவை:
விரண தோல் நோய்களையும், குறிப்பிட்ட விஷத்தையும் போக்கும். யோக சக்தியையும் தரும்.
மாப்பிள்ளை சம்பா:
இது புரதம், நார், தாது, உப்புச்சத்து நிறைந்தது. இதன் நீராகாரத்தை சாப்பிட்டால் நரம்புகள் வலுப்படும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்
கைகுத்தல் புழுங்கல் அரிசி:
low glycemic தன்மை கொண்டது. அது இரத்ததில், சர்க்கரை அளவினை மெதுவாக ஏற்றி சர்க்கரை நோயாளிக்கு திடீர் சர்க்கரை உயர்வைத் (hyper glycemia) தடுக்கும். குழந்தைகள், வாத இருப்பவர்கள், அரும்பத்தியம் இருப்பவர்களுக்கு உதவும்.
காட்டுயானம்:
ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும். டைப் 2 சக்கரை வியாதி நோயாளிகளுக்கு உகந்தது.
அன்னமழகி:
மிகவும் இனிப்பு சுவையுள்ள அன்னமழகி அரிசி சகல சுரங்களையும், பித்த வெப்பத்தையும் போக்க கூடியது. உடலுக்கு சுகத்தை கொடுக்கும்.
இலுப்பைப் பூச்சம்பா:
பித்தத்தினால் விளையும் சிற்சில ரோகம், சிரஸ்தாபம், உபசர்க்கதாகம், உஷ்ணம் ஆகியவற்றை உண்டாக்கும்.
கல்லுண்டைச்சம்பா:
இதை உண்பவர்களுக்கு மல்யுத்தக்காரரும் எதிர்க்க இயலாத தோள் வலிமையை தரும். மிகுந்த வார்த்தை வளமும் உண்டாக்கும்.
காடைச்சம்பா:
இந்த அரிசி பிரமேக சுரமும், குறிப்பிட்ட நோய்களையும் நீக்கும். விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும்
.
காளான் சம்பா:
உடலுக்கு மலை போன்ற உறுதியையும், சுகத்தையும் தரும். சில வாத ரோகத்தையும் குறைக்கும்.
கிச்சிலிச்சம்பா:
பலம், உற்சாகம், உடல் பளபளப்பு ஆகியவற்றை உண்டாக்கும். தேறாத உடல் தேறும்.
குறுஞ்சம்பா:
பித்தம், கரப்பான் நீங்க விந்து விருத்தியை உண்டாக்கும். வாத நோயைநீக்கும்.
கைவரை சம்பா:
உடலுக்கு அதிக வலிமையும், சுகமும் உண்டாக்கும். இதில் சிறிது பித்தமும் அதிகரிக்கும்
சீதாபோகம்:
உடல் பலம், தேக பளபளப்பு, விந்து விருத்தி உண்டாகும். அஜீரணத்தை குறைக்கும்.
புழுகுச்சம்பா:
இந்த அரிசியை உண்பவர்களுக்கு வனப்பும், அமைதியும், பசியையும், பலமும் உண்டாக்கும். தாகம் நீங்கும்.
மணக்கத்தை:
தோல் நோய்கள் அனைத்தையும் போக்கும். புண்கள், ரணங்கள் ஆகியவற்றை குறைக்கும்.
மணிச்சம்பா:
அளவுக்கு அதிகமாக சிறுநீரை குறைக்கும். குழந்தை, முதியவர்களுக்கு அதிகசுகத்தை உண்டாக்கும்.
மல்லிகை சம்பா:
நாவிற்கு மிகவும் ருசியானது. தேகத்திற்கு சுகத்தையும், உறுதியையும் தரும். கரப்பான், பிரமோகம், உடல் வெப்பம் ஆகியவற்றை போக்கும்.
மிளகு சம்பா:
உடலுக்கு சுகத்தை தரும். பசியை உண்டாக்கும். வாதம் போன்ற பல விதமான ரோகத்தை போக்கும்.
மைச்சம்பா:
வாதம், பித்தம் போன்ற கோளாறுகளை குறைக்கும். வாத கோபம்,வாந்தி போன்றவற்றை போக்கும்.
வளைத்தடிச்சம்பா:
வாத, பித்த தொந்தரவு, வயிற்று உப்புசம், வயிற்று இரைச்சல், கரப்பான் ஆகியவற்றை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம்.
வாலான் அரிசி:
மந்தம், தளர்ச்சி முதலியவை குறையும். உடலுக்கு அழகும், கொழுமையும் உண்டாக்கும்.
மூங்கில் அரிசி:
மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும். இந்த பூவிலிருந்து வரும் காய்கள் தான் நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். மூங்கிலிலிருந்து பெறப்படும் மூங்கிலரிசியைச் சமைத்து உண்டு வர, உடல் திடம் உண்டாகும், உடல் இறுகும், கொடிய நோய்களெல்லாம் நெடுந்தூரம் ஓடிவிடும்.
பழைய அரிசி:
பாலர், முதியோர்களுக்கு மிகவும் உகந்தது. பசியும், உடலுக்கு குளிர்ச்சியும் உண்டாகும். சில நோயும்,கபமும் குறையும்.
இவை அனைத்தும் அரிசியின் பல வகைகளும், அவற்றை உண்பதால் ஏற்படும் நன்மை, தீமைகளும் ஆகும். இதை கொண்டு உடலுக்கு ஆரோக்கியமானஅரிசியை மட்டும் சாப்பிட்டு நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கைவாழ்வோம்.
இதையறிந்திருந்த நம் முன்னோர்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க, வறட்சியையும், வௌ்ளத்தையும் தாங்கி வளரக்கூடிய பல்வேறு வகையான பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு நோயற்ற வாழ்க்கையை ருசித்து வந்தனர். ஒரு சில விவசாயிகளிடம் இருந்த இந்தப் பாரம்பரிய நெல் ரகங்களை தேடிப் பிடித்து அதை புதுக்கோட்டையில் சாகுபடி செய்து அதை தமிழகம் முழுதும் பரவச் செய்யும் வேலையை இயற்கை விவசாயிகளும், தொண்டு நிறுவனங்களும் செய்து வருகின்றனர்.
இது குறித்து ரோஸ் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் ஆதப்பன் கூறியது: கடந்த 20 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தை பரப்பும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம். கடந்த 2010 -ம் ஆண்டு முதல் நபார்டு வங்கியுடன் இணைந்து பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் திட்டம் செயல்படுகிறது. 24 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாக்கப்பட்டு அன்னவாசல், அரிமழம், அண்டக்குளம் பகுதிகள் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு விதைகளை கொடுத்து பரவலாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
சிறு குறு விவசாயிகளையும், பெண் விவசாயிகளையும் ஒருங்கிணைத்து, இயற்கை விவசாய யுக்திகளை பல்வேறு பயிற்சிகள் மூலமாகவும், களப்பார்வைகள் மூலமாகவும், இயற்கை விவசாய மீட்பு மாநாடுகள் மூலமாகவும், பாரம்பரிய உணவுத் திருவிழாக்கள் மூலமாகவும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் போன்ற வல்லுநர்கள் மூலமாகவும் மாவட்ட மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறோம். நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அதிகாரி எஸ். சோமசுந்தரம், பாரம்பரிய நெல் நடவு செய்யப்பட்டுள்ள வயல்களை நேரில் ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும், பாரம்பரிய நெல் விதைகள் தேவைப்படும் விவசாயிகள் 98420 93143 -ல் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
இது குறித்து கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்டச்செயலர் சி. அப்பாவுபாலாண்டார் கூறியதாவது:
நம் முன்னோர்கள் சாகுபடி செய்த பாரம்பரியமிக்க நெல் ரகங்கள் படிப்படியாக மறையத் தொடங்கியதால்,ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் வளரும் உணவு தானியங்களால், மண் வளம் பாதிக்கப்பட்டு விளை நிலங்கள் பாலைவனங்களாக மாறிவிட்டன, இதை உண்பவர்களும் விதவிதமான நோய்களுடன் உலவி வருகின்றனர். இச்சூழலில் நாம் தற்போது பயன்படுத்திவரும் அரிசி ரகங்களை விட பல மடங்கு புரதச்சத்து, நார்ச்சத்து மிக்க பாரம்பரிய நெல் ரகங்களின் சாகுபடிக்கு நாங்கள் மாறிவிட்டோம். இதே போல அனைவரும் மாற வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றார்.
நன்றி: Facebook