நிலப்போர்வையில் வராது களை தொல்லை
எந்த மாதிரியான மண்ணிலும் களைகள் வரும். அதனை தனி முயற்சியால் தடுத்திட உதவும் உன்னத உத்தி தான் நிலப்போர்வை. நிலப்போர்வை என்பது பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பாலிதீன் ஷீட்கள் மெல்லிய காகிதம் போன்றவை. கருப்பு வெள்ளை நிறங்களில் கிடைப்பவை. இதனை நிலத்தில் போர்வை போல பரப்பி ஓட்டை போட்டு அங்கு மட்டும் பயிர்கள் நட்டு (அதாவது நாற்றுகள்) நல்ல பயிர் வளரும் சூழலை உருவாக்கலாம். நீண்டகால வயதுடைய மரக்கன்றுகள் சாகுபடிக்கும் கூட இத்தகைய நிலப்போர்வை உதவும். அதற்கு சற்று உறுதியான 50-100 மைக்ரான் பாலிதீன் ஷீட் தேவைப்படும். காய்கறி மற்றும் குறுகிய கால சாகுபடி பயிர்கள் 20-25 மைக்ரான் மல்ச்சிங் ஷீட் மூலம் வெகு எளிதில் சாகுபடி செய்யலாம்.
மல்ச்சிங் ஷீட் பல்வேறு அளவுகளில் பல நிறங்களில் பெறலாம். ஒருமுறை பயன்படுத்தியதும் அடுத்து பத்திரப்படுத்தி 2 முதல் 3 முறை பயன்படுத்தலாம். களைக்கு டாட்டா சொல்ல இதைவிட சிறந்த வழி இல்லை. சூரிய ஒளியை அளவாக நிலத்தில் பட விடும் இடங்களில் களைக்கு முளைத்திட வாய்ப்பே தராததால் செலுத்திய நீர் மற்றும் உரம் பயிருக்கு மட்டுமே பயன்படுவதால் மகசூல் கூடுதலாகிறது. விளை பொருள் தரமும் மேம்படுகிறது.
பரந்த அளவில் மானாவாரி நிலப்பகுதியிலும் மரப்பயிர்கள் சாகுபடி செய்தாலும் அங்கும் பாலிதீன் மல்ச்சிங் ஷீட்கள் உதவும். குறிப்பாக மா சாகுபடியில் அதிக மகசூல் பெற உதவும் உன்னத உத்தியான அடர்டெவில் நிச்சயமாக பாலிதீன் ஷீட் மல்ச்சிங் பயன்படுகிறது. மிகவும் முக்கியமாக நிலத்தை தயாரிக்கும் போது களைகளை முளைக்கச் செய்து 2 அல்லது மூன்று முறை உழவு செய்தும் மண்புழு உரத்தை மட்டுமே பயன்படுத்தி வந்தாலும் களைகள் தாக்கம் வெகுவாக குறையும். முக்கால் அடி முதல் ஒரு அடி வரை பார்கள் எடுத்து நுண்ணீர்ப்பாசன அமைப்புகள் பொருத்தி பாலிதீன் மல்ச்சிங் ஷீட்டை நன்கு பரப்பி, மண் வைத்து நன்கு போர்வை போல மூடவும்.
கற்கள், பெரிய மண் கட்டிகள் இருப்பின் அவற்றை அகற்றலாம். பந்தல் காய்கறிகள், மலர்கள், தக்காளி, கத்தரி மற்றும் மா, கொய்யா, சப்போட்டா போன்ற பல பயிர்கள் வரை ஏதுவான சூழலை ஏற்படுத்தும் பாலிதீன் மல்ச்சிங் நீர்ப்பாசனம் செய்யும் கால அவகாசத்தையும் நீட்டிப்பது அற்புத பலனாகும். நிலத்தில் செலுத்திய நீர் ஆவியாகாது தடுக்கப்படுவதால் வாரம் ஒருமுறை நீர்ப்பாய்ச்சும் இடத்தில் பத்து நாளைக்கு ஒருமுறை பாய்ச்சவும் வாய்ப்பு உள்ளது. நிலப்போர்வை அமைத்திட விருப்பம் உள்ளவர்கள் 98420 07125 இல் பதிவு செய்யலாம்.
– டாக்டர் பா.இளங்கோ
தோட்டக்கலை உதவி
இயக்குநர்
உடுமலை, திருப்பூர்.
நன்றி
தினமலர்