சம்பாவில் இலைச் சுருட்டுப் புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்
Date October 15, 2015 Author By admin Category இயற்கை உரம்/மருந்து
சம்பாவில் இலைச் சுருட்டுப் புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்
தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெல் பயிர்களை இலைச் சுருட்டுப்புழுத் தாக்குதலில் இருந்து காப்பாற்ற பின் வரும் தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டுமென வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் த. சந்திரசேகரன் கூறியதாவது:
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெல் பயிர்களை இலைச் சுருட்டுப் புழுத் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் வகையில் விவசாயிகள் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மகசூல் இழப்பைத் தவிர்த்திடலாம்.
குறைந்த மழையும், காற்றில் ஈரப்பதம் மிகுதியாகவும், தற்போது நிலவும் வானிலை காரணமாக சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிரில் அனைத்து வட்டாரங்களிலும் இலைச் சுருட்டுப் புழுக்களின் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.
இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதல் அறிகுறிகள்:
முட்டைகளில் இருந்து வெளிவரும் புழுக்கள் இலைகளை நீளவாக்கில் மடித்துச் சேதப்படுத்துகின்றன.
சுருட்டப்பட்ட இலைச் சுருள்களுக்குள் புழுக்கள் இருந்து கொண்டு பச்சையத்தைச் சுரண்டி உண்பதால் இலைகளில் வெüóளை வெüóளையாகக் காணப்படும்.
இப்புழுவினால் தாக்கப்பட்ட இலைகள் வெளிறிக் காணப்படுவதுடன் பயிரில் ஒளிச்சேர்க்கை குறைந்து வளர்ச்சி குன்றிவிடுகிறது.
புரட்டாசி முதல் மார்கழி மாதம் வரை இப்பூச்சியின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
இப்பூச்சித் தாக்குதலை வயல்களில் அந்துப் பூச்சிகள் பறப்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். விளக்குப் பொறியால் பெருமளவில் தாய் அந்துப் பூச்சிகள் கவரப்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்: பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே உரமிட வேண்டும். தேவைக்கேற்ப மட்டும் தழைச்சத்து இட்டும், இப்பூச்சி அதிகமாகத் தோன்றும் இடங்களில் ரசாயன உரங்களைத் தவிர்த்தும் சேதத்தைக் குறைக்கலாம். தழைச்சத்தைப் பிரித்து மூன்று அல்லது நான்கு முறையாக இட வேண்டும். டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 2 சிசி எனும் அளவில் நடவு செய்த 37, 44 மற்றும் 51-வது நாள்களில் வயல்களில் விட வேண்டும்.
இலைச் சுருட்டுப் புழுவின் அந்துப் பூச்சிகள் இரவு நேரத்தில் விளக்குப்பொறியின் வெளிச்சத்தால் ஈர்க்கப்படுகின்றன.
எனவே, முன்னிரவு நேரங்களில் விளக்குப் பொறிகளால் கவரப்படும் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கணித்து, தேவைப்பட்டால் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தலாம். பொருளாதாரச் சேதநிலையானது பயிர் வளர்ச்சிக் காலத்தில் 10% இலைச் சேதத்தையும், பூக்கும் தருணத்தில் கண்ணாடி இலைகளில் 5% சேதத்தையும் தாண்டும்போது ஏக்கருக்கு 400 மி.லி. டிரை அசோபாஸ் அல்லது 10 கிலோ கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 4% குருணை அல்லது 500 மில்லி பிப்ரோனில் 5% எஸ்.சி. அல்லது 40 கிராம் தயோ மெத்தோசம் 25% நனையும் குருணை அல்லது 20 மி.லி. புளுபென்டையமைடு 480 எஸ்.சி. போன்ற பூச்சி மருந்துகளைத் தெளித்துச் சிறந்த முறையில் கட்டுப்படுத்தி பயிர்களின் இழப்பைத் தடுக்கலாம்.
நன்றி
தினமணி
Tags: சம்பாவில் இலைச் சுருட்டுப் புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்