பூச்சிகளை கட்டுப்படுத்த நவீன தொழில்நுட்பம்
நூற்றுக்கும் மேற்பட்ட பூச்சி வகைகள் பல வளர்ச்சி பருவங்களில் பயிர்களைத் தாக்கி சேதம் விளைவிக்கின்றன. அவைகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகளான தத்துப்பூச்சி, புகையான், கடித்து உண்ணும் புழுக்களான இலைச்சுருட்டுப் புழு ஆகிய பூச்சிகள் நட்ட பயிரிலும்,பயிர் பூத்த பின்னரும் முன்னரும் தாக்கி மகசூலை மிகவும் பாதிக்கச் செய்கின்றன. தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகத்தில் நெல் சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக முறைகளைப் பயன்படுத்தி சுற்றுப்புற சூழ்நிலைகளை பாதிக்காமல் தொழில்நுட்ப விளக்கங்களைப் பின்பற்றி விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
நிலத்திற்கேற்ப 3 வருடத்தில் ஒருமுறை ஊழிக்கலப்பை கொண்டு நிலத்தை உழவு செய்தல். மண்ணின் அங்கக சத்தை பாதுகாக்க பசுந்தாள் அல்லது பயறுவகைகள் பயிர் சுழற்சி, நன்கு மக்கிய தொழு உரம் / ஊட்டமேற்றிய தொழு உரம், வேப்பம் புண்ணாக்கு எக்டருக்கு 250 கிலோ இடுதல் அவசியம்.
மண்ணின் கார அமிலத்தன்மை 7க்கு மேல் இருந்தால் சூடோமோனாஸ், கார அமிலத்தன்மை 7க்கு குறைவாக இருந்தால் டிரைகோடெர்மா விரிடி 2.5 கிலோ/எக்டர் + 25 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் 100 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் 10 நாட்களுக்கு மேல் வைத்திருந்து கடைசி உழவுக்கு பிறகு இடுதல் அவசியம்.
பூச்சி நோய் தாங்கி வளரக்கூடிய பயிர் ரகங்களை பயன்படுத்துதல் அவசியம். சுத்தமான ஆதார விதைகளைப் பயன்படுத்தவும். சூடோமோனாஸ் புளூரசன்சுடன் விதைநேர்த்தி செய்தல், வேர் நனைத்தல், நடவு வயலில் இடுதல், ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் மற்றும் ஒரு எக்டர் நடவு வயலுக்கு 2.5 கிலோ இடுதல்.
நாற்றங்காலில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த 5 சத வேப்பங்கொட்டை சாறு அல்லது 2 சத வேப்பெண்ணெய் அல்லது அசாடிராக்டின் 0.03 சதம் விதைத்த 7-10 நாட்களில் ஒட்டும் திரவமான காதி கோபுர சோப்பு 3 கிராம்/லிட்டர் என்ற அளவில் கலந்து இலைப்பேன்களையும் தத்துப்பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம். சரியான இடைவெளியை கடைபிடித்து காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சத்தினால் புகையான், குருத்து ஈ, தண்டு துளைப்பான், ஆனைக்கொம்பன் ஆகியவற்றின் தாக்குதலை குறைக்கலாம். 6 அடிக்கு 1 அடி பட்டம் விட்டு நடவு செய்வதன் மூலம் பூச்சி எண்ணிக்கையை குறைக்க முடியும். நீர்பாசனத்தில் பாய்ச்சலும் காய்ச்சலும் என்ற ரீதியில் நீர் மேலாண்மை மேற்கொள்வதால் புகையானின் தாக்குதல் 60-80 சதம் வரை குறைகிறது.
நட்ட 25ம் நாளிலிருந்து 1 வார இடைவெளியில் 3 முறை டிரைகோகிரம்மா ஜப்பானிக்கம், பிறகு 3 முறை அதாவது நட்ட 37, 44, 51 நாட்களில் டிரைகோகிரம்மா கைலோனிஸ் எக்டருக்கு ஒவ்வொரு முறையும் 5சிசி(1,00,000 ஒட்டுண்ணி) என்ற அளவில் வயல்களில் விடுதல் அவசியம். இலை சுருட்டுப்புழுவைக் கட்டுப்படுத்த 5 சதம் வேப்பங்கொட்டை கரைசலைப் பயன்படுத்த வேண்டும். நெல்லில் பூச்சிகள் அதிகளவில் தோன்றி பொருளாதார சேத நிலையைக் கடக்கும்போது மட்டும் பரிந்துரைப்படி பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்த வேண்டும். புகையான் அதிகரிக்கச் செய்யும் செயற்கை பைரித்ராய்டு மருந்துகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
ஒருங்கிணைந்த எலி கட்டுப்பாடு: சிறிய வரப்புகளை அமைத்தல் (45 து 30செ.மீ.), சிங்க் பாஸ்பைடு நச்சுணவை வைத்தல் (49:1), தஞ்சாவூர் எலிக்கிட்டிகளை வைத்தல் (ஒரு ஏக்கருக்கு 35-40 எண்ணிக்கைகள்), புரோமோடைரான் கேர் வைத்தல். (தகவல்:ச.முகமது ஜலாலுதீன், கோ.ரவி, த.ஜெயராஜ், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை-612 101)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.
நன்றி
தினமலர்