இயற்கை வழி விவசாயத்திற்கு சில வழிமுறைகள்
இந்த உத்திகள் தமிழகத்தில் விவசாயிகள் பல்வேறு மாவட்டங்களில், பல்வேறு பயிர்களில் செய்து பார்த்து வெற்றி பெற்ற உத்திகளாகும். ஆனாலும் இந்த உத்திகளே முடிவானவைகள் அல்ல. நம்முடைய விவசாயத்தை மேலும் உயர்த்தக்கூடிய உத்திகள் பல உள்ளன. இன்று நாம் செய்து வருகின்ற பல்வேறு வகையான பயிர்களில் இந்த உத்திகளை கடைபிடித்து வெற்றி பெறுவதே நம்முடைய முதல் வேலையாக இருக்கும். அந்த வெற்றிக்கு பிறகு மேலும் உள்ள உத்திகள் உங்களைத் தேடி தானாகவே வந்து சேரும்.
குறிப்பிட்டுள்ள உத்திகளை உங்களது சூழ்நிலைகளுக்கு ஏற்ப முன்னே பின்னே சற்றே மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இவைகளை மேலும் உங்களுடைய அனுபவ அறிவைக் கொண்டு செழுமை அடைய செய்யலாம். எடுத்துக்காட்டாக பல பயிர் விதைப்பை பயிர் செய்வதற்கு முன்பே பயிரிட்டு மடக்கி உழவேண்டும் என்பதே ஆரம்பத்தில் கூறப்பட்ட உத்தியாக இருந்தது. ஆனால் விவசாயிகள் கரும்பு, மஞ்சள், வாழை போன்றவற்றில் பயிர்களுக்கு இடையே வளர்த்து, அறுத்து மூடாக்காக பயன்படுத்துகின்றனர். இது விவசாயி தன்னுடைய சூழலை ஒட்டி அறிவை பயன்படுத்தியதால் ஒரு பலனை மட்டும் தரக்கூடிய உத்தியை பல பலன்கள் தருகின்ற உத்தியாக மாற்றிய அறிவாண்மையாகும்.
இது போல் நீங்கள் செழுமை செய்த உத்திகளையும் கண்டறிந்த புதிய உத்திகளையும் பல்கலை கழகத்திற்க தெரிவிக்கும் பொழுது எல்லா விவசாயிகளையும் அடைவதற்கு ஏதுவாக அமையும். குறிப்பிட்டுள்ள உத்திகளை பயன்படுத்தி பெற்ற அனுபவங்களும் மற்றோருக்கு ஊக்கம் தருவதாக இருக்கும்.
இயற்கை விவசாயத்தில் எல்லைக்கோடு இல்லை. ஆனால் ஆரம்ப அடியாக எடுத்து வைக்கின்ற முதல் அடிக்கு இந்த உத்திகள் ஊன்றுகோலாய் அமையும்.
1. மண் வளம்
நமது பூமியின் வயது ஏறத்தாழ 460 கோடி ஆண்டுகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 100 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான். ஒரு செல் உயிரி தோன்றியிருக்கிறது. மனிதர்கள் தோன்றி 4.5 லட்சம் ஆண்டுகளே ஆகின்றன. நாம் ஏர் கட்டி விவசாயம் செய்ததெல்லாம் ஆறாயிரம் ஆண்டுகளாகத்தான். அதற்கு முன்னரும் இயற்கை செழிப்பாக இருந்திருக்கிறது.
அந்தக் காலங்களிலும், இப்போது நிலத்தை இடைவிடாமல் உழுது கொண்டிருப்பவை மண்ணிலுள்ள உயிரினங்களே.
உயிருள்ள மண் 3 தன்மைகளை கொண்டது.
1. இயற்பயில் தன்மை
(எ.கா. பொலபொலப்புத் தன்மை)
2. உயிரியல் தன்மை
(எ.கா. நுண்ணுயிரிகள், மண்புழுக்கள் இருப்பது)
3. இரசாயனத் தன்மை
(எ.கா.ஊட்டச்சத்துகள் கொண்டிருப்பது)
இரசாயன உப்புகள் (உரம்) கடந்த 40 ஆண்டுகளாக இட்டதால் நிலம் முதலில் உயிரியல் தன்மையை இழந்தது. பின் இரசாயனத் தன்மையையும் இறுதியில் இயற்பியல் தன்மையும் இழந்து விட்டது. கோடிக்கணக்கான ஆண்டுகளாக இருந்த மண்ணின் உயிரோட்டம் 40 ஆண்டுகளில் அழிக்கப்பட்டு மண் மலாடாக்கப்பட்டு விட்டது. நம் விளை நிலத்து மண்ணில் மீண்டும் உயிரோட்டம் ஏற்படுத்த வேண்டும். நுண்ணுயிரிகளை வளரச் செய்ய வேண்டும். மண்புழுக்களும், பிற மண்ணுயிர்களும் வாழும் வகையில் மண்ணை சரி செய்ய வேண்டும். இது நடக்கும் போது மென்மையான வேர் நுனி எளிதில் மண்ணுள் இறங்கும் வண்ணம் பொலப்பொலப்பானதாக மாறும். வேர் சுவாசிக்கத் தேவையான காற்று மண் துகள்களில் சிறிய துளைகளில் தங்கும். வேர் உறிஞ்ச தேவைப்படும் ஈரம் பெருந்துளைகளில் இருக்கும். ஈரமும் காற்றும் சம அளவில் அருகருகே இருக்கும். அரிய நிலையை மண் அடைந்தால் தான் மண் வளமானதற்கு அடையாளம், நலமானதற்கு அறிகுறி. அதற்குத் தாவரக் கழிவுகளையும், விலங்குக் கழிவுகளையும் மண்ணில் சேர்க்க வேண்டும். கெட்டுப்போன நிலத்தைப் பண்படுத்துவதற்கு நீண்டகாலம் ஆகும் என்பது பழைய நிலை. இப்போது கலவை எரு, மண்புழு எரு, உர உயிரிகள், பலபயிர் வளர்ப்பு, அமுதக் கரைசல் ஆகிய உத்திகள் மூலம் மண்ணை ஒரு வருடக காலத்திற்குள், இழப்புகள் இன்றி செய்ய முடியும் என்று தமிழகத்து விவசாயிகள் செய்து காட்டியுள்ளனர். வளமான, ஆரோக்கியமான மண்ணே வளமையான வேளாண்மைக்கு அடித்தளமாகும்.
2. அமுத கரைசல்
இன்று அமுத கரைசல் பற்றி யாராவது தெரியாமல் இருந்தால் தமிழகத்தில் செய்தி ஊடகங்களை கவனிக்காதவராக இருப்பார்கள். அமுத கரைசலை தெளிப்பான் கொண்டு தெளிக்கவும், பாயும் நீரில் கரைத்து விடவும் செய்யலாம்.
தேவைப்படும் பொருட்கள் :
பத்து லிட்டர் தண்ணீர் 2. ஒரு கிலோ சாணம் 3. ஒரு லிட்டர் மூத்திரம் 4.25 கிராம் நாட்டுச்சர்க்கரை.
ஒரு குடம் தண்ணீர் பிடிக்கும் பானை அல்லது குவளையில் மேலே சொன்னவைகளை இட்டு கலக்குதல் வேண்டும். ஒரு குச்சியால் வலப்புறம் 50 சுற்றும் இடப்புறம் 50 சுற்றும் சுற்ற வேண்டும். காலை, மதியம், மாலை என்று மூன்று வேளை கலக்க வேண்டும். ஒரு பகல் ஒரு இரவு ஆக, 24 மணிநேரத்தில் ஊட்டம் (டானிக்) தயாராகிவிடும்.
ஒரு லிட்டர் அமுத கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். இரண்டு நாட்களில் பயிர் பச்சை கொடுத்து வளரத் தொடங்கும். இன்னொரு வழியும் உண்டு. 200 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ சாணம், 20 லிட்டர் மூத்திரம், 2 கிலோ சர்க்கரை கலந்து மூன்று வேளை கலக்கி பாயும் நீருடன் கலந்து விட வேண்டும். வயல் பெரியதாக இருந்தால் ஒரே இடத்தில் வைப்பது போதாது. உள்ளே தள்ளித் தள்ளிக்கொண்டு போய் வைப்பது அவசியம். வயல் தூரத்தில் இருந்தால், தேனீர், காபி விற்பவர்கள் போல பைப்பு பொருந்திய குவளையில் எடுத்துச் சென்று வாய்மடையில் வைப்பது ஆக பொருந்தும். அமுத கரைசல் தயாரிப்பதும், பயன்படுத்துவதும் மிக எளிமையாக இருப்பதால் அன்றாடம் மாடு கொடுக்கும் கழிவுகளை அமுதமாக மாற்றி பயிர்களுக்கு அளிப்பது கடன்பட்ட உழவர்களை கரை சேர்க்கும் உத்தியாகும். பயிருக்கு மாட்டூட்டத்தையும். அமுதகரைசலையும் 10 நாட்கள் இடைவெளியில் தெளிப்பது செலவை குறைக்கும்.
3. மூலிகைப் பூச்சி விரட்டி
உழவர்கள் காலங்காலமாக கடைபிடித்து வந்த இயற்கை வழி சாகுபடி முறை பூச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. பச்சைப் புரட்சியின் சாதனையாக ரசாயன நஞ்சுகளைப் பயன்படுத்தி பூச்சிகளைக் கொல்ல தொடங்கியதும் உணவு பண்டம் அனைத்தும் நஞ்சானது மட்டுமின்றி, பூச்சிகளும் சாகத் தயாராக இல்லை. இயற்கை வழியில் உழவர்கள் மூலிகைப் பூச்சிவிரட்டி தயாரித்து, பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர்.
மூலிகை பூச்சி விரட்டி வேலை செய்யும் விதம் எப்படி?
மூலிகை பூச்சி விரட்டிகள் மூன்று வகையான இலைகளைக் கொண்டு தயாரிக்கப்டுகிறது. ஒன்று, தொட்டால் வாசனையடிக்கக் கூடிய செடிகள், இரண்டு தின்றால் கசக்கக் கூடிய செடிகள், ஒடித்தால் பால் வரக்கூடிய செடிகள் எடுத்துக்காட்டாக ஆடாதொடை, ஆடுதீண்டாபாளை, ஊமத்தை, எருக்கு, தும்பை, துளசி, அத்தி, சோற்றுக் கற்றாழை, பெரண்டை, பீநாரி, பப்பாளி, சீதா, புங்கன், நொச்சி, வேம்பு, தழுதாளை, காட்டாமணக்கு, வேலிப்பருத்தி, வரிக்குமுட்டி, உண்ணிமுள் செடி, நித்தியகல்யாணி, உரக்கொளறை (கிளைரிசிடியா). இவற்றில் அடையாளம் தெரியாதவை இருந்தால் கவலைப்பட தேவையில்லை. தேவை நான்கு ஐந்து செடிகள் மட்டுமே. அவசியம் நெய்வேலி காட்டாமணக்கு செடி பயன்படுத்த வேண்டும்.
ஒரு சாக்கு இலைகளை கொண்டு வந்து உரலில் இடித்து மண் தொட்டி அல்லது சிமெண்ட் தொட்டியையும் பயன்படுத்தலாம். பானைக்குள் இருக்கும் மூலிகை சட்னி மூழ்கும் அளவுக்கு ஆடு அல்லது மாட்டுச் சிறுநீரை ஊற்றி நிரப்பவும்.
மேலே குறிப்பிட்ட கலவை பத்து நாட்களில் மூலிகைக் கரைசலில் இருந்து தாங்க முடியாத அளவுக்கு நெடி வரக்கூடும். பூச்சி விரட்டி தயாராகி விட்டதற்கு இதுவே அடையாளம். ஒரு லிட்டர் பூச்சி விரட்டியுடன் பத்து லிட்டர் தண்ணீர் கலந்து பயிர் மீது தெளிக்க வேண்டும்.
மூலிகை பூச்சி விரட்டி செயல்படும் விதம்.
பூச்சிகள் எண்ணிக்கையில் மிகுந்தவை. ஆனால் உயிரினங்களில் இது சிற்றினம். இவை இயல்புத் தூண்டலால் குறிப்பிட்ட செடிகளில் இலையையோ, காயையோ தின்று உயிர் வாழ்கின்றன. இதற்காக இவை இலைகளில் தொட்டணர்ந்தே செடியை இனம் காணுகின்றன. பல வகை மணம் கொண்ட மூலிகைகளில் தயாரிக்கப்பட்ட பூச்சி விரட்டி பயிர்களின் வாசனையை மாற்றி விடுகிறது. இதனால் தாய்ப்பூச்சி பயிரின் மீது அமர்ந்து முட்டையிடுவது தவிர்க்கப்படுகிறது.
மேலும் தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள்
எல்லா பூச்சிகளும் பயிர்களின் விரோதிகள் அல்ல. பூச்சிகளை உண்ணும் தட்டான், பொறிவண்டு, மூக்கு வண்டு, சிலந்தி, கண்ணாடி சிறகி போன்றவை இருக்கவே செய்கின்றன. இத்தகைய நல்ல பூச்சி நண்பர்களை அடையாளம் கண்டு வைத்திருப்பது மிகவும் அவசியம். பூச்சிகளை பார்த்தவுடன் நஞ்சு தெளிப்பது கூடாது. பூச்சிகள் வந்த பின்பு தான் அவைகளை உண்ணும் இரையுண்ணிகள் நமது நிலத்திற்கு வரும். குறிப்பாக நூறுக்கும் மேற்பட்ட பறவைகள் பயிர் செடிகளை உண்ணும் பூச்சிகளை பிடித்து உண்ணுகின்றன. குச்சிகள் அல்லது தென்னை ஓலையின் அடிமட்டையைப் பயிர் நடுவே நட்டு வைத்தால் பறவைகள் அதில் வந்து அமர்ந்து பூச்சியை பிடித்து உண்ணும். சென்டிப் பூ போன்ற செடிகளை பயிர்களின் ஊடே நடவு செய்வதன் மூலம் தீய பூச்சியை விரட்டலாம். ஆமணக்கு, வெள்ளரி, தட்டை பயிறு போன்ற செடிகளை நிலத்தின் விளிம்பின் நான்கு திசையிலும் பயிர் செய்ய வேண்டும். இது பூச்சிகளைக் கவர்ந்து இழுத்து முக்கிய பயிர்களை காக்கிறது. தொடர்ந்து இயற்கை வழி வேளாண்மைக்கு மாறும் உழவர்கள் நான்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மூலிகை பூச்சி விரட்டிகள் கூடத் தெளிக்க தேவையிருக்காது.
கால்நடைகளில் மாட்டூட்டம்
ஆடு, மாடு, கோழி, நாய் என வளர்ப்பு விலங்குகள் அனைத்திலும் மாட்டூட்டத்தை பயன்படுத்தி நல்ல பலனை எட்டியிருக்கிறார்கள். மாடுகளுக்கு மடிவீக்கம், காம்பின் சீழ் வடிதல் போன்ற நோய்களைக் குணபடுத்த நாளும் 300 மில்லி என்ற வீதத்தில் ஒரு வாரம் கொடுக்க வேண்டும். சினைப் பிடிக்காத ஆடு, பசுக்களுக்கு இதை கொடுத்து நல்ல பலனைடைய முடியும். ஆடுகளுக்கு கொடுக்கும் போது 150 மில்லி கொடுக்க வேண்டும். கோழிக்கு குடிநீரில் கலந்து விடுவதால் நோய் தொற்றுவதை தடுக்கலாம். தவிடு, மாட்டூட்டம், இரண்டையும் கலந்து பிசைந்து கொடுப்பதால் கோழிக்குஞ்சின் எடை விரைவாக கூடும். நாய்களுக்கு மூச்சுப் பை நோய், தோல் நோய்கள் எளிதில் குணமாகும். விலங்கினங்களுக்கு ஊட்டும் போது தண்ணீர் கலப்பது இல்லை.
4. மீன் அமிலம்
உழவர்கள் கண்டுபிடிப்பில் தனிச்சிறப்பு வாய்ந்த வளாச்சி ஊக்கி மீன் அமிலம். மலிவாக மீன் கிடைத்தாலோ அல்லது மீன் கழிவு கிடைத்தாலோ, அது கொண்டு மீன் அமிலம் தயாரிக்கலாம். மீன் அல்லது மீன் கழிவை சம அளவில் வெல்லத்துடன் கலந்து பிசைந்து பிளாஸ்டிக் பாத்திரத்தில் இட்டு மூடி வைக்க வேண்டும். 25 நாட்கள் கடந்த பிறகு, மீன் அமிலம் தயார் பயிரில் கை ஸ்பிரேயருக்கு 300 தண்ணீருடன் தெளிக்கும் போது பயிர் பச்சை நிறம் பெற்று வளருகிறது.
5. முட்டை ரசம்
இயற்கை வழி வேளாண்மையில் பயிர் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு பல உத்திகள் உள்ளன. அதில் ஒன்று முட்டை ரசம் தயாரிப்பு. கீழே குவிந்தும் மேலே விரிந்தும் உள்ள ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அதில் 21 முட்டைகளை மூன்று நான்கு அடுக்குகளாக அடுக்கவும். அதற்கு முட்டையின் குறுகலான முனையை கீழ்நோக்கி வைத்தால் பொருத்தமாக இருக்கும். எலுமிச்சை பழங்களை பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும். பாத்திரத்தில் அடுக்கிய முட்டைகள் மேல், 2 எலுமிச்சை பழ சாற்றுடன் 200 கிராம் வெல்லத்தை கரைத்து வெல்லக் கரைசலையும், முட்டைகள் மீது ஊற்றவும். பின்பு மூடி வைக்கவும்.
10 நாட்கள் சென்ற பின்பு, திறந்து பார்த்தால் முட்டை ஓடு கெட்டியாக இல்லாமல் கூழ்ம வடிவில் இருக்கும். அவற்றை கையால் பிசைந்து மேலும் 200 மில்லி வெல்லச்சாறு ஊற்றி மூடி வைக்கவும். முட்டை ரசம் தயாரிக்கத் தொடங்கியதில் இருந்து 20 நாட்களுக்குள் பிறகு, பயிரில் தெளிக்க வேண்டும். அற்காக முட்டை, எலுமிச்கை, வெல்லக் கலவையை பிசைந்து வடிகட்ட வேண்டும். எஞ்சியுள்ள கழிவை மீண்டும் சிறிதளவு எலுமிச்சைச் சாறும் வெல்லக் கரைசலும் கலந்து மூடி வைத்தால் மீண்டும் ஒரு முறை தெளிப்பதற்கு நமக்கு முட்டை ரசம் கிடைக்கும்.
6. பாழ்நிலத்தை புதுப்பிக்கும் பலபயிர் சாகுபடி
ரசாயன உரம், ரசாயன பூச்சிக்கொல்லி ஆகியவற்றை தொடர்ந்து நிலத்தில் இட்டதால் உழவன் வறுமைப்பட்டான். நிலம் வலுவிழந்து, இப்போது மாற்று வழி நோக்கி உழவர் சிந்தனை செல்கிறது. சில நேரத்தில் இயற்கை வழி முறை நல்லதுதான். ஆனாலும் பழைய விளைச்சலை மீண்டும் எடுக்க குறைந்தது ஐந்து வருடமாவது வாங்கலாம். இப்படி செல்பவர்கள் இயற்கை வழி வேளாண்மையால் நாட்டு மக்களின் வறுமையை ஒழிக்க முடியாது என்று சொல்பவர்களை விடவும் தீங்கு செய்கிறார்கள்.
உரச் செடிகளை வளர்த்து தழை உரமாகப் பயன்படுத்துவது பற்றி கூறியிருந்தோம். இப்படி சிலவகைக் செடிகளை நிலத்திற்கு அளித்து எருவாக்கும் போது சில வகை ஊட்டங்களையே மண்ணில் சேர்க்க முடியும். நில வளத்தை முழுமையாக்க இது போதாது. பல வகை விதைகளையும் விதைத்து, வளர்த்து நிலத்தில் சேர்க்கும் போது பல வகை ஊட்டங்கள் மண்ணில் சேர்கிறது, வளம் கூடுகிறது. இதை இயற்கை விவசாயிகள் தமது நேரடி அனுபவத்தின் மூலம் உணர்ந்துள்ளனர்.
பல பயிர் விதைப்பு என்பது தானியங்கள், பயறு வகைகள், பசுந்தாள் உரச்செடிகள், எண்ணெய் வித்துக்கள், வாசனைப் பியர்கள் ஆகிய ஐந்து வகை பயிர்களை வகைக்கு 4 வீதம் விதைத்து 60-70 நாட்கள் வளர்த்து மடக்கி உழுது மண்ணில் சேர்க்கும் முறையாகும். இப்பயிர்களின் இலைகள், தண்டு, வேர்களில் உள்ள பல வகை நுண் ஊட்டங்களில் மண்ணில் சேர்ந்து மண்ணை வளம் செய்வதுடன் இவைகளே மக்கி எருவாகி நுண்ணுயிர்களுக்கு உணவாகின்றன
பல பயிர் வதைகள்
தானிய விதைகள்சோளம் – 500 கிராம், கம்பு – 100 கிராம், தினை – 200 கிராம், சாமை – 250 கிராம், வரகு – 300 கிராம், குதிரை வாலி – 250 கிராம், பனிவரகு – 200 கிராம் போன்றவற்றில் ஏதேனும் நான்குபயிறு வகைபாசிப்பயிறு – 2 கிலோ , உளுந்து – 2 கிலோ, கொள்ளு – 1 கிலோ, தட்டைப் பயிறு – 2 கிலோ, துவரை – 1 கிலோ, போன்றவற்றில் ஏதேனும் நான்கு.எண்ணெய் வித்துக்கள்எள் – 250 கிராம், நிலக்கடலை – 2 கிலோ , ஆமணக்கு – 3 கிலோ, சூரியகாந்தி – 1 கிலோ, துவரை – 1 கிலோ, சோயா – 2 கிலோ போன்றவற்றில் ஏதேனும் நான்கு.வாசனைப் பொருட்கள்சோம்பு – 100 கிராம், கடுகு -100 கிராம், வெந்தையம் -100 கிராம், மல்லி – 1 கிலோஉரச்செடிகள்சணப்பு – 2 கிலோ, தக்கை பூண்டு – 1 கிலோ, கொழுஞ்சி – 1 கிலோ, அகத்தி – 1 கிலோ, செம்பை – 1 கிலோ. போன்றவற்றில் ஏதேனும் நான்கு.
மேற்கண்ட வகைகளில் ஒவ்வொன்றிலும் ஏதேனும் நான்கு விதைகள் வீதம் ஏக்கருக்கு 20 கிலோ தேவைப்படும். இந்த 20 வகை விதைகளையும் சேர்த்து ( 20 கிலோ இருந்தாலும் தவறல்ல) நெல் சாகுபடியின் போது முன்கூட்டியே விதைத்து 45 நாட்கள் வளர விட்டு மடக்கி உழுது விட்டு தொழி செய்து 10 நாட்கள் அழுகவிட்டு நாற்று நடவு செய்யலாம்.
கரும்பு, மஞ்சள், வாழை போன்றவற்றில் முதல் களை எடுக்கும்போது விதைத்து மூலப்பயிர்களின் இலைகளை மறைக்கும் வண்ணம் வளர்த்தவுடன் அறுத்து / பிடுங்கி 1 சால் விட்டு சாலில் மூடாக்காக இடலாம். தண்டுப்புழு போன்றவைகளை வளரும் பல பயிர்கள் ஈர்த்து முக்கிய பயிருக்கு நேரும் சேதத்தைக் குறைக்கிறது.
7. ஊட்டமேற்றிய தொழு உரம்
தேவைப்படும் பொருட்கள்
சாணம் : 100 கிலோ
கோமியம் : 25 லிட்டர்
புளித்த தயிர் : 5 லிட்டர்
நீர் : 100 லிட்டர்
கலந்த கலவை.
செய்முறை : 4 அடி அகலம், தேவைக்கேற்ற நீளம், அரை அடி உயரத்திற்கு மக்கக்கூடிய அனைத்து பொருட்களையும் பரப்பிவிட்டு, 10 லிட்டர் கலவையுடன் 100 லிட்டர் நீர் சேர்த்து சலிக்கத் தெளிக்கவும். பின் சாணம் 3 அங்குல உயரத்திற்கு பரப்பிவிட்டு, இலை தழை, குச்சிகளைப் போட்டு அதன் மேல் 10% கரைசலை தெளிக்கவும்.
இதைப் போல் தொடர்ந்து 4 அடி உயரத்திற்கு அடுக்குகளை இட்டுப் பின்னர் சேறு கொண்டு நன்கு பூசி மெழுகிவிடவும். 100 நாட்கள் கழித்து எடுத்துப் பயன்படுத்தவும்.
8. தேங்காய் பால் + மோர்
இவைகளை சம அளவில் சேர்த்து சட்டி / பானையில் இட்டு குப்பைமேடு (அ) குழியில் பாதுகாப்பாக புதைத்து வைக்க வேண்டும். ஒரு வார காலத்தில் நொதித்து வளர்ச்சி ஊக்கியாக மாறும். நொதித்த ஒரு லிட்டர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு சுமார் 5 லிட்டர் தேங்காய்ப் பால், 5 லிட்டர் மோர் தேவைப்படும்.
9. பயிர் பாதுகாப்பு
நமது முன்னோர்கள் எலி, பறவை, ஆடு, மாடு போன்றவற்றிலிருந்து காப்பதையே பயிர் பாதுகாப்பாக செய்தனர். கடந்த 40 ஆண்டுகளாக பூச்சி, பொருட்களில் இருந்து காப்பதற்காக இரசாயன நஞ்சுகளைப் பயன்படுத்துகிறோம். வேளாண்மையில் இரசாயன வகை பயிர் பாதுகாப்பு வந்தபோது விவசாயிக்கு சுமை கூடியது. செலவு கூடியது.
பயிர்களைத் தின்னும் பூச்சிகள் கூட மற்ற பூச்சிகளுக்கும், பறவைகளுக்கும் உணவாகின்றன. எனவே, எல்லாப் பூச்சிகளும் நன்மை செய்பவையே. பயிரைக் காப்பது தான் நமது நோக்கமே தவிர பூச்சிகளை கொல்வதல்ல. தாய்ப்பூச்சிகள் பயிர்களில் முட்டையிடாமலும், உட்காராமலும் தடுப்பதும், இவைகளின் புழுக்கள் நம் பயிரை மேய்வதைத் தடுப்பதுமே நம் வேலை
பயிர் பாதுகாப்பு முறைகள்
1.மூலிகைப் பூச்சிவிரட்டி
2. உயிர் வழிக்கட்டுபாடு
3. பயிர் வழிக்கட்டுப்பாடு
4. ஈர்ப்புப் பயிர்கள்
5. ஒருங்கிணைந்த பயிர்க் காப்பு
மூலிகை பூச்சி விரட்டி
ஆடா தோடா, ஆடு தின்னா பாளை, ஊமத்தை, எருக்கு, துத்தி, உண்ணிச்செடி, காட்டாமணக்கு, நெய்வேலி, காட்டாமணக்க, வேம்பு, எட்டி, சீதா இலை. சீதாகொட்டை, அரளி விதை, (வெப்) பாலை, பீநாரி சங்கு, கற்றாழை, நொச்சி, தும்பை, துளசி, நாய்த்துளசி, சீமைக் கருவேல் என பல தாவரங்களில் பூச்சிகள் விரட்டும் தன்மை கொண்டவை.
ஆடு, மாடு தின்ன மறுக்கும் அனைத்து செடி, கொடிகளும் பூச்சிகள் விரட்டும் தன்மை உள்ளவை. உடைத்தால் பால் வரும் தன்மை உள்ள செடி, கொடிகளுக்கும் இதே தன்மை உண்டு.
இவைகளில் ஏதேனும் 5 வகைத் தாழைகளை வகைக்கு 2 கிலோ வீதம் எடுத்து இடித்து பானையில் இட வேண்டும். இடித்த இலை தழைகள் முழுகும் அளவு மாட்டு/ எருமை மூத்திரம் ஊற்ற வேண்டும். பிறகு கழுத்து வரைக்கும் தண்ணீர் ஊற்ற வேண்டும். 1 வாரம் – 10 நாட்கள் வைத்திருந்தால் ஊறல் நன்கு நொதித்து மூலிகைச் சாறு தெளிப்பதற்கு தயாராகும். 1 லிட்டர் சாறுக்கு 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்க வேண்டும். நன்கு ஒட்ட காதி சோப்பு வில்லை 2ஐக் கரைத்தல் நல்லது.
உடனடியாக தெளிக்க இடித்த இலை தழைகளை நிறைய தண்ணீர் விட்டு காய்ச்சவும். தண்ணீர் பாதியாக சுண்டும் போது எடுத்து வடிகட்டி 1 லிட்டர் கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்கலாம். காதி சோப்பு வில்லை 2ஐச் சோ்த்தல் நல்லது.
பூச்சி விரட்டிகளை தேவைப்படும் பொழுதோ, பூச்சி வரும் காலத்திற்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பயன்படுத்தலாம்.
10. உயிரியல் கட்டுப்பாடு
உலகில் ஒவ்வொரு வகை உயிரினத்தையும் வேறு ஒரு உயிரினம் கட்டுப்படுத்துகிறது. இந்த உயிரியல் அடிப்படை உண்மையைக் கொண்டு சேதம் செய்யும் பூச்சிகளை அவைகளின் எதிர்ப் பூச்சிகள் கொண்டு கட்டுப்படுத்தும் முறையே உயிரியல் வழி பூச்சிக் கட்டுபாடு ஆகும். இதே அடிப்படையில் பயிர் நோய்கள் சிலவற்றையும் கட்டுப்படுத்தலாம்.
உயிரியல் பூச்சி கட்டுப்பாடு
எதிரி பூச்சி
கட்டுப்படுத்தும் பூச்சி
டிரைக்கோகிரம்மா கைலோனிஸ்கரும்பு – இளங்குருத்துப்புழு, இடைக்கணு புழு
நெல் – இலை சுருட்டுப் புழு
பருத்தி – இளஞ்சிவப்பு காய்புழு, புள்ளிக்காய் புழுடிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம்கரும்பு – நுனி குருத்துப்புழு
நெல் – குருத்துப்பூச்சிபிரகானிட்தென்னை – கருந்தலை புழுரெட் வீயூட் பக் (வண்டு)பல பயிர்களில் புழுக்களை அழிக்கும்.
நுண்ணுயிரிகள்
டிரைக்கோ டெர்மா விரிடி (பூசணம்) மற்றும் சூடோமோனாஸ் (பேக்டீரியம்) பருத்தி, நிலக்கடலை, எள், சூரியகாந்தி, பயறுகள், வாழை, மஞ்சள், இஞ்சி, தென்னை, நெல், கரும்பு, காய்கறிகள் ஆகியவற்றில் தோன்றும் வேர் அழுகல் கிழங்கழுகல், செவ்வழுகல் போன்ற பூசண நோய்கள் கட்டுப்படுத்தும் பயன்பாட்டு அளவு ஏக்கருக்கு 2-4 கிலோ வரை.
11. உயிரின வழிக் கட்டுப்பாடு
இயற்கையில் பாம்பு, ஆந்தை போன்றவை எலி பிடிக்கின்றன. சிலந்தி, தவளை, பல்லி, குருவிகள், காக்கை, மைனா போன்றவையும் பூச்சிகளைப் பிடித்து உண்ணுகின்றன. பறவைகள் வந்து போனால் வேறு கட்டுப்பாடு தேவைப்படாது.
12. பயிர் வழிக் கட்டுப்பாடு
சில செடிகள் தங்களது வேர்களில் சில வகை சுரப்புகளை வெளியேற்றுகின்றன. இச்சுரப்புகள் சில நோய் தரும் நுண்ணுயிர்களை கட்டுப்படுத்துகிறது. இந்த வகைத் தாவரங்களை நோய் வாய்ப்புள்ள பயிர்களுக்கு அருகில் வளர்க்கும் போது நோய் வருவதில்லை. எடுத்துக்காட்டாக சாமந்திப் பூச்செடி, தக்காளிச் செடி அருகிலும், வேர் அழுகல் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய பயிர்களுக்கு அருகிலும் வளர்க்கும் போது வேர் நோய்கள் வருவதில்லை. நோய் தரும் வேர்ப்புழுக்கள் எண்ணிக்கையை குறைக்கச் செய்கிறது.
ஈர்ப்புப் பயிர்கள்
சில செடிகள் பயிர்களை உண்ணும் பூச்சிகளை தன்னிடம் ஈர்த்துக் கொள்ளும். இவ்வகை செடிகளை பயிர்களை வயலில் வளர்க்கும் போது பயிர் உண்ணும் பூச்சிகளை தன்னிடம் ஈர்க்கும். விளை பயிர் காக்கப்படும். எ.கா.ஆமணக்கு, தட்டைப் பயிறு, கரும்பில் கம்பு, சோளம் குறுத்துப் புழுக்களை ஈர்க்கிறது.
முன்னோர்கள் ஒருபோதும் ஊரினப் பயிர்கள் வளர்த்ததில்லை. கலப்பு பயிர் முறையையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். இக்கலப்பு பயிர் முறை நோய்களைக் கட்டுப்படுத்தியது. ஈர்த்து அழிக்க உதவியது. மீண்டும் கலப்புப்பயிர் முறை நம் நிலத்தில் அறிமுகம் ஆகும் போது பயிர்ப் பாதுகாப்பு எளிதான ஒன்றாகும். மண் நலனும் மேம்படும்.
13. ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு உத்திகள்
1. பருவம் அறிந்து விதை விதைக்க வேண்டும்.
2. பயிர் சுழற்சி கடைபிடிக்க வேண்டும்.
3. கலப்புப் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.
4. அவ்வப்போது நிலத்தை தரிசு போட வேண்டும்.
5. பறவைகளை உள்ளே வரவழைக்க வேண்டும்.
6. விவசாயி வீட்டில் உள்ள விதைகளை விதைக்க வேண்டும்.
7. இயற்கை உயிர்க் கொல்லிகளை பயன்படுத்த வேண்டும்.
8. பூச்சிகளை கவரும் செடி கொடிகளை ஓரத்தில் வளர்க்க வேண்டும்.
9. மூலிகை பூச்சி விரட்டிகளை பயன்படுத்த வேண்டும்.