குறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் வழி!
Date October 1, 2015 Author By admin Category வேளாண் முறைகள்
குறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் வழி!
சம்பா நெல் சாகுபடியில் குறைந்த நீரைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவது குறித்து சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத் தொழில்நுட்ப வல்லுநர் ராஜ்கலா தெரிவித்துள்ள வழிமுறைகள்:
அரியலூர் மாவட்டத்தில் 23,122 ஹெக்டரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் நீர்ப் பற்றாக்குறையால் குறைந்த நீரைப் பயன்படுத்தி நெல் உற்பத்தியை அதிகரிக்கவும், நீர்த் தேவையைக் குறைக்கவும் புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், திருந்திய நெல் சாகுபடி முறை மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தொழில்நுட்பக் கோட்பாடுகளான தகுந்த உயர் விளைச்சல் ரகங்கள், சீரிய மேலாண்மை, சிறந்த நீர், களை நிர்வாகம் போன்ற காரணிகள் அதிக விளைச்சலுக்கு வழிவகுக்கும்.
செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் சம்பா நெல் சாகுபடி செய்யப்படுகிறது. 130 முதல் 135 நாட்கள் வயதுடைய நெல் ரகங்கள் இந்தப் பருவத்தில் சாகுபடிக்கு மிகவும் ஏற்றவை. உயர் விளைச்சல் அளிக்கும் ரகங்களான ஐ.ஆர். 20, பொன்னி, கோ 43, திருச்சி 1, அம்பாசமுத்திரம் 19, ஆடுதுறை 39, ஆடுதுறை 46, ஆடுதுறை 50, கோ. 50 ஆகியவற்றை இப்பருவத்தில் சாகுபடி செய்யலாம்.
ஒற்றை நாற்றாக ஒரு ஹெக்டர் நடவு செய்ய சுமார் 7- 8 கிலோ விதை போதுமானது. ஒற்றை நாற்று சரிவராத தருணத்தில் 2 நாற்றுகளாக நடவு செய்ய 12 முதல் 15 கிலோ விதை போதுமானது.
ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் சூடோமோனாஸ், புளுரசன்ஸ் ஒரு லிட்டர் நீரில் கரைத்து 10 மணி நேரம் ஊறவைத்து நீரை வடிகட்டி பிறகு விதைக்கலாம்.
இவ்வாறு ஊறவைத்த விதையை நனைந்த கோணிச் சாக்கில் கட்டி மூடி 24 மணி நேரம் இருட்டில் வைத்து முளைகட்டிய பிறகு விதைக்கலாம். 14 முதல் 18 நாட்கள் வயதுடைய நாற்றுகள் நடவு செய்ய ஏற்றவை. மேலும், வரிசைக்கு வரிசை 25 செ.மீ., பயிருக்கு பயிர் 25 செ.மீ என்ற அளவில் இடைவெளி அளிப்பதால் பயிருக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துகள், சூரிய ஒளி, காற்றோட்டம் போன்றவை தேவையான அளவில் கிடைக்க ஏதுவாகின்றன.
மேலும், ஒற்றை நாற்று நடவு செய்வதால் நெல்லில் விதைத் தேவையும் கணிசமாகக் குறைகிறது. இவ்வகையான ஒற்றை நாற்றை நடவு செய்ய 14 முதல் 18 நாட்கள் வயதுடைய நாற்றுகளைத் தேர்வுசெய்து நடவேண்டும்.
பொதுவாக நெல்லுக்கு அதிக நீர் தேவைப்பட்டாலும், அது ஒரு நீர்த்தாவரம் அல்ல. எனவே, குறைந்த நீரைக் கொண்டு அதிக விளைச்சல் பெறும் வழிமுறைகளைக் கையாண்டு நீர்த் தேவையைக் குறைக்கலாம்.
நெற்பயிருக்கு சாதாரணமாக காய்ச்சலும், பாய்ச்சலுமாக நீர்ப் பாசனம் செய்யலாம். அதாவது மண் மற்றும் நீர்க்கட்டுதல் நடவு செய்த முதல் 10 நாட்களில் மிக முக்கியம். பிறகு, சுமார் 1- 2 செ.மீ. அளவுக்கு நீர்ப் பாசனம் செய்து வயலில் சிறு கீறல்கள் ஏற்படும் தருணம், அடுத்த முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். அதன்பிறகு கதிர் உருவாகும் தருணத்தில் இருந்து அறுவடை நிலை வரை 4 முதல் 5 செ.மீ. அளவுக்கு நீர்ப் பாய்ச்சி கட்டிய நீர் மறைந்த உடன் மீண்டும் நீர்க்கட்ட வேண்டும். இவ்வாறு செய்வதால் பயிருக்கு அளிக்கும் நீரின் அளவு சுமார் 20 முதல் 30% சேமிக்கப்படுகிறது.
மேலும், நெல்லுக்கு காய்ச்சலும், பாய்ச்சலுமாக நீர் நிர்வாகம் செய்வதால், வயலில் களைகள் அதிகம் வளர வாய்ப்புள்ளது. எனவே, சரியான களைக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். சதுர நடவு முறையில் நடவு செய்யப்படுவதால் கோனோ வீடர் என்ற உருளைக் களை எடுப்பானைப் பயன்படுத்தி களைக் கட்டுப்பாடு செய்யலாம்.
இவ்வாறு களை எடுப்பது நட்ட 10 நாட்களிலேயே செய்யப்பட வேண்டும். 10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் 2 அல்லது 3 முறைகள் உருளை களை எடுப்பானைப் பயன்படுத்தி களைகளை வயலிலேயே மடக்கிவிட வேண்டும். பிறகு களைக்கருவி கொண்டு 20 ஆம் நாள் ஒரு களை எடுப்பதால் களைகளை நன்கு கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது.
பயிர் நன்கு வளர தகுந்த ஊட்டச்சத்துகள் பெறுவதற்கு கோடையில் சணப்பை, தக்கைப் பூண்டு பயிரிட்டு பின் மடக்கி உழுவதால், மண்ணில் கரிமப் பொருட்களின் அளவு அதிகரிப்பதுடன் பயிருக்கு வேண்டிய தழைச்சத்தும் கிடைக்கிறது. இதனுடன், ஹெக்டருக்கு 326 கிலோ யூரியா, 375 கிலோ சூப்பர் பாஸ்பேட், 100 கிலோ பொட்டாஷ் பரிந்துரை செய்யப்படுகின்றன.
எனவே, விவசாயிகள் தகுந்த ரகங்களைத் தேர்வு செய்தல், சரியான பயிர் இடைவெளி, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம், காய்ச்சலும், பாய்ச்சலுமாக நீர் மேலாண்மை, கோனோ வீடர் கொண்டு களை நிர்வாகம் போன்ற தொழில்நுட்பங்களை மேற்கொள்வதால் நெல் சாகுபடியில் அதிக விளைச்சலைப் பெறலாம்.
நன்றி
தினமணி
Tags: குறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் வழி!