ஒட்டு ரக பப்பாளி சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு
கள்ளக்குறிச்சி அடுத்த கச்சிராயபாளையம் பகுதி விவசாயிகள் ஒட்டு ரக பப்பாளி சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருவதால், சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.
கச்சிராயபாளையம் சுற்றியுள்ள கிராமங்கள் நிறைந்துள்ளதால், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. இப்பதியில் கிணற்று பாசனத்தின் மூலம் நெல், கரும்பு, மக்கா சோளம், வாழை, பருத்தி போன்ற பயிர்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது இப்பகுதி விவசாயிகள் மாற்று பயிர்களாக வசம்பு, கோலியாசிஸ் போன்ற மருத்துவ பயிர்களும், திசுவளர்ப்பு வாழை, செவ்வாழை, பேரீட்சை, பப்பாளி போன்ற பழ வகை பயிர்களை சாகுபடி செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பழ வகை மர சாகுபடியில் பப்பாளி சாகுபடி குறைந்த செலவில் அதிக லாபம் தருவதால், இதில் விவசாயிகள் அதிகளவில் தீவிரம் காட்டி வருகின்றனர். களிமண் தவிர பிற வகை மண்ணில் பப்பாளி மரங்கள் செழித்து வளரும் தன்மை கொண்டது.
மருத்துவ குணமிக்க பப்பாளி பழங்கள், உடலில் உள்ள ரத்தத்தை சுத்தபடுத்தவும், உடலை மெருகேற்றவும் பயன்படுவதால், பப்பாளி பழங்களுக்கு பொதுமக்களிடையே கிராக்கி அதிகரித்துள்ளது. “ரெட் லேடி’ எனும் ஒட்டு வகை பப்பாளி செடியில் ஆண்டுக்கு 150 முதல் 200 கிலோ வரை காய்கள் மகசூல் கிடைக்கிறது. சுவை மிகுதியாக உள்ளதாலும், இந்த வகை பழ மர சாகுபடி விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஒரு ஏக்கர் நிலத்தில் 1000 கன்றுகள் நடவு செய்ய 200 கிராம் விதை போதுமானது. வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. மேலும் உர மேலாண்மை மிகவும் குறைவதால் சாகுபடி செலவும் மிகவும் குறைவாகவே உள்ளது.
பப்பாளி செடிகள் நடவு செய்த ஆறு மாதங்களில் 5 அடி உயரம் வரை மரங்கள் வளர்கின்றன. சாகுபடி செய்த ஏழு அல்லது 8வது மாதம் முதல் காய்கள் அறுவடைக்கு தயாராகின்றது.
ஒட்டு ரக மரங்களில் காய்க்கும் காய்கள், 2 கிலோ எடை இருப்பதால் தினமும் 300 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. பப்பாளி பழம் ஒரு கிலோ 12 முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால், கூடுதல் லாபம் கிடைக்கிறது.
பப்பாளி செடியின் 30 மாத ஆயுட்காலத்தில் 200 டன் வரை மகசூல் கிடைக்கிறது. உள்ளூர் சந்தைகளிலும் சென்னை, பெங்களூரூ போன்ற பெரு நகரங்களிலும் பப்பாளி பழங்களுக்கு சந்தை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.குறைந்த செலவில் அதிக லாபம் கிடைப்பதால் பப்பாளி சாகுபடி, கச்சிராயபாளையம் பகுதி விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள் ளதுடன், சாகுபடி பரப்பளவும் அதிகரித்துள்ளது
நன்றி
தினமலர்