டெல்டா பாசனப் பகுதிகளிலும் திருச்சி போன்ற சில பகுதி களிலும் காணப்படும் மிதமான உவர் நிலத்திலும் சாகுபடி செய்ய ஏற்ற நெல் ரகம், திருப்பதி சாரம். திருச்சி மாவட்டத்தில் பரவலாகச் சாகுபடி செய்யப் பட்டுவந்த இந்த ரகத்தை, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தற்போது விவசாயிகள் சாகுபடி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
பெண்கள் விரும்புவது
சுமார் நான்கடி உயரம் வரை வளரும் தன்மை கொண்ட இந்த நெல் ரகம், 140 நாள் வயதுடையது. இயல்பான மஞ்சள் நிற நெல்லும் வெள்ளை அரிசியும் கொண்டது. நடுத்தர ரகமாக இருப்பதால் இல்லத்தரசிகள் விரும்பும் வண்ணம் சீக்கிரம் வேகக்கூடியது. சோறு வெண்மையாக இருப்பதோடு, உணவுக்கு ஏற்ற ரகமாகவும் உள்ளது.
சுவை கூட்டும்
நமது முன்னோர் வெளியூர் பயணம் செய்யும்போது கட்டுச்சோறு எடுத்துச் செல்வது வழக்கம். இதில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு கிடையாது. அவரவர் வீட்டில் சமைத்து எடுத்துச் செல்வார்கள். அந்த வகையில், திருப்பதி சாரம் அரிசியில் புளி சாதம் தயாரித்து வாழை இலையில் கட்டிவைத்துவிட்டால், வாரக் கணக்கில் சாதம் கெடாமல் இருக்கும். அப்படித்தான் அப்போது பயன்படுத்திவந்திருக்கிறார்கள். எனவே, கட்டுச்சோற்றுக்குத் திருப்பதி சாரம் நெல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது. திருப்பதி செல்லும்போது இந்த அரிசியில் கட்டுச்சோறு எடுத்துச் செல்லப்பட்டதாலும், இப்பெயர் வந்திருக் கலாம்.
தனிச் சுவை
ஏக்கருக்கு 22 மூட்டை மகசூல் கிடைக்கும். நிலத்தின் வளத்துக்கு ஏற்ப மகசூல் தரும். நடவு முறைக்கும், நேரடி விதைப்புக்கும் ஏற்றது. தற்போது உணவகங்களில் பரிமாறப்படும் ருசியின் காரணமாகப் பலரும் உணவகங்களை நாடுகின்றனர், கட்டுச்சோற்றை மறந்து விட்டனர். தற்போது அலுவலகத்துக்குப் பலரும் கலவை சாதம் எடுத்துச் செல்ல ஆரம்பித்துள்ளனர். அதற்கு இந்த அரிசி ஏற்றது.
திருப்பதி சாரத்தில் மருத்துவக் குணம் அதிகம் இல்லாவிட்டாலும், கட்டுச்சோறு தயார் செய்யும்போது பயன்படுத்தும் உப உணவுப் பொருட்கள் மருத்துவக் குணம் கொண்டவையாக உள்ளன.
– நெல் ஜெயராமன், தொடர்புக்கு: 09443320954