புதிய தொழில் நுட்பத்தில் வெள்ளரி சாகுபடி
நத்தம் பகுதியில் வீரிய ஒட்டு (ஜெர்கின்ஸ்) ரக வெள்ளரியை புதிய தொழில் நுட்ப முறையில் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறுகின்றனர். நத்தம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஒத்தக்கடை, அய்யனார்புரம், மணக்காட்டூர், செந்துறை, மேற்கிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீரிய ஒட்டுரக வெள்ளரி அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த வகை வெள்ளரி பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பெரும்பாலும் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களே விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்களை வழங்கி கொள்முதலும் செய்கின்றன.
வெள்ளரி கொள்முதல் விலையில் இடுபொருட்களின் செலவை கழித்து விடுகின்றனர். ஆரம்பத்தில் இந்த வகை வெள்ளரி தரையில் கொடியாக படரவிட்டு சாகுபடி செய்யப்பட்டது. கீழே படரவிட்டு சாகுபடி செய்யும் முறையில் காய்களில் அழுகல் நோய் தாக்கம், இலைகளுக்குள் மறைந்து காய்கள் முற்றி வீணாகும் நிலை இருந்தது.
தற்போது வயலில் பாத்திகளின் அமைப்பிற்கு ஏற்றவாறு நீளவாக்கில் கம்பிகளை கட்டி பந்தல் போன்ற அமைப்பு ஏற்பத்தப்படுகிறது. முளைத்து வரும் பயிர்களின் நுனியை சிறு சணல்களை கொண்டு கம்பிகளில் தூக்கி கட்டவேண்டும். கொடி வளர, வளர கம்பியில் தூக்கி கட்டி வர வேண்டும்.
பயிர் செய்து 15 நாட்களில் காய்க்க துவங்கிவிடும். இதன் மூலம் பயிர்கள் நல்ல காற்றோட்டத்துடன் செழித்து அதிக காய்கள் பிடிக்கிறது. இலைகளுக்குள் மறையாமல் கண்களுக்கு தெரிகிறது. இதனால் காய்கள் தப்புவதற்கு வாய்ப்பு குறைவு. ஒத்தக்கடையை சேர்ந்த விவசாயி முருகன் கூறுகையில், “”இம்முறையில் அதிக பரப்பில் பயிர் சாகுபடி செய்யமுடிகிறது. காய்கள் பறிப்பதற்கும் எளிதாக உள்ளது. அதிக மகசூல் கிடைக்கிறது” என கூறினார்.
நன்றி
தினமலர்