விவசாயத்தை அழிக்க பார்க்கும் காஸ் பைப் லைன் திட்டம்
- அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் கூட விவசாயிகளை உயரிய இடத்தில் வைத்துள்ளது. அவர்களின் தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கனரக தொழில், தொழிற்சாலைகள், சுரங்கத் தொழில் உள்பட பல தொழில்களில் கொடி கட்டி பறந்தாலும் விவசாயிகள், விவசாயம் இல்லாத நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாகவே கருத முடியாது. அதிக மக்கள் தொகை ெகாண்ட நாடான சீனா, பெரிய பெரிய தொழில் நகரங்களை விவசாய நிலங்களை அழித்துக் கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் கட்டும் அணைகள் கூட விவசாயத்தை சார்ந்தே கட்டப்படுகிறது. அதன் உபரியாகதான் மின்சாரம், நீர்வழிபோக்குவரத்து போன்றவற்றிற்கு பயன்படுத்துகின்றனர். காய்ந்த பூமியான இஸ்ரேல் கூட அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த நாட்டில் விவசாய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.
மாநில மக்களை அழிக்கும் முயற்சி
மூன்றுபோகம் விளையும் நிலங்களை விவசாயிகளிடம் இருந்து மத்திய, மாநில அரசுகள் அடித்து பிடுங்குகிறது. நெடுஞ்சாலை, ரயில்பாதை, பொருளாதார மண்டலங்கள், கலெக்டர் அலுவலகம், ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளிட்டவைக்கு நிலம் தேவைப்படுகிறது. லட்சக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்கள், அரசின் புறம்போக்கு நிலங்கள் தமிழகத்தில் உள்ளன. ஆனால், அவற்றை கண்டுகொள்ளாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் கூறும் யோசனையை கேட்டு சொந்த மாநில மக்களையே அழிக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் நீர்வழித் தடங்களை ரியல் எஸ்டேட் உள்ளிட்ட நில வியாபாரிகளுக்கு விற்றுவிட்டு.. விவசாயத்துக்கு வரும் நீரை முதலில் நிறுத்துகின்றனர். பின்னர், விளைச்சல், பாசனத்துக்கு நீர் இல்லாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர். குறிப்பாக, தெலங்கானா, பஞ்சாப், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை என்பது சர்வசாதாரணமாக நடந்து கொண்டு இருக்கிறது.
நிலம் எடுப்பு துறை
தமிழக அரசு உள்ளிட்ட பல்வறு மாநில அரசுகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் ரயில்வே, தொழில் நகரங்கள், தொழிற்பேட்டைகள், சிறப்பு பொருளாதார மண்டலம், நெடுஞ்சாலைகள், பாலங்கள் அமைக்க தேவையான நிலத்தை விவசாயிகளிடம் இருந்து பிடுங்கி கொடுப்பதற்கு என்றே ஒரு துறையை உருவாக்கி வைத்துள்ளது. அந்த துறைக்கு நிலம் எடுப்பு துறை. அதற்கு தனியாக மாவட்ட அளவில் வருவாய் அலுவலர், மண்டல அளவில் ஒரு அலுவலர், தாலுகா அளவில் ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வேலையே விவசாயிகளின், அப்பாவிகளின் நிலத்தை பிடுங்குவதுதான். இதற்கும் மக்கள் வரிப்பணத்தில் இருந்துதான் பணம் சம்பளமாக கொடுக்கப்படுகிறது.
வாழ்வாதாரம் இழந்த விவசாயிகள்
காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தாழிற்சாலை, சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் மத்திய அரசுக்கு தேவையான பாதுகாப்பு படைப்பிரிவுகளுக்கு நிலங்களை வாரி வாரி வழங்கினர். நிலம் கொடுக்க விவசாயி எதிர்த்தபோது.. உன் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்று சொல்லி ஏமாற்றினர். 10 பேரை வைத்து முதலாளியாக விவசாயம் பார்த்த விவசாயி.. நிலம் கொடுத்த நிறுவனத்தில் புல் வெட்டும் வேலையும், மேஜை துடைக்கும் வேலையும் மட்டுமே பார்க்க முடிந்தது. படிப்பை காரணம் காட்டி சிலருக்கு வேலையே தர மறுத்தும் விட்டது. தற்போது அரசுக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து செக்யூரிட்டிகளாகவும், தினக்கூலிகளாகவும் இன்றும் தினம் தினம் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள்.
தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்த பிறகு, அங்கு அதிகாரி வேலைக்கு பதில் தினக்கூலி வேலைக்கு செல்லும் அவலமே இன்னும் மறையாத நிலையில், காஸ் நிறுவனம் ஒன்று வட மாவட்ட விவசாயிகளை மண்ணோடு மண்ணாக்கும் திட்டத்தை செயல்படுத்த துடித்துக் ெகாண்டு இருக்கிறது.
விவசாய நிலத்தை சடலம் புதைக்கும் இடமாக மாற்றும் இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று வட மாவட்ட விவசாயிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் சென்னை டூ மதுரை வரை லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயனற்று போகும்.
இவற்றில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் மூன்றுபோகம் விளையக்கூடியது. கரும்பு, சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்கள் கொடுக்கும் பணத்தில் வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருப்பவர்கள். இவர்கள் வாழ்க்கையில்தான் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மண்ணை அள்ளிபோட்டு அவர்களை மண்ணோடு மண்ணாக புதைக்கும் திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்காக பல நூறுகோடிகளை கொட்டி இந்த திட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இதற்கான முதல்கட்ட நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பைப்லைன் காஸ்
சென்னைக்கு அருகாமையில் உள்ள திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரில் இருந்து மத்திய அரசின் இந்தியன் ஆயில் நிறுவனம் மூலம் ராட்சத குழாய் அமைத்து மதுரைக்கு காஸ் இணைப்பு கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.அதன்படி எண்ணூரில் இருந்து வாயலூர், நெய்தவாயல், தேவதானம், காணியம்பாக்கம், வன்னிப்பாக்கம், சிறுவாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக செங்கல்பட்டு வரை செயல்படுத்ப்படுகிறது. அங்கிருந்து, புதுச்சேரி, திருச்சி வழியாக மதுரைக்கு குழாய் மூலம் காஸ் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர். இதற்காக ராட்சத குழாய்கள் பதிக்கப்படவுள்ளது.
615 கி.மீ. தூரம்
எண்ணூர் முதல் மதுரை வரை 615 கி.மீட்டர் தூரம் வரை காஸ் பைப்லைன் மூலம் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். அதுவும் விவசாய நிலங்களை குறிவைத்து இந்த திட்டத்தை செயல்படுத்த ஐஓசி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. காரணம், அந்த நிறுவனத்தின் திட்ட அறிக்கை மற்றும் சர்வே முடிவுகள், வட மாவட்ட விவசாயிகளை பிச்சைக்காரர்களாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று விவசாய சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன. இந்த திட்டம் 615 கிலோ மீட்டர், இதில் கொடுமை என்னவென்றால் குழாய் அமைக்கும் பணிகள் அனைத்தும் விவசாய நிலத்தில் தான் நடக்கவுள்ளது. இதற்காக விவசாயிகளின் லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த மத்திய அரசின் இந்தியன் ஆயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள சுமார் 20 ஆயிரம் விவசாயிகள் நடுத்தெருவுக்கு வரும் அபாயம் உள்ளது.
எதிர்க்கும் மக்கள்
திருவள்ளூர் முதல் மதுரை வரையில் இந்த காஸ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பல லட்சம் ஏக்கர் நிலத்தை காஸ் நிறுவனம் கையகப்படுத்தும் பணியை துவக்கி உள்ளது. முதல்கட்டமாக திருட்டுத்தனமாக எடுத்த சர்வேயின்படி, விவசாயிகளின் நிலங்களை அவர்களுக்கு தெரியாமலேயே கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு துவக்கி உள்ளது. இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டபோதுதான்.. தங்கள் நிலத்தை அரசு கையகப்படுத்த துடிக்கிறது. தங்களை பிச்சைக்காரர்களாக நினைக்கிறது என்பதே தெரிய வந்தது. இந்த நிலம் கையகப்படுத்தும் பணி நடந்துவிட்டால் மூன்று போகம் விளையும் நன்செய், புன்செய் நிலங்கள் பாழாகும். விவசாயிகள் தினக்கூலிகளாக 50க்கும் 100க்கும் தொழிற்சாலைகளுக்கு சென்று கைகட்டி, வரிசையில் நின்று கூலி பணத்தை வாங்கும் சூழல் ஏற்படும்.
காஸ் நிறுவனம் கையகப்படுத்தும் நிலம் எதற்கும் பயனில்லாமல் போகும். அந்த இடத்துக்குள் விவசாயிகளை நுழைய அனுமதிக்காது. நிலங்களின் நடுவே தண்ணீர் செல்லவும், உழவு வேலை பார்க்கவும் தடை விதிக்கும். இப்படி பல தடைகளை இந்த திட்டம் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதின் மூலம் பல லட்சம் ஏக்கர் நிலம் பாழாகும். உணவு உற்பத்தி, பணப் பயிர் உற்பத்தி கடுமையாக பாதிக்கும். சென்னைக்கு காய்கறி, கீரை, மலர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அள்ளி கொடுத்து வரும் இந்த நிலங்கள் பயனற்று போனால் வெங்காயம் போன்று பல காய்கறிகள் பல மடங்கு விலை உயரும் அபாயம் உள்ளது.
எனவே, காஸ் பைப் லைனை விவசாய நிலங்கள் வழியாக இல்லாமல் மாற்று திட்டம் மூலம் செயல்படுத்தினால் பல லட்சம் ஏக்கர் நிலம் பயன்பெறும். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாவட்ட விவசாயிகள் பயன்பெறுவார்கள். காஸ் நிறுவனத்துக்கும் திட்ட மதிப்பீட்டில் செலவு குறையும். மாற்று திட்டத்தை செயல்படுத்த காஸ் நிறுவனம் மறுத்தால், தமிழகம் காணாத அளவு மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்து செல்லவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
அதிர்ச்சியில் விவசாயிகள்
எண்ணூர் டூ மதுரை காஸ் பைப்லைன் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் இதற்கான அறிவிப்பை நோட்டீசாக அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் விநியோகிக்கும் பணி நடந்து வருகிறது. மத்திய அரசின் இந்த முடிவு விவசாயிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீஞ்சூர் அருகே உள்ள வன்னிப்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் நோட்டீஸ் விநியோகித்தார். ஆனால் விவசாய நிலங்களை ஆர்ஜிதம் செய்தால் எங்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமே சீர்குலைந்துவிடும் என விவசாயிகள் நோட்டீசை வாங்க மறுத்துவிட்டனர். இதனால் மற்ற விவசாயிகளுக்கும் எப்படி நோட்டீஸ் விநியோகிப்பது என்று அதிகாரிகள் விழித்துக் கொண்டிருக்கின்றனர்.
சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக திட்டம்
கெயில் தனியார் நிறுவனம் மூலம் கேரளாவிலிருந்து ஈரோடு, கோவை மாவட்டம் வழியாக கர்நாடகா வரை குழாய் மூலம் காஸ் கொண்டு செல்லும் முயற்சி நடந்தது. இதையடுத்து விவசாயிகளின் கடும் எதிர்ப்புக்கு நடுவில் தற்போது அத்திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
வேறு என்ன வழி?
மத்திய அரசின் இந்தியன் ஆயில் நிறுவனம் காஸ் குழாய் அமைப்பது அவசியமானது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதற்காக ஏழை விவசாயிகள் வயிற்றில் அடித்து தான் குழாய் பதிக்க வேண்டுமா என்பதே சமூகஆர்வலர்களின் கேள்வி. உதாரணமாக, இத்திட்டத்தின்படி விவசாயிகள் பாதிக்காத வகையில் வேறு தரிசு நிலம் வழியாகவோ அல்லது நெடுஞ்சாலை வழியாகவோ, நீர்நிலைகள் வழியாகவோ, கடல்மார்க்கமாகவோ குழாய்கள் அமைக்க எத்தனையோ வழிகள் இருக்கும்பட்சத்தில் ஏன் விவசாய நிலத்தை குறிவைக்கின்றனர் என்பதுதான் விடை தெரியாத புதிராக உள்ளது. தற்போதுள்ள பல நவீனதொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீர்நிலைகள் மூலமாக திட்டமிட்டு குழாய் அமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:்தினகரன்
Comments are currently closed.