தானியங்களை பாதுகாக்கும் குதிர்கள்
தானியங்களை பாதுகாக்கும் குதிர்கள்
தானியங்களை பாதுகாக்கும் குதிர்களை பயன்படுத்தும் பழக்கம் திண்டுக்கல் மாவட்ட கிராம மக்களிடம் இன்றும் உள்ளது.
பழங்காலங்களில் நெல், கம்பு, கேழ்வரவு, குதிரைவாலி, வரகு போன்ற தானியங்கள் அதிகளவில் விளைந்தன. தானியங்களை சேமிக்கவும், மழை, வெயில், பூச்சிகளில் இருந்து பாதுகாக்கவும் குதிர்களை பயன்படுத்தினர்.
இதில் பல நாட்கள் வரை தானியங்கள் பாதுகாக்கப்படும். மேல் பகுதியில் காற்று செல்லும் துளை இருக்கும். சில குதிர்களின் அடித்தளம், தரையில் இருந்து 3 அடி உயரத்தில் இருக்கும்.விளையும் தானியங்களின் அளவுக்கு ஏற்ப குதிர்களை அமைத்துள்ளனர். அதிகபட்சம் 8 அடி உயரம் இருக்கும். தானியங்களை தனித்தனியாக கொட்டி வைக்க 4 அறைகள் உள்ளன. தானியங்களை மேல் பகுதியில் கொட்டி, கீழ் பகுதியில் எடுப்பர்; இதற்காக வழிகள் உள்ளன.
இன்றும் திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, பாறைப்பட்டி, எட்டமநாயக்கன்பட்டி, பொட்டி செட்டிப்பட்டி, ராஜதாணிக்கோட்டை உள்ளிட்ட கிராமமக்கள் பாரம்பரியம் மாறாமல் குதிர்களை பயன்படுத்தி வருகின்றனர்.
காந்திகிராம பல்கலை தமிழ்ப் பேராசிரியர் முத்தையா கூறியதாவது:குதிர்களை குழுமை, தானியக்குழி என்றும் அழைப்பர். குதிர்களை நொச்சி தழைகளை பயன்படுத்தி செம்மண்ணால் பூசியுள்ளனர். தற்போது வெளிப்புறத்தில் சிமென்ட் பூச்சும் பூசியுள்ளனர்.
தானியங்களின் மேற்பகுதியில் வேப்ப இலையையும், கீழ் பகுதியில் நொச்சி தழையையும் வைத்துள்ளனர். இதனால் பூச்சிகள் வராது. இந்த குதிர்கள் உணவுக்கு உத்தரவாதம் தருகின்றன. பழங்காலத்தில் இருந்து சேமிக்கும் பழக்கம் தமிழர்களிடம் இருந்துள்ளது. இதனால் வறட்சி காலங்களில் கூட உணவுக்காக அவர்கள் கஷ்டப்படவில்லை. தானியங்கள் இருப்பில் இருப்பதால் நிம்மதியாக இருந்தனர், என்றார்.
நன்றி: தினமலர்