உயிர் எதிர் கொல்லி சூடோமோனாஸ் பயன்பாடு
இரசாயன கொல்லிகளை உபயோகிப்பதால் சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதோடு, இயற்கையில் வாழும் பல நன்மை செய்யும் பூச்சிகளும் அழிக்கப்படுகின்றன. மேலும் இம்மருந்துகள் விட்டுச்செல்லும் எஞ்சிய நச்சு மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது. எனவே பயிர் பாதுகாப்பானது, இயற்கைச் சூழலை மாசுபடுத்தாமலும், பூச்சி மற்றும் நோய்களில் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தாமலும், நன்மை தரும் பூச்சி மற்றும் நுண்ணுயிரிகளை அழிக்காமலும் இருக்க வேண்டும். ஆனால் உயிர் எதிர்கொல்லிகளை பயன்படுத்துவதால் அத்தகைய சூழ்நிலை சீர்கேடு ஏற்படுவதில்லை. அதுமட்டுமன்றி பூச்சி மற்றும் நோய் காரணிகளில் எதிர்ப்பு சக்தியும் தோன்றுவதில்லை. அத்துடன் இவை பயிர் வளர்ச்சியையும் அதிகரித்து விளைச்சலையும் அதிகரிக்கிறது.
சூடோமோனாஸை பயன்படுத்தும் முறைகள்
நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
விதை நேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் கலவை என்ற விகிதத்தில் கலந்து தேவையான அளவு தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்த பின்னர் தண்ணீரை வடிக்க வேண்டும்.வடித்த தண்ணீரை நாற்றங்காலில் ஊற்றி விடவும்.
நாற்று நனைத்தல்
சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 2.5 கிலோவை 25 சதுர மீட்டர் நாற்றங்காலில் உள்ள தண்ணீரில் கலந்து பின்னர் ஒரு ஏக்டருக்கு தேவையான நாற்றுகளை குறைந்தது அரை மணிநேரம் ஊற வைத்து நட வேண்டும். நீண்ட நேரம் ஊற வைப்பதால் அதன் செயல் திறன் கூடுகிறது.
வயலில் இடுத்தல்
நாற்று நட்ட 30 நாட்கள் கழித்து ஒரு எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து இட வேண்டும்.
தெளிப்பு முறை
சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 0.5% கரைசலை நடவுக்கு பின்னர் 45 நாட்கள் கழித்து நோய்களின் தீவிரத்தைப் பொறுத்து 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவும்.
கேழ்வரகு – குலை நோய்
விதை நேர்த்தி
சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 0.2 % கரைசலை நோயின் தீவிரத்தைப் பொறுத்து 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவும்.
பயிர் பாதுகாப்பு
நிலக்கடலை, எள், சூரியகாந்தி, பருத்தி மற்றும் பயறு வகைப் பயிர்கள் வேரழுகல் மற்றும் வாடல் நோய்.
விதை நேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன் நிலத்தில் இடவேண்டும்.
நன்றி
தமிழ்நாடுவேளாண்மைப் பல்கலைக்கழகம்