மல்பெரி செடியை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
ஈரோடு மாவட்டத்தில் பட்டுப்புழு வளர்ப்பு தொழிலானது மிகவும் பிரசித்தி பெற்ற தொழிலாக விளங்கி வருகிறது. இதில் புழுக்களின் உணவிற்காக மல்பெரி செடி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மல்பெரி செடியின் வளர்ச்சி மற்றும் இலைகளின் தரத்தை குறைப்பதில் பூச்சிகளின் தாக்குதல் காணப்படுகிறது. இதனால் பட்டுப்புழு தொழிலில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மல்பெரி செடியினை தாக்கும் பூச்சிகளை கண்டறிந்து தொடக்க நிலையிலேயே கட்டுப்படுத்த வேண்டும்.
மாவுப்பூச்சி
மாவுப்பூச்சி, இலை பிணைக்கும் புழு, இலைப்பேன் மற்றும் கரையான் போன்றவை மல்பெரி செடியை தாக்கும் பூச்சிகளில் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
இதில் மாவுப்பூச்சி வெள்ளையாக பஞ்சுபோல் படர்ந்த முட்டைகளுடன் காணப்படும். இவை கூட்டமாக இலையின் நரம்புகள், இளம் தண்டுகளில் பரவி சேதாரத்தை ஏற்படுத்தும். இது இலையின் சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் சிறுத்து மஞ்சள் நிறமாகி பின்னர் உதிர்ந்துவிடுகின்றன. பூச்சிகள் வெளியேற்றும் திரவத்தை உண்ண கறுப்பு எறும்புகள் கூட்டமாக செல்வதை காணலாம். இந்த பூச்சிகளின் உடலில் மெல்லிய மாவு போன்ற படலம் சூழ்ந்திருக்கும். இத்தகைய தாக்குதலை ஏற்படுத்தக்கூடிய பூச்சிகளை கட்டுப்படுத்த அசிரோபேகஸ் பப்பாயே என்னும் ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 500 வீதம் பாதிக்கப்பட்ட வயல்களில் வெளியிட வேண்டும். களைச்செடிகளையும் இந்த பூச்சிகள் தாக்கக்கூடியன. எனவே மல்பெரி சாகுபடி செய்யும் பகுதிகளில் உள்ள களைகளை அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும். மேலும் தாக்குதல் அதிகரிக்கும் பட்சத்தில் புரபனோபாஸ் அல்லது புப்ரோபெசின் என்னும் பூச்சிக்கொல்லியை 1 லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
இலை பிணைக்கும் புழு
மல்பெரி செடியின் இலைகளின் நுனிப்பகுதியில் இளம் புழுக்கள் இருந்து கொண்டு இலையின் திசுக்களை உண்ணும். வளர்ந்த புழுக்கள் வேகமாக இலைகளை உண்பதுடன் அதன் கழிவுகளை வெளியேற்றுவதால் அவை பட்டுப்புழு உண்பதற்கு உதவாது. இதனால் இலைகள் மற்றும் செடிகளின் வளர்ச்சி குன்றி காணப்படும்.
இத்தகைய புழுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்த டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் என்னும் முட்டை ஒட்டுண்ணியை ஒரு ஹெக்டருக்கு 5 அட்டை வீதம் கட்ட வேண்டும். மேலும் தாக்குதல் தீவிரமடையும் பட்சத்தில் டைக்குளோர்வாஸ் என்னும் பூச்சிக்கொல்லி 1 மில்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பூச்சிக்கொல்லியை பயன்படுத்தினால் 20 நாட்கள் கழித்தே பட்டுப்புழு உணவிற்கு இலைகளை அறுவடை செய்ய வேண்டும்.
இலைப்பேன்
இலைப்பேன் பூச்சிகள், இலைகளின் அடிப்பரப்பில் இருந்து கொண்டு இலைகளை சுரண்டி அதன் சாற்றினை உறிஞ்சிவிடுகின்றன. தாக்கப்பட்ட இலைகளில் வெண்ணிற திட்டுகள் தோன்றி இலைகள் பழுப்பு நிறமாக மாறிவிடுகின்றன. தாக்குதல் தீவிரமடையும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட இலைகள் வாடியும், இலைகள் சிறுத்தும் வெளிறிய கோடுகளுடன் காணப்படும்.
இவ்வகை பூச்சிகளை கட்டுப்படுத்த கைத்தெளிப்பானில் தண்ணீரை கொண்டு தெளிப்பதன் மூலம் பேன்கள் நீருடன் அடித்து செல்லப்படுகின்றன. மேலும் ஏக்கருக்கு 20 மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளை வைப்பதன் மூலம் கவர்ந்து அழிக்கலாம். அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 3 மில்லி வீதம் வேப்பெண்ணையை கலந்து தெளிப்பதன் மூலமும் இலைப்பேனை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு தெளிக்கப்பட்டால் 15 நாட்கள் சென்ற பின்பு இலைகளை அறுவடை செய்ய வேண்டும்.
கரையான்
பொதுவாக செம்மண் மற்றும் மணற்பாங்கான பகுதிகளில் நடவு செய்யப்பட்ட மல்பெரி செடிகளில் கரையான்களின் தாக்குதலானது அதிகமாக காணப்படும். கரையானை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு 5 மில்லி வேப்பெண்ணை வீதம் கலந்து மல்பெரி செடிகளின் வேர் மற்றும் தண்டுப்பகுதிகளில் தெளிக்க வேண்டும். மேலும் குளோர்பைரிபாஸ் என்னும் பூச்சிக்கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 மில்லி வீதம் கலந்து கரையான் புற்றுகள் இருக்கும் இடத்தில் ஊற்றுவதன் மூலமும் கரையானை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு செய்து வந்தால் மல்பெரி செடியை தாக்கும் பூச்சிகளை முற்றிலும் கட்டுப்படுத்தலாம். மேலும் பட்டுப்புழுவிற்கு தேவையான தரமான இலைகளை உற்பத்தி செய்து வருமானத்தை அதிகரிக்கலாம்.
இந்த தகவலை ஈரோடு மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையத்தின் (மைராடா) உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் ச.சரவணகுமார் தெரிவித்து உள்ளார்.