கால்நடைகளை தாக்கும் கோமாரி நோயின் அறிகுறிகள்
கால்நடைகளை தாக்கும் கோமாரி நோயின் அறிகுறிகள்
கோமாரி நோய் என்பது“கால் மற்றும் வாய் நோய்” அல்லது “காணை” என்று அழைக்கப்படுகிறது. கோமாரி நோய் இந்திய நாட்டில் கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதார மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்த நோய் மாடுகளை அதிகம் பாதித்தாலும், எருமைகள், செம்மறி ஆடு, வெள்ளாடு, பன்றி ஆகிய உயிரினங்களையும் தாக்குகிறது. இரட்டை குளம்புகள் கொண்ட கால்நடை இனங்கள் கோமாரி நோயால் பாதிக்கப்படுகிறது.
கோமாரி நோய்
கோமாரி நோய் தாக்கினால் கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறைகிறது. எருதுகளில் வேலை செய்யும் திறன் குறைகிறது. கறவை மாடுகள் சினை பிடிப்பது தடைபடும். இளம் கன்றுகளில் இறப்பு ஏற்படுகிறது. கோமாரி நோயினால் உயிரிழப்புகள் குறைவாக இருந்தாலும், விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு அதிகம் ஏற்படுகிறது.
பொதுவாக குளிர்காலத்தில் கோமாரி நோய் கால்நடைகளுக்கு பரவுகிறது. ஏற்கனவே நோய் பாதித்த இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகளினால் கோமாரி நோய் பரவுகிறது. சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு, கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல், நோய் பாதித்த கால்நடைகளை பிரித்து பராமரிக்காமல் இருத்தல் போன்ற காரணங்களினால் கோமாரி நோய் அதிகமாக பரவுகிறது.
மேலும், கோமாரி நோயின் வைரஸ் ஒரு மாட்டில் இருந்து மற்றொரு மாட்டிற்கு நேரடியாக தொற்றும் தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட மாடுகளின் தீவனம், தீவன தட்டுகள், தண்ணீர், வைக்கோல் ஆகியவை மூலம் பரவுகிறது. இந்த வைரஸ் மாட்டு கொட்டகையில் 15 நாட்கள் வரை உயிருடன் இருக்கும். மேலும் இது காற்றில் விரைவாக பரவும் தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றினாலும் கோமாரி நோய் கால்நடைகளுக்கு பரவுகிறது.
அறிகுறிகள்
கால்நடைகளுக்கு காய்ச்சல் ஏற்படும். தீவனம் உட்கொள்ளாது மந்த நிலைமையில் இருக்கும். மாடுகள் அசை போடாமல் இருக்கும். அதிகமான தண்ணீர் தாகம் எடுக்கும். பால் உற்பத்தி குறைந்து காணப்படும். வாயில் இருந்து நுரை கலந்த உமிழ்நீர் நூல் போல ஒழுகிய வண்ணம் இருக்கும். வாயின் உட்பகுதியில் நாக்கு மற்றும் கால் குளம்புகளின் நடுப்பகுதி, மடி ஆகிய இடங்களில் கொப்புளங்கள் தோன்றி பின்னர் அவை உடைந்து ரணமாக மாறும். சினை மாடுகளில் கருச்சிதைவு ஏற்படுதல் போன்றன கோமாரி நோய் தாக்குதலுக்கான அறிகுறிகள் ஆகும்.
பாதிக்கப்பட்ட மாடுகளில் மலட்டுத்தன்மையும், ரத்தசோகையும் ஏற்படலாம். நோய் தாக்கப்பட்ட பசுக்களில் கன்றுகளை பால் குடிக்க விடக்கூடாது. அவ்வாறு பால் குடித்தால் கன்று உடனடியாக இறந்துவிடும்.
சிகிச்சை முறை
நோய் தாக்கப்பட்ட கால்நடைகளின் வாயில் புண்கள் இருப்பதால் தீவனம் சரியாக உட்கொள்ள முடியாது. எனவே மாடுகளுக்கு பசுந்தீவனம் மற்றும் காய்ச்சிய கஞ்சி அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட புண்களை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் (4 சதவீதம்) கொண்டு கழுவ வேண்டும்.
போரோ கிளிசரின் கலவையை புண்களின் மீது தடவலாம். வேப்ப எண்ணையை கொண்டு கால் புண்களுக்கு சிகிச்சை அளிக்கலாம். நோய் அதிகமாக தாக்கப்பட்ட மாடுகளுக்கு கால்நடை டாக்டர் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும்.
கோமாரி நோய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டவுடன் அருகில் உள்ள கால்நடை டாக்டர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும். நோய் பாதித்த கால்நடைகளை உடனடியாக அகற்றி தனி இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். அவற்றை மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. கால்நடைகளின் கொட்டகையை கிருமி நாசினியான 4 சதவீதம் சோடியம் கார்ப்பனேட் (ஒரு வாளி தண்ணீரில் ஒரு கைப்பிடி சலவை சோடா) கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
தடுப்பூசி முகாம்
நோய் உள்ள பகுதியில் இருந்து புதிதாக கால்நடைகளை வாங்கக்கூடாது. சுண்ணாம்புத்தூளை மாட்டு கொட்டகையை சுற்றி தூவ வேண்டும். நோய் உள்ள பகுதிகளில் கால்நடை மற்றும் மனித நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
கோமாரி நோயை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஆண்டுதோறும் 2 தடவை தடுப்பூசி போடப்படுகிறது.
Ithai thaduka iyarkai vaithiyam ullatha?
நமக்கு தெரிந்த வகையில் இல்லை மேலும் நோய் வரும் முன் தடுப்பு ஊசி போடுவது சிறந்து
வந்த பிறகு சில இயற்கை முறை உள்ளது அதை நமது இணையத்தை பார்க்க
மேலும் விபரம் பெற நமது கால்நடை மருத்துவர் திரு .பிரவிண்குமார் Bvs AH அவர்களை தொடர்பு கொள்ளவும் செல் 9445287021(மதியம் 1முதல் மாலை 6வரை மட்டும்)
நன்றி