நெல் சாகுபடி – அங்கக மேலாண்மை – விவசாயியின் அனுபவம்
நெல் சாகுபடி – அங்கக மேலாண்மை – விவசாயியின் அனுபவம்
எந்த வகை வேளாண்மைக்கும் ஆதாரமாக இருப்பது மண்வளம் தான். மண் வளமாக இருக்க மண்புழுக்களை மட்டுமல்ல கண்ணுக்குத் தெரியாத பலகோடிக்கணக்கான நுண்ணுயிர்களும் தேவை.
பல தானிய விதைப்பு என்ற முறையை விவசாயி செயல்படுத்தி பல தானியங்களான கம்பு, கேழ்வரகு, சாமை, சோளம் இவற்றில் தலா 2 கிலோவும், (எண்ணெய் வித்துக்களில் எள், கடலை, கடுகு, ஆமணக்கு இவற்றில்) தயாரிக்கலாம். சணப்பு, தக்கைப்பூண்டு, கொளுஞ்சி இவைகளில் தலா 2 கிலோவும், வாசனை பயிர்களான சீரகம், வெந்தயம் இவற்றில் தலா 1 கிலோ வீதம் கலந்து விதைத்து தண்ணீர் பாய்ச்சி வளர்க்க வேண்டும். பூக்கத் துவங்கும் போது தண்ணீர் தேக்கி வைத்து டிராக்டர் கொண்டு உழுது மடக்கி தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில் 4 முதல் 6 நாட்கள் வைத்தால் தழைகள் மக்கி உரமாக மாறும். பின்னர் வழக்கமாக நாற்று நடுதல் வேலைகளை செய்யலாம்.
நெல் நாற்று நட்ட 20 மற்றும் 40ம் நாட்களில் இருமுறை பஞ்சகவ்யம் அல்லது ஜீவாம்ருதம் தெளிக்கிறார் விவசாயி. பயிர் வளர்ச்சி குறைவாக இருந்தால் மட்டும் பயிர் ஊக்கியாக தேபோர் கரைசலை தெளிப்பதுண்டு. இது தவிர, முன் தடுப்பாக பூச்சி விரட்டி பயன்படுத்த வேண்டும். எருக்கு, ஆவாரை, அரளி, துத்தி, நொச்சி, பப்பாளி போன்றவற்றால் தலா 2 கிலோ வீதம் துண்டுகளாக நறுக்கி 10 லிட்டர் பசு கோமியத்தில் ஊறப்போட்டு ஒரு பிளாஸ்டிக் வாளியில் இட்டு, வெயில் படாமல் வைக்க வேண்டும். 7வது நாள் நன்கு வடிகட்டி 1 லிட்டர் கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளித்தார்.
மேலும் விபரங்களுக்கு கோமதி நாயகம், 18, உச்சி மாகாளியம்மன் வீதி, புளியங்குடி, திருநெல்வேலி மாவட்டம். தொலைபேசி : 0463 – 623 3235.
பறவைகள் அங்கக வேளாண்மைக்கு ஓர் உற்ற துணை:
ஏறக்குறைய 60 வகையான நீர்பறவைகள் இந்திய துணைக்கண்டத்தில் உள்ள நெல் வயல்களில் கணக்கெடுக்கப் பட்டுள்ளது. இப்பறவைகள் நெற்பயிரைத் தாக்கி அழிக்கும் பூச்சிகளை பெருமளவு உணவாக உட்கொள்கின்றன. புளுமட்டிஸ் என்னும் பறவை ஓராண்டில் சுமார் 5000 இனம் புழுக்களையும், 5 இலட்சம் இலைக் கொசுக்களையும் உணவாக உட்கொள்கின்றது. பறவைகளின் எச்சத்தில் அதிக அளவில் தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்கள் உள்ளன.
எனவே பறவைகளின் எச்சங்களை அங்கக உரமாகப் பயன்படுத்தி வேளாண்மை செய்வதால் அங்கக விவசாயிகள் பயனடைவர். விவசாயிகள் பறவைகள் கூடும் மரங்களை பாதுகாத்திட வேண்டும். பறவைகளைப் பாதுகாப்பதில் பயிர் சத்துடன் பூச்சித் தொல்லையும் குறைப்பதற்கு வழி வகுக்கும். தகவல் : ம.மகேந்திரன், சலீம்அலி, பறவை மற்றும் இயற்கை வரலாற்று மையம், கோயம்புத்தூர் – 641 108.