அதிக விளைச்சல் தரும் கத்தரிக்காய் ரகங்கள்
இந்தியாவை தாயகமாக கொண்ட காய்கறி ரகம் கத்தரிக்காய். இது வறட்சியை நன்கு தாங்கி வளரக்கூடியது. சுமார் 100 கிராம் எடை கொண்ட கத்தரிக்காயில் குறைவான கலோரி, புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின்-சி காணப்படுகிறது.
கத்தரிக்காய் ரகங்கள்
அதிக விளைச்சல் தரும் கத்தரிக்காய் ரகங்களில் கோ-2, பி.கே.எம்.-1, பி.எல்.ஆர்.-1, பி.பி.ஐ.-1 அண்ணாமலை கத்தரி போன்றவை உள்ளன. இதேபோல் கோ.பி.எச்.-1 மற்றும் 2 ஆகிய வீரிய ஒட்டு ரகங்கள் துல்லிய பண்ணை முறையில் சாகுபடி செய்ய ஏற்றது. ஒரு ஏக்கரில் பண்ணை முறையில் சாகுபடி செய்ய சாதாரண ரகம் எனில் 400 கிராம் விதையும், வீரிய ஒட்டு ரகம் எனில் 200 கிராம் விதையும் தேவைப்படும். மேட்டுப்பாத்திகள் அமைத்து நாற்றுகள் உற்பத்தி செய்ய சுமார் 225 சதுர மீட்டர் நாற்றங்கால் தேவைப்படுகிறது. விதைகளை அசோஸ்பைரில்லம் என்ற நுண்ணுயிரியுடன் ஒரு கிலோ விதைக்கு 200 கிராம் என்ற அளவில் கலந்து நிழலில் காயவைத்து பின்னர் விதைக்க வேண்டும்.
குழித்தட்டுகளில் நாற்றுகள் உற்பத்தி செய்யும் போது எக்டேருக்கு 300 கிலோ மக்கிய தென்னை நார்க்கழிவு உரம் இட வேண்டும். இத்துடன் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 1 கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் உரத்தை கலந்து வளர்ச்சி ஊடகமாக பயன்படுத்த வேண்டும். சுமார் 15 முதல் 18 நாட்கள் கழித்து நீரில் கரையும் உரத்துடன் நுண்ணூட்டச்சத்து 5 கிராம் என்ற அளவில் கலந்து நாற்றுகள் நனையும்படி ஊற்ற வேண்டும். இவ்வாறு வளர்க்கப்பட்ட நாற்றுகள், 25 முதல் 30 நாட்களில் நடவுக்கு தயாராகிவிடும். குழித்தட்டு முறையில் ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் 18 ஆயிரத்து 700 நாற்றுகளை உற்பத்தி செய்ய 200 குழித்தட்டுகள் தேவைப்படும்.
சொட்டு நீர் பாசனம்
சொட்டு நீர் பாசன முறையில் பயிரிடும் போது, குழாய்களை 1.5 மீட்டர் இடைவெளியில் அமைத்து, கிளை குழாய்களில் நீர்சொட்டுவான்களை 60 செ.மீ. இடைவெளியில் இருக்குமாறு அமைக்க வேண்டும். நடவு செய்யும் போது செடிக்கு செடி 60 செ.மீ., வரிசைக்கு வரிசை 75 செ.மீ., பாருக்கு 90 செ.மீ. என்ற அளவில் ஒரு பாரில் 2 வரிசை இருக்குமாறு நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். பின்னர் 40 நாட்கள் வயதுள்ள நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். அதைத்தொடர்ந்து 25 டன் தொழு உரத்தை அடியுரமாக கடைசி உழவின் போது இட வேண்டும். அதனுடன் 75 சதவீதம் மணிச்சத்தை உரமாக இட வேண்டும். நடவு வயலில் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிரியை எக்டேருக்கு 2 கிலோ என்ற அளவிலும் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.
கத்தரிக்காய் சாகுபடியின் போது எபிலாக்னோ வண்டுகள் இலைகளை சேதப்படுத்தி விளைச்சல் இழப்பை ஏற்படுத்துகின்றன. இதை கட்டுப்படுத்த வண்டுகளின் முட்டைகளை சேகரித்து அழித்துவிட வேண்டும். மேலும் குயினால்பாஸ் மருந்தை 1.7 மி.லி. அல்லது டிரைஅசோபாஸ் மருந்தை 2.5 மி.லி. என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். தண்டு, காய் துளைப்பான் பூச்சிகள் தாக்கப்பட்ட செடிகளின் தண்டுப்பகுதி, புழு தாக்கிய காய்களை நீக்கி அழித்து விட வேண்டும். வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவீதம் அல்லது குயினால்பாஸ் மருந்தை 2.5 மி.லி. என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து நடவு செய்த ஒரு மாதத்தில் இருந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
விதை நேர்த்தி செய்தல்
நாற்றழுகல் நோயானது முளைக்கும் விதைகளை தாக்கி, மண்ணிற்கு மேல் செடி வளர்வதற்குள் அழுகிவிடுகின்றன. பின்னர் வளர்ந்த இளம் நாற்றுகளை தண்டு பாகத்தில் தாக்கும் போது செடிகள் அழுகி, ஒடிந்து இறந்து விடுகின்றன. இதை உயிர் பூசணக்கொல்லிகளான டிரைகோடெர்மா விரிடி மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவிலோ சூடோமோனஸ் புளோரசன்ஸ் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவிலோ கலந்து விதைநேர்த்தி செய்து கட்டுப்படுத்தலாம். வாடல் நோய் தாக்கப்பட்ட செடிகளின் இலைகள் வாடத்தொடங்கும். ஒரு வாரத்தில் செடி முழுவதும் வாடிவிடும். வேர்கள் அழுகிவிடும். மண் அருகில் உள்ள பூசணத்தின் நூல் இலைகள் வெண்மையாக காணப்படும்.
இதற்கு விதைகளை சூடோமோனஸ் பிளோரசன்ஸ் மருந்து ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவிலோ, டிரைக்கோடெர்மா விரிடி மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவிலோ கலந்து விதைநேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும். கத்தரிக்காய்கள் அறுவடைக்கு தயாரானவுடன் 2 நாட்களுக்கு ஒரு முறை என்ற விகிதத்தில் அறுவடை செய்ய வேண்டும். எக்டேருக்கு 50 – 70 டன் காய்கள் அதிக விளைச்சல் கிடைக்கும். பின்னர் காய்களை தரம் பிரித்து விற்பனைக்கு அனுப்பினால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.